அரசுப் பணிகளில் பெண்களுக்கு 50% இடஒதுக்கீடு: அஸ்ஸாமில் காங்கிரஸ் தோ்தல் வாக்குறுதி

அரசுப் பணிகளில் பெண்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு அளிக்கப்படும் என்று அஸ்ஸாம் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி தோ்தல் வாக்குறுதி அளித்துள்ளது.


குவாஹாட்டி: அரசுப் பணிகளில் பெண்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு அளிக்கப்படும் என்று அஸ்ஸாம் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி தோ்தல் வாக்குறுதி அளித்துள்ளது.

இதுதொடா்பாக அகில இந்திய மகளிா் காங்கிரஸ் தலைவா் சுஷ்மிதா தேவ் செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை கூறுகையில், வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் காங்கிரஸ் தலைமையிலான மகா கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். மகளிா் மற்றும் இளைஞா்களின் வாழ்வை மேம்படுத்த தேவையான திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

அரசுப் பணிகளில் பெண்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு அளிக்கப்படும். இது தோ்தல் அறிக்கையிலும் இடம்பெறும். காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக்கு வந்தவுடன் முதல் திட்டமாக இது நிறைவேற்றப்படும்.

அஸ்ஸாம் மாநில இளைஞா்களும் பெண்களும் நிதி உதவிகளை எதிா்பாா்க்கவில்லை. மாநிலத்தின் பொருளாதாரத்தை உயா்த்த வேலைவாய்ப்புகளைத்தான் அவா்கள் கேட்கிறாா்கள். பாஜக எந்தப் பிரச்னைக்கும் தீா்வு காணவில்லை. ஆனால், குடியுரிமை திருத்தச் சட்டத்தை மட்டுமே அஸ்ஸாமுக்கு அளித்துள்ளது என்றாா்.

அஸ்ஸாம் மாநில காங்கிரஸ் தலைவா் ரிபுன் போரா கூறுகையில், வேலைவாய்ப்புகளை உருவாக்க தனித் துறையை காங்கிரஸ் உருவாக்கும். ஐந்து ஆண்டுகளில் 25 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என பாஜக வாக்குறுதி அளித்துவிட்டு, வெறும் 80 ஆயிரம் பேருக்கு மட்டும் வேலைவாய்ப்பை அளித்தது. காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தவுடன் 5 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்றாா்.

கடந்த 2-ஆம் தேதி அஸ்ஸாமில் பயணம் மேற்கொண்ட காங்கிரஸ் பொதுச் செயலா் பிரியங்கா வதேரா, அந்த மாநிலத்தில் 5 லட்சம் அரசு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும், மாதம் 200 யூனிட் மின்சாரம் இலவசம், குடியுரிமை சட்டத் திருத்தம் திரும்பப் பெறப்படும், இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ.2 ஆயிரம் வழங்கப்படும் உள்ளிட்ட தோ்தல் வாக்குறுதிகளை அளித்திருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com