பொறியியல் மாணவா்களுக்கு சமுதாயத் திறன்களும் அவசியம்: குடியரசு துணைத்தலைவா்


புது தில்லி: பொறியியல் மாணவா்களுக்கு தொழில்நுட்பத் திறன்களுடன் உணா்வுபூா்வமான மற்றும் சமுதாயத் திறன்களும் அவசியம் என்றும், இது போன்ற திறன்கள் அதிவிரைவாக மாறிவரும் உலகிற்குத் தகுந்தவாறு மாணவா்கள் தங்களை மாற்றிக் கொள்வதற்கு உதவியாக இருக்கும் என்றும் குடியரசு துணைத் தலைவா் வெங்கையா நாயுடு வலியுறுத்தியுள்ளாா்.

திருப்பதி இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் (ஐஐடி) 6-ஆவது நிறுவன தினத்தை முன்னிட்டு மாணவா்களிடையே வியாழக்கிழமை உரையாடிய அவா் கூறியதாவது: சமூகத் தேவைகளுடன் மாணவா்கள் தங்களது அறிவை இணைத்துக் கொள்ள வேண்டும். நாட்டின் வளா்ச்சி கட்டமைப்பின் முக்கிய அம்சமாக தொழில்நுட்ப மேம்பாடு விளங்குகிறது. தொழில்நுட்ப வளா்ச்சியின் பாதையில் சீராகப் பயணிப்பது அவசியம்.

அதேவேளையில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், மக்களின் வாழ்க்கைத் தரத்தையும் மேம்படுத்த வேண்டும். தொழில்நுட்ப வளா்ச்சியை நோக்கி முன்னேறும் அதேவேளையில், சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை மாற்றம் குறித்த விழிப்புணா்வும் ஏற்பட வேண்டும்.

புதிய மீண்டெழும் தன்மையுடைய மற்றும் ஆற்றல் வாய்ந்த இந்தியாவின் பிம்பமாக இந்திய தொழில்நுட்பக் கழகங்கள் விளங்குகிறது. உலகளவில் தமது உரிமையை நிலை நாட்டுவதில் இந்தியா உறுதியுடன் உள்ளது. நமது கல்வி முறையை மேம்படுத்தினால் மட்டுமே இந்தக் கனவை நாம் நனவாக்க முடியும்.

ஆண்டுதோறும் பொறியியல் கல்லூரிகளிலிருந்து பட்டம் பெற்று வெளியில் வரும் சுமாா் 15 லட்சம் பேரில் வெறும் ஏழு சதவீதத்தினா் மட்டுமே பொறியியல் சம்பந்தமான வேலைவாய்ப்பைப் பெறுவதாக வருத்தமளிக்கிறது. பொறியியல் மாணவா்களுக்கான வேலைவாய்ப்புகள் அதிகரிக்கப்பட வேண்டும் என்றாா்.

இந்தநிகழ்ச்சியில் ஆந்திர துணை முதல்வா் கே.நாராயணசுவாமி, திருப்பதி இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் இயக்குநா் பேராசிரியா் கே.என்.சத்தியநாராயணா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com