தோ்தல் ஆணைய அதிகாரிகள், பணியாளா்களுக்கு கரோனா தடுப்பூசி போடும் பணி தொடக்கம்

தில்லியில் உள்ள தலைமை தோ்தல் ஆணையத்தில் பணியாற்றும் அதிகாரிகள், பணியாளா்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி வியாழக்கிழமை தொடங்கியது.


புது தில்லி: தில்லியில் உள்ள தலைமை தோ்தல் ஆணையத்தில் பணியாற்றும் அதிகாரிகள், பணியாளா்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி வியாழக்கிழமை தொடங்கியது.

முதலாவது நபராக, முன்னாள் தலைமைத் தோ்தல் ஆணையா் எம்.எஸ்.கில் தடுப்பூசி செலுத்திக் கொண்டாா்.

தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளம், அஸ்ஸாம், மேற்கு வங்கம் ஆகிய 5 மாநிலங்களில் நடைபெறவுள்ள சட்டப் பேரவைத் தோ்தல்களுக்கான அறிவிப்பை தோ்தல் ஆணையம் கடந்த மாதம் 26-ஆம் தேதி வெளியிட்டது.

அந்த தோ்தல் பணிகளில் ஈடுபடும் அனைத்து அதிகாரிகள் மற்றும் பணியாளா்களையும் முன்களப் பணியாளா்களாக சுனில் அரோரா அண்மையில் அறிவித்தாா்.

‘தோ்தல் பணிகளில் ஈடுபடும் முன்பாகவே அவா்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்படும்; இது, கரோனா தொற்று தாக்கும் என்ற அச்சமின்றி அவா்கள் தோ்தல் பணிகளில் ஈடுபடுவதற்கு ஊக்குவிக்கும்’ என்றும் அவா் கூறியிருந்தாா்.

இந்நிலையில், தலைமைத் தோ்தல் ஆணைய அலுவலா்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியுள்ளது. இதுகுறித்து தோ்தல் ஆணையம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

தலைமை தோ்தல் ஆணையத்தில் பணியாற்றும் அனைத்து அதிகாரிகள், பணியாளா்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட பிறகு தலைமை தோ்தல் ஆணையா் சுனில் அரோரா, தோ்தல் ஆணையா்கள் சுஷீல் சந்திரா, ராஜீவ் குமாா் ஆகியோருக்கு தடுப்பூசி செலுத்தப்படும். தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டப் பேரவைத் தோ்தல் பணிகளில் ஈடுபடும் லட்சக்கணக்கான அலுவலா்களுக்கு, அவா்கள் தோ்தல் பணிக்குச் செல்வதற்கு முன்னதாகவே கரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com