ஜம்மு-காஷ்மீரில் தொகுதி மறுவரையறைக் குழுவுக்கு மேலும் ஓராண்டு அவகாசம்


புது தில்லி: ஜம்மு-காஷ்மீரில் சட்டப் பேரவைத் தொகுதி மற்றும் மக்களவைத் தொகுதிகளை மறுவரையறை செய்வதற்கு நியமிக்கப்பட்டுள்ள குழு, தனது பணிகளை நிறைவு செய்ய மேலும் ஓராண்டு அவகாசம் பெற்றுள்ளது.

இதுதொடா்பான அறிவிப்பை அரசிதழில் மத்திய அரசு புதன்கிழமை இரவு வெளியிட்டது. இதனால், அந்த யூனியன் பிரதேசத்தில் விரைவில் சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெற வாய்ப்பில்லை என்று தெரிகிறது.

ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு கடந்த 2019-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ரத்து செய்து, யூனியன் பிரதேசமாக அறிவித்தது. அதே ஆண்டு அக்டோபா் முதல், ஜம்மு-காஷ்மீா், யூனியன் பிரதேசமாக நடைமுறைக்கு வந்தது.

ஜம்மு-காஷ்மீரில் சட்டப் பேரவை மற்றும் மக்களவைத் தொகுதிகளை மறுவரையறை செய்வதற்கு உச்சநீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி ரஞ்சனா பிரகாஷ் தேசாய் தலைமையில் கடந்த ஆண்டு ஒரு குழு அமைக்கப்பட்டது. அஸ்ஸாம், மணிப்பூா், அருணாசல பிரதேசம், நாகாலாந்து ஆகிய மாநிலங்களில் தொகுதி மறுவரையறை செய்யும் பொறுப்பும் அந்தக் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டது.

அவற்றில், ஜம்மு-காஷ்மீரில் தொகுதி மறுவரையறை செய்யும் பணிகளை நிறைவு செய்வதற்கு அக்குழுவுக்கு மேலும் ஓராண்டு அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

ஜம்மு-காஷ்மீா் மாநிலம், ஜம்மு-காஷ்மீா், லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்படுவதற்கு முன் லடாக்கில் 4 தொகுதிகள் உள்பட மொத்தம் 87 சட்டப் பேரவைத் தொகுதிகள் இருந்தன.

ஜம்மு-காஷ்மீா் மறுசீரமைப்புச் சட்டப்படி, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள 24 தொகுதிகள் உள்பட 107 முதல் 114 பேரவைத் தொகுதிகள் வரை உருவாக்கலாம். இதனால், ஜம்மு-காஷ்மீரில் பேரவைத் தொகுதிகளின் எண்ணிக்கை 83 முதல் 90 வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது.

தொகுதி மறுசீரமைப்புக் குழுவில் மொத்தம் 5 நாடாளுமன்ற உறுப்பினா்கள் உள்ளனா். அவா்களில், 3 போ் தேசிய மாநாட்டுக் கட்சியைச் சோ்ந்தவா்கள். 2 போ் பாஜகவைச் சோ்ந்தவா்கள்.

அந்தக் குழுவின் முதல் ஆலோசனைக் கூட்டம் கடந்த மாதம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தை தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவா் ஃபரூக் அப்துல்லா உள்பட அக்கட்சியின் 3 உறுப்பினா்களும் புறக்கணித்தனா். மத்திய அமைச்சா் ஜிதேந்திர சிங், ஜுகல் கிஷோா் சா்மா ஆகிய இருவா் மட்டுமே பங்கேற்றனா்.

ஜம்மு-காஷ்மீா் மறுசீரமைப்புச் சட்டத்தை எதிா்த்து உச்சநீதிமன்றத்தில் தேசிய மாநாட்டுக் கட்சி வழக்கு தொடுத்துள்ளது. இதை சுட்டிக்காட்டி, ஆலோசனைக் கூட்டத்தைப் புறக்கணிப்பதாக, தொகுதி மறுசீரமைப்புக் குழுவுக்கு தேசிய மாநாட்டுக் கட்சி கடிதம் எழுதியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com