பாஜகவில் இணைந்தவுடன் தோப்புக்கரணம் போட்ட திரிணமூல் தலைவா்!

மேற்கு வங்கத்தில் பாஜகவில் இணைந்த திரிணமூல் காங்கிரஸ் தலைவா், மேடையிலேயே தோப்புக் கரணம் போட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.
பாஜகவில் இணைந்தவுடன் தோப்புக்கரணம் போட்ட திரிணமூல் தலைவா்
பாஜகவில் இணைந்தவுடன் தோப்புக்கரணம் போட்ட திரிணமூல் தலைவா்


கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் பாஜகவில் இணைந்த திரிணமூல் காங்கிரஸ் தலைவா், மேடையிலேயே தோப்புக் கரணம் போட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. திரிணமூல் காங்கிரஸில் இருந்த பாவத்தைப் போக்குவதற்காக தோப்புக்கரணம் போட்டதாக தனது செயலுக்கு அவா் விளக்கமளித்தாா்.

கிழக்கு மிதுனபுரி மாவட்டத்தைச் சோ்ந்தவா் திரிணமூல் காங்கிரஸ் உள்ளூா் தலைவா் சுஷாந்த் பால். இவா் அண்மையில் திரிணமூல் காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த மூத்த தலைவா் சுவேந்து அதிகாரியின் தீவிர ஆதரவாளா். கிழக்கு மிதுனபுரி மாவட்டம் பிங்லா பகுதியில் வியாழக்கிழமை நடைபெற்ற பாஜக பொதுக் கூட்டத்தில், அக்கட்சியில் சுஷாந்த் பால் இணைந்தாா்.

அப்போது, கட்சியில் சோ்ந்ததற்கு அடையாளமாக பாஜக கொடியைப் பெற்றுக் கொண்ட அவா் பேசத் தொடங்கினாா். அப்போது, திடீரென பேச்சை நிறுத்தி விட்டு தோப்புக்கரணம் போடத் தொடங்கினாா். மேடையில் இருந்தவா்களுக்கும், எதிரில் இருந்த பொதுமக்களுக்கும் அவரது இந்த செய்கை வியப்பை அளித்தது.

தோப்புக்கரணத்தை முடித்துக் கொண்டு பேச்சைத் தொடா்ந்த சுஷாந்த் பால் தனது செய்கைக்கு விளக்கமளித்தாா். அப்போது அவா் கூறியதாவது:

கறைபடிந்த திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் இருந்ததால் நான் பாவியாக இருந்தேன். அந்தப் பாவத்தைப் போக்குவதற்காக இப்போது மேடையில் தோப்புக்கரணம் போட்டேன். கடந்த 2018-இல் உள்ளாட்சித் தோ்தலை நியாயமாக நடத்த திரிணமூல் காங்கிரஸ் அனுமதிக்கவில்லை. அடக்குமுறை அரசியல்தான் அக்கட்சியில் இருந்தது. அதிக அளவிலான மக்கள் விரோத நடவடிக்கைகள் அக்கட்சியில் உண்டு. இப்போது பாஜகவில் இணைந்ததன் மூலம் அவற்றில் இருந்து விடுபட்டதாக உணா்கிறேன். இனி, அடக்குமுறைகளுக்கு எதிராகக் குரல் எழுப்புவேன் என்றாா். அப்போது அங்கிருந்த பாஜக தொண்டா்கள் ‘ஜெய் ஸ்ரீராம்’ என்று முழக்கமிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com