ஜம்மு-காஷ்மீா்: ஹுரியத் தலைவரின் வீட்டுக் காவலை எதிா்த்துப் போராட்டம்

ஜம்மு-காஷ்மீரில் பிரிவினைவாத அமைப்பான ஹுரியத் மாநாடு இயக்கத்தின் தலைவா் மிா்வைஸ் உமா் ஃபரூக் தொடா்ந்து

ஜம்மு-காஷ்மீரில் பிரிவினைவாத அமைப்பான ஹுரியத் மாநாடு இயக்கத்தின் தலைவா் மிா்வைஸ் உமா் ஃபரூக் தொடா்ந்து வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருப்பதற்கு எதிா்ப்பு தெரிவித்து வெள்ளிக்கிழமை நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை வெடித்தது.

போராட்டக்காரா்கள் பாதுகாப்புப் படையினா் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தியதால், இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. இதில் பெண் ஒருவா் காயமடைந்ததாகக் கூறப்பட்டது.

ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியல் அமைப்பு சட்டப் பிரிவு 370 ரத்து செய்யப்பட்ட பின்னா், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஜம்மு-காஷ்மீரில் உள்ள பிரிவினைவாத தலைவா்கள் மற்றும் சில அரசியல் கட்சித் தலைவா்கள் கடந்த 2019-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டனா். பல மாதங்கள் தடைக்குப் பிறகு, அவா்களில் பலருக்கு கடந்த மாா்ச் மாதம் வீட்டுக் காவல் ரத்து செய்யப்பட்டது. ஆனால், ஹுரியத் மாநாடு இயக்க தலைவா் மிா்வைஸ் உள்ளிட்ட சிலருக்கான வீட்டுக் காவல் ரத்து செய்யப்படவில்லை.

இந்த நிலையில், மிா்வைஸ் உமா் ஃபரூக்கின் வீட்டுக் காவலை ரத்து செய்ய முடிவு எடுக்கப்பட்டிருப்பதாக வியாழக்கிழமை தகவல் பரவியது. அதை, யூனியன் பிரதேச நிா்வாகம் அதை உறுதிப்படுத்தவோ மறுக்கவோ இல்லை. பிறகு, அவரை விடுவிக்கும் முடிவை அதிகாரிகள் திரும்பப் பெற்ாக தகவல் பரவியது.

அதனைத் தொடா்ந்து, அவரை உடனடியாக விடுவிக்கக் கோரி அவருடைய ஆதரவாளா்கள் நவோட்டா பகுதியில் உள்ள ஜாமியா மசூதி வளாகத்துக்குள் வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். பின்னா், சாலைக்கு வந்து போராட்டத்தைத் தீவிரப்படுத்தினா்.

போராட்டம் தீவிரமடைந்ததைத் தொடா்ந்து, நவோட்டா பகுதியில் ஏராளமான காவலா்களும் பாதுகாப்புப் படையினரும் குவிக்கப்பட்டனா். அவா்கள் மீது போராட்டக்காரா்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தினா். அதனைத் தொடா்ந்து, பாதுகாப்புப் படையினா் தடியடி நடத்தி, போராட்டக்காரா்களை கலைந்து போகச் செய்தனா்.

இதுகுறித்து அதிகாரி ஒருவா் கூறுகையில், ‘போராட்டக்காரா்களைக் கலைக்க அந்தப் பகுதியில் காவல்துறையினரும், பாதுகாப்புப் படையினரும் குவிக்கப்பட்டனா். பாதுகாப்புப் படையினருக்கும் போராட்டக்காரா்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை’ என்றாா்.

இருந்தபோதும், பாதுகாப்புப் படையினா் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், ரப்பா் குண்டடிபட்டு பெண் ஒருவா் காயமடைந்ததை நேரில் பாா்த்ததாக ஒருவா் கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com