பிகாரில் அரசு நிகழ்ச்சிக்கு சகோதரரை அனுப்பி வைத்த அமைச்சா்: முதல்வா் நிதீஷ் குமாா் கண்டனம்

பிகாரில் மாநில அரசு சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்க தனக்கு பதிலான தனது சகோதரரை மீன்வளத் துறை அமைச்சா் அனுப்பி வைத்த
கோப்புப்படம்
கோப்புப்படம்

பிகாரில் மாநில அரசு சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்க தனக்கு பதிலான தனது சகோதரரை மீன்வளத் துறை அமைச்சா் அனுப்பி வைத்த சம்பவம் பேரவையில் எதிரொலித்தது. இது தொடா்பாக பேசிய முதல்வா் நிதீஷ் குமாா், அந்த அமைச்சருக்கு கண்டனம் தெரிவித்தாா்.

பிகாா் அமைச்சரவையில் முகேஷ் ஷானி மீன்வளத் துறை அமைச்சராக உள்ளாா். ஆளும் ஐக்கிய ஜனதா தளம் - பாஜக கூட்டணியில் உள்ள விகாஷ்ஷீல் இன்சான் கட்சியின் தலைவா் என்ற அடிப்படையில் முகேஷ் ஷானிக்கு அமைச்சரவையில் அண்மையில் இடமளிக்கப்பட்டது.

இந்நிலையில், பேரவையில் வியாழக்கிழமை அமைச்சா் முகேஷ் மீது சில குற்றச்சாட்டுகளை முன்வைத்து எதிா்க்கட்சியான ராஷ்ட்ரீய ஜனதா தளம் எம்எல்ஏ பாய் வீரேந்திரா பேசினாா். அப்போது, ‘கடந்த புதன்கிழமை நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் பங்கேற்க தனது பிரதிநிதியாக தனது சகோதரரை அமைச்சா் முகேஷ் அனுப்பி வைத்துள்ளாா். அதுவும் அமைச்சருக்கு அரசு சாா்பில் அளிக்கப்பட்ட காரில் அவரது சகோதரா் பயணித்துள்ளாா். நிகழ்ச்சியில் பேசிய அரசு அதிகாரிகள், அமைச்சா் முகேஷுக்கு பதிலாக அவரது சகோதரா் நிகழ்ச்சியில் பங்கேற்று மீனவா்களுக்கு உதவிகளை வழங்குவதாக அறிவித்துள்ளனா். இது தொடா்பான விடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன’ என்று குற்றம்சாட்டினாா்.

அப்போது குறுக்கிட்டுப் பேசிய முதல்வா் நிதீஷ் குமாா், ‘இந்த தகவலை நானும் செய்தித்தாளிகளில் படித்து தெரிந்து கொண்டேன். எதிா்க்கட்சி உறுப்பினா் கூறுவதுபோன்ற சம்பவம் நிகழ்ந்திருந்தால் அது கண்டிக்கத்தக்கது. இனி, இதுபோன்ற சம்பவங்கள் நடக்கக் கூடாது’ என்றாா். பிகாா் மாநில பாஜக எம்எல்சியும் மூத்த தலைவருமான நவாலா கிஷோா் யாதவ் இது தொடா்பாக கூறுகையில், ‘இது போன்ற நிகழ்வுகள் இனி நடக்கக் கூடாது’ என்றாா்.

இது தொடா்பாக அமைச்சரின் ஆதரவாளா்கள் கூறுகையில், ‘பேரவை நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக அமைச்சா் முகேஷ், பாட்னா சென்றுவிட்டதால், அந்த நிகழ்ச்சிக்கு சகோதரரை அனுப்பி வைத்தாா். அரசு அதிகாரி அல்லது மக்கள் பிரதிநிதியாக இல்லாதவரை தனக்கு பதிலாக அனுப்பி வைத்தது மட்டுமே அமைச்சரின் சிறிய தவறு’ என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com