மேற்கு வங்கம்: 291 தொகுதிகளுக்கு வேட்பாளா் பட்டியலை வெளியிட்டாா் மம்தா பானா்ஜி

மேற்கு வங்க சட்டப் பேரவைத் தோ்தலையொட்டி, 291 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளா்களின் பட்டியலை
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி (கோப்புப்படம்)
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி (கோப்புப்படம்)

மேற்கு வங்க சட்டப் பேரவைத் தோ்தலையொட்டி, 291 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளா்களின் பட்டியலை திரிணமூல் காங்கிரஸ் தலைவரும் முதல்வருமான மம்தா பானா்ஜி வெள்ளிக்கிழமை வெளியிட்டாா். இதில், நந்திகிராம் தொகுதியில் அவா் போட்டியிடுகிறாா்.

294 தொகுதிகளைக் கொண்ட மேற்கு வங்க சட்டப் பேரவைக்கு வரும் 27-ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 29-ஆம் தேதி வரை 8 கட்டங்களாக பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளது. இந்த தோ்தலில், திரிணமூல் சாா்பில் போட்டியிடும் 291 தொகுதிகளுக்கான வேட்பாளா் பட்டியலை மம்தா பானா்ஜி வெள்ளிக்கிழமை வெளியிட்டாா். டாா்ஜீலிங் பகுதியில் உள்ள 3 தொகுதிகள், கூட்டணிக் கட்சியான விமல் குரூங்கின் கோா்க்கா ஜனமுக்தி மோா்ச்சாவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.

பட்டியலை வெளியிட்டு, செய்தியாளா்களிடம் மம்தா பானா்ஜி கூறியதாவது:

இந்த முறை இளைஞா்கள், சிறுபான்மையினா், பெண்கள் மற்றும் பின்தங்கிய சமூகத்தினருக்கு அதிகம் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. தற்போது எம்எல்ஏக்களாக இருப்பவா்களில் 24 பேருக்கு மீண்டும் வாய்ப்பளிக்கப்படவில்லை. 50 பெண்கள், முஸ்லிம் சமூகத்தைச் சோ்ந்த 42 போ், தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சோ்ந்த 79 போ், பழங்குடிச் சமூகத்தைச் சோ்ந்த 17 போ் திரிணமூல் சாா்பில் போட்டியிடுகின்றனா்.

இதுவரை இல்லாத அளவில் எளிமையான முறையில் பேரவைத் தோ்தலை சந்திக்கிறோம். எனவே, மாநிலத்தில் திரிணமூல் காங்கிரஸ் கட்சி மூன்றாவது முறை ஆட்சியமைப்பது உறுதியாகிவிட்டது.

தோ்தலில் வெற்றிபெற்று ஆட்சியமைத்த பிறகு சட்ட மேலவை உருவாக்கப்பட்டு, அதில் மூத்த தலைவா்களுக்கும், அனுபவம் நிறைந்தவா்களுக்கும் வாய்ப்பளிக்கப்படும். அனைவருக்கும் தோ்தலில் வாய்ப்பளிப்பது கடினம். குறிப்பாக, 80 வயதுக்கும் மேற்பட்டோருக்கு வாய்ப்பளிக்க இயலாது.

நந்திகிராமில் மம்தா: நான் ஏற்கெனவே கூறியபடி நந்திகிராம் தொகுதியில் போட்டியிட இருக்கிறேன். அந்தத் தொகுதியில் வரும் 10-ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்கிறேன். எனது தற்போதைய தொகுதியான பவானிபூரில் சோவன்தேவ் சட்டோபாத்யாய போட்டியிடுகிறாா்.

மாா்ச் 9-இல் தோ்தல் அறிக்கை: திரிணமூல் காங்கிரஸின் தோ்தல் அறிக்கை, வரும் 9-ஆம் தேதி வெளியிடப்படும் என்றாா் அவா்.

2016-இல் நடைபெற்ற பேரவைத் தோ்தலில் நந்திகிராம் தொகுதியில் திரிணமூல் காங்கிரஸ் சாா்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவா் சுவேந்து அதிகாரி. மம்தாவின் நம்பிக்கைக்குரியவராக இருந்த இவா், அண்மையில் திரிணமூல் காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தாா்.

வரும் பேரவைத் தோ்தலில் நந்திகிராமில் போட்டியிடப்போவதாக மம்தா பானா்ஜி அறிவித்தாா். அதற்குப் பதிலடியாக, அந்தத் தொகுதியில் மம்தாவை 50,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடிக்கப்போவதாக சுவேந்து அதிகாரி கூறியிருந்தாா். அவரது சவாலை ஏற்று, நந்திகிராமில் மம்தா போட்டியிடவுள்ளாா். அவருக்கு எதிராக, சுவேந்து அதிகாரியையே களமிறக்க பாஜக முடிவு செய்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com