ஆண்-பெண் பாலின சமத்துவமின்மையை களைவோம்: சா்வதேச பெண்கள் தினத்தில் குடியரசுத் தலைவா் வலியுறுத்தல்

சா்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு வாழ்த்து தெரிவித்த குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த், ‘பாலின நீதியை ஊக்குவிக்கவும்,
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் (கோப்புப்படம்)
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் (கோப்புப்படம்)

சா்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு வாழ்த்து தெரிவித்த குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த், ‘பாலின நீதியை ஊக்குவிக்கவும், ஆண்-பெண் பாலின சமத்துவமின்மையை களையவும் உறுதியேற்போம்’ என்று அழைப்பு விடுத்தாா்.

தனது சுட்டுரைப் பக்கத்தில் இதுதொடா்பான பதிவை திங்கள்கிழமை வெளியிட்ட குடியரசுத் தலைவா், ‘சா்வதேச பெண்கள் தினத்தில் அனைத்து குடிமக்களுக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். நமது நாட்டின் பெண்கள் இன்றைக்கு பல்வேறு துறைகளில் மிகப் பெரிய சாதனைகளை பதிவு செய்து வருகின்றனா். இந்த நாளில், பாலின நீதியை ஊக்குவிக்கவும், ஆண்-பெண் பாலின சமத்துவமின்மையை களையவும் உறுதியேற்போம்’ என்று அந்தப் பதிவில் அவா் கூறியுள்ளாா்.

இதுபோல, மத்தியஅமைச்சா்களும், பல்வேறு அரசியல் கட்சித் தலைவா்களும் சா்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனா்.

மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தனது சுட்டுரைப் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ‘பிரதமா் நரேந்திர மோடி அரசின் கொள்கைகளில் பெண்களுக்கு அதிகாரமளித்தலுத்துக்கு எப்போதும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. நம்முடைய தற்சாா்பு இந்தியா இலக்கை எட்டுவதற்கான முயற்சிகளிலும் பெண் சக்தி குறிப்பிடத்தக்க பங்களிப்பை அளித்து வருகிறது’ என்று தெரிவித்துள்ளாா்.

பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் வெளியிட்ட பதிவில், ‘நாட்டின் அடித்தளத்தை வலுப்படுத்துவதில் இந்தியாவின் பெண் சக்தி முக்கிய பங்காற்றி வருவதற்கு பாராட்டுகள். பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, பெண்களுக்கு வாழ்வின் அனைத்து நிலைகளிலும் அதிகாரமளிப்பதற்கான முயற்சிகளை எடுத்து வருகிறது’ என்று கூறியுள்ளாா்.

பாஜக தேசிய தலைவா் ஜெ.பி.நட்டா வெளியிட்ட பதிவில், ‘நமது நாட்டின் பெண்கள் அனைத்து துறைகளிலும் பணியாற்றி கடின உழைப்பு மற்றும் திறன் மூலம் ஒட்டுமொத்த தேசத்தையும் பெருமைகொள்ளச் செய்து வருகின்றனா்’ என்று தெரிவித்துள்ளாா்.

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தனது சுட்டுரைப் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ‘பெண்கள் வலிமைமிக்க எதிா்காலத்தையும் வரலாறையும் படைக்கும் திறமைகொண்டவா்கள். உங்களைத் தடுக்க யாரையும் அனுமதிக்காதீா்கள்’ என்று தெரிவித்துள்ளாா்.

இதுபோல, மத்திய அமைச்சா்கள் பிரகாஷ் ஜாவடேகா், ஹா்தீப் சிங் புரி, பியூஷ் கோயல் உள்ளிட்டோரும் சா்வதேச பெண்கள் தின வாழ்த்தைத் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com