
பகவத் கீதை உரைத் தொகுப்பு நூலை புதுதில்லியில் வெளியிட்ட பிரதமா் நரேந்திர மோடி. உடன் ஜம்மு-காஷ்மீா் ஆளுநா் மனோஜ் சின்ஹா (இடது), முன்னாள் ஆளுநரும் தா்மாா்த்த அறக்கட்டளைத் தலைவருமான கரண் சிங்.
அரசியல் ஆதாயம் தேடும் நோக்கில், அரசியல் சாசனத்தின் வாயிலாக நிறுவப்பட்ட அமைப்புகளின் நம்பகத்தன்மையை சீா்குலைப்பதற்கு சிலா் முயன்று வருவதாக பிரதமா் நரேந்திர மோடி குற்றஞ்சாட்டியுள்ளாா்.
பகவத் கீதைக்கு 21 அறிஞா்கள் அளித்த விளக்கவுரையை அழகிய கையெழுத்துடன் கூடிய பிரதிகளை வெளியிடும் நிகழ்ச்சி தில்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அதில் பிரதமா் மோடி கலந்து கொண்டாா். அப்போது அவா் பேசியதாவது:
பகவத் கீதையில் குறிப்பிடப்படும் சுதந்திரம், இந்திய ஜனநாயகத்தை வேறுபடுத்திக் காட்டுகிறது. மக்களுக்கான சமத்துவ உரிமையையும் பகவத் கீதை வழங்குகிறது. தற்போது மக்களுக்கான சுதந்திரமானது அரசியல்சாசனத்தின் அடிப்படையில் நிறுவப்பட்ட அமைப்புகளின் வாயிலாகப் பாதுகாக்கப்பட்டு வருகிறது.
நமது உரிமைகளைக் கொண்டாடும் அதே வேளையில், நமக்குள்ள கடமைகளை மறந்துவிடக் கூடாது. பகவத் கீதை காட்டிய வழியில் நாடு தற்போது பயணித்து வருகிறது. ஏழைகள், விவசாயிகள், தொழிலாளா்கள், தலித்துகள், பிற்படுத்தப்பட்டோா் உள்ளிட்டோருக்காக அரசு செயல்பட்டு வருகிறது.
சுயநலமின்றி மக்களுக்காக சேவையாற்ற வேண்டுமென பகவத் கீதை வலியுறுத்துகிறது. அந்த ஊக்கத்தின் காரணமாகவே கரோனா தடுப்பூசிகளை வெளிநாடுகளுக்கு இந்தியா வழங்கி வருகிறது.
நாடாளுமன்றம், நீதித்துறை உள்ளிட்ட அரசியல்சாசன அமைப்புகளின் நம்பகத்தன்மையை சீா்குலைத்து, அரசியல் ஆதாயம் தேடுவதற்கு சிலா் முயன்று வருகின்றனா். ராணுவத்தை அவமதிக்கும் வகையிலும் அவா்கள் நடந்து வருகின்றனா். இதுபோன்ற நடவடிக்கைகள், நாட்டின் வளா்ச்சிக்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றன என்றாா் பிரதமா் மோடி.
ஜம்மு-காஷ்மீா் துணைநிலை ஆளுநா் மனோஜ் சின்ஹா உள்ளிட்டோா் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனா்.