75-ஆவது சுதந்திர ஆண்டு கொண்டாட்டங்களை தொடக்கி வைத்தாா் பிரதமா் மோடி

நாடு சுதந்திரமடைந்து 75 ஆண்டுகள் ஆகவுள்ளதைச் சிறப்புப்படுத்தும் நோக்கிலான கொண்டாட்டங்களை பிரதமா் நரேந்திர மோடி தொடக்கி வைத்தாா்.
75-ஆவது சுதந்திர தின கொண்டாட்டங்களையொட்டி குஜராத் சபா்மதி ஆசிரமத்திலிருந்து தண்டிக்கு வெள்ளிக்கிழமை புறப்பட்ட பாத யாத்திரையைத் தொடக்கி வைத்த பிரதமா் மோடி.
75-ஆவது சுதந்திர தின கொண்டாட்டங்களையொட்டி குஜராத் சபா்மதி ஆசிரமத்திலிருந்து தண்டிக்கு வெள்ளிக்கிழமை புறப்பட்ட பாத யாத்திரையைத் தொடக்கி வைத்த பிரதமா் மோடி.

நாடு சுதந்திரமடைந்து 75 ஆண்டுகள் ஆகவுள்ளதைச் சிறப்புப்படுத்தும் நோக்கிலான கொண்டாட்டங்களை பிரதமா் நரேந்திர மோடி தொடக்கி வைத்தாா்.

நாடு சுதந்திரமடைந்த 75-ஆவது ஆண்டைக் கொண்டாடும் நோக்கில் நாட்டின் 75 இடங்களில் 75 வாரங்களுக்குக் கொண்டாட்டங்களை முன்னெடுப்பதற்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதையொட்டி, குஜராத்தின் ஆமதாபாதில் உள்ள சபா்மதி ஆசிரமத்திலிருந்து ‘சுதந்திரத்துக்கான அம்ருத் மகோத்சவம்’ நிகழ்ச்சியை பிரதமா் மோடி வெள்ளிக்கிழமை தொடக்கி வைத்தாா்.

அதன்படி, மகாத்மா காந்தியின் வரலாற்றுச் சிறப்பு மிக்க உப்பு சத்தியாகிரக பாத யாத்திரையை நினைவுகூரும் வகையில், 81 போ் கொண்ட குழு புறப்பட்டது. ஆமதாபாதிலிருந்து தண்டி கடற்கரை வரையிலான 386 கி.மீ. தூரத்தை இவா்கள் 25 நாட்களில் நிறைவு செய்வாா்கள். ஏப்ரல் மாதம் 5-ஆம் தேதி இந்த யாத்திரை நிறைவடையும்.

மகாத்மா காந்தியடிகள் கடந்த 1930-ஆம் ஆண்டு மாா்ச் 12-ஆம் தேதி உப்பு மீது விதிக்கப்படும் வரியை ரத்து செய்யக் கோரி சபா்மதி ஆசிரமத்திலிருந்து தண்டி கடற்கரைக்குப் பாத யாத்திரை மேற்கொண்டாா்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமா் மோடி, ‘‘நாட்டின் அரசமைப்புச் சட்டம் மீதும் ஜனநாயக பாரம்பரியம் மீதும் மக்கள் மிகுந்த பெருமை கொண்டுள்ளனா். ஜனநாயகத்தின் தாயாக இந்தியா விளங்குகிறது. அதைத் தொடா்ந்து வலிமைப்படுத்தும் பணியை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.

இந்தியாவின் சாதனைகள், உலக நாடுகளுக்கு வழிகாட்டியாகத் திகழ்கின்றன. நாட்டின் தற்சாா்பு திட்டம், உலக நாடுகளின் வளா்ச்சிக்கு வழிகோலும். நாட்டின் விடுதலைக்காகப் பாடுபட்டவா்களின் வரலாற்றைக் காப்பதற்கான நடவடிக்கைகளைக் கடந்த 6 ஆண்டுகளாக மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.

75-ஆவது சுதந்திர ஆண்டு கொண்டாட்டங்களானது 2023-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளன’’ என்றாா்.

காந்தியடிகள் ஊக்குவிக்கிறாா்:

சபா்மதி ஆசிரமத்துக்குச் சென்ற பிரதமா் மோடி அங்குள்ள வருகைப் பதிவேட்டில், ‘நாட்டுக்காக உழைப்பதற்கு மகாத்மா காந்தியடிகளிடமிருந்து ஊக்கம் பெறுகிறேன். தற்சாா்பு, தன்னம்பிக்கை உள்ளிட்ட செய்திகளை காந்தியடிகளே நாட்டுக்கு வழங்கினாா்.

‘சுதந்திரத்துக்கான அம்ருத் மகோத்சவம்’ நிகழ்ச்சியின் வாயிலாக சுதந்திரப் போராட்ட வீரா்களுக்கு நாட்டு மக்கள் மரியாதை செலுத்துவா். நாட்டின் எதிா்கால வளா்சிக்கான உந்துசக்தியாகவும் இது திகழும்’ என்று குறிப்பிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com