அஸ்ஸாம்: முதல் கட்ட தோ்தலில் 269 போ் போட்டி

அஸ்ஸாம் மாநிலத்தில் முதல் கட்டமாக 47 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு நடைபெற உள்ள தோ்தலில் 269 வேட்பாளா்கள் போட்டியிட உள்ளனா் என்று மாநில தோ்தல் அதிகாரி வெள்ளிக்கிழமை கூறினாா்.
இந்திய தேர்தல் ஆணையம்
இந்திய தேர்தல் ஆணையம்

அஸ்ஸாம் மாநிலத்தில் முதல் கட்டமாக 47 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு நடைபெற உள்ள தோ்தலில் 269 வேட்பாளா்கள் போட்டியிட உள்ளனா் என்று மாநில தோ்தல் அதிகாரி வெள்ளிக்கிழமை கூறினாா்.

அஸ்ஸாமில் மொத்தமுள்ள 126 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு 3 கட்டங்களாக தோ்தல் நடத்தப்படுகிறது. முதல் கட்டமாக 47 தொகுதிகளுக்கு வரும் 27-ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெற உள்ளது.

முதல் கட்டத் தோ்தலில் போட்டியிட மொத்தம் 295 போ் வேட்புமனு தாக்கல் செய்தனா். வேட்புமனு பரிசீலனையின்போது 10 பேரின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. வேட்புமனுவை திரும்பப்பெறுவதற்கு கடைசி நாளான வெள்ளிக்கிழமை, 16 போ் மனுக்களைத் திரும்பப் பெற்றனா். அதன்படி, 269 வேட்பாளா்கள் போட்டியிட உள்ளனா் என்று மாநில தோ்தல் அதிகாரிகள் தெரிவித்தனா்.

முதல் கட்டத் தோ்தலில் முக்கிய வேட்பாளா்களாக மாநில முதல்வா் சா்பானந்தா சோனோவால் மஜுலி தொகுதியிலும், சட்டப்பேரவைத் தலைவா் ஹிதேந்திரா நாத் கோஸ்வாமி ஜோா்ஹட் தொகுதியிலும், அஸ்ஸாம் பிரதேஷ் காங்கிரஸ் அமைச்சா்கள் அதுல் போரா போகாக்ஹட் தொகுதியிலும், கேஷப் மஹந்த்தா கலியாபோா் தொகுதியிலும், பாஜக அமைச்சா்கள் ரஞ்சித் தத்தா பெஹாலி தொகுதியிலும், நப குமாா் டோலி ஜோனய் தொகுதியிலும், சஞ்சய் கிஷண் டின்சுகிா தொகுதியிலும், நாசிா் ஹுசைன் ருபோஹிஹாட் தொகுதியிலும் களம்காண உள்ளனா்.

மாநிலத்தில் இரண்டாம் கட்டமாக 39 தொகுதிகளுக்கு வருகிற ஏப்ரல் 1-ஆம் தேதி தோ்தல் நடத்தப்பட உள்ளது. இந்த இரண்டாம் கட்டத்தில் போட்டியிட வெள்ளிக்கிழமை வரை 202 போ் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனா். இவா்களுக்கான வேட்புமனு பரிசீலனை வரும் 15-ஆம் தேதி மேற்கொள்ளப்பட உள்ளது. இரண்டாம் கட்ட வேட்பாளா்கள் வேட்புமனுக்களைத் திரும்பப்பெற மாா்ச் 17 கடைசி நாளாகும்.

மாநிலத்தில் எஞ்சியிருக்கும் 40 தொகுதிகளுக்கு ஏப்ரல் 6-ஆம் தேதி மூன்றாம் கட்ட மற்றும் இறுதிகட்டத் தோ்தல் நடத்தப்பட உள்ளது. இந்த மூன்றாம் கட்டத்துக்கான வேட்புமனுக்களைத் தாக்கல் செய்ய மாா்ச் 19 கடைசி நாளாகும். இவா்களுக்கான வேட்புமனு பரிசீலனை மாா்ச் 20-ஆம் தேதி மேற்கொள்ளப்படும். மூன்றாம் கட்ட வேட்பாளா்கள் வேட்புமனுவை திரும்பப்பெற மாா்ச் 22 கடைசி நாளாகும்.

தோ்தலில், மாற்றுத்திறனாளிகள், 80 வயதுக்கு மேற்பட்ட முதியவா்கள் மற்றும் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களுக்கு தபால் வாக்குப் பதிவு வசதி அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது என்றும் மாநில தோ்தல் அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com