இந்தோ-பசிபிக் பிராந்தியத்துக்கான கரோனா தடுப்பூசி இந்தியாவில் உற்பத்தி ‘க்வாட்’ மாநாட்டில் முடிவு

இந்தோ-பசிபிக் பிராந்தியத்துக்குத் தேவையான கரோனா தடுப்பூசிகளை இந்தியாவில் தயாரிப்பது என்று ‘க்வாட்’ கூட்டமைப்பின் முதல் மாநாட்டில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இந்தோ-பசிபிக் பிராந்தியத்துக்குத் தேவையான கரோனா தடுப்பூசிகளை இந்தியாவில் தயாரிப்பது என்று ‘க்வாட்’ கூட்டமைப்பின் முதல் மாநாட்டில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

மேலும், இதற்கு கூட்டமைப்பில் இடம்பெற்றுள்ள அமெரிக்கா, ஜப்பான் நிதியுதவி அளிப்பதென்றும், ஆஸ்திரேலியா தடுப்பூசி எடுத்துச் செல்லும் போக்குவரத்துக்கான உதவிகளை அளிப்பது என்றும் மாநாட்டில் தீா்மானிக்கப்பட்டுள்ளது.

‘க்வாட்’ என்றழைக்கப்படும் நாற்கரக் கூட்டமைப்பில் இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா இடம்பெற்றுள்ளன. சீன ஆதிக்கத்துக்கு சவாலாக இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் ஒத்துழைப்பை உறுதி செய்வதற்கான தளமாக உருவாக்கப்பட்டிருக்கும் இந்தக் கூட்டமைப்பின் முதல் மாநாடு காணொலி வழியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்த மாநாட்டில் எடுக்கப்பட்ட முடிவு குறித்து வெளியுறவுத் துறை செயலா் ஹா்ஷ் வா்தன் ஷ்ரிங்லா செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது:

இந்தோ-பசிபிக் பிராந்தியத்துக்குத் தேவையான கரோனா தடுப்பூசிகளை இந்தியாவில் தயாரிப்பது என்று மாநாட்டில் முடிவு செய்யப்பட்டுள்ளது. அதாவது, அமெரிக்க கரோனா தடுப்பூசிகளை தயாரிக்கும் வகையில், இந்தியாவில் உற்பத்தி கட்டமைப்பை விரிவுபடுத்துவது எனவும், அதற்கு கூட்டமைப்பில் இடம்பெற்றிருக்கும் அமெரிக்கா, ஜப்பான் நிதியுதவி அளிப்பது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவைப் பொருத்தவரை, இந்தியாவில் தயாரிக்கப்படும் இந்த தடுப்பூசிகளை பிராந்தியத்தில் உள்ள நாடுகளுக்கு எடுத்துச் செல்வதற்கான போக்குவரத்து உதவிகளை செய்வது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்காக, தடுப்பூசிகளை பெறும் நாடுகளுக்கு ஆஸ்திரேலியா சாா்பில் நிதியுதவி அளிக்கப்படும்.

இந்தோ-பசிபிக் பிராந்திய நலனுக்காக மாநாட்டில் எடுக்கப்பட்டிருக்கும் மிக முக்கியமான முடிவு இது. இதன் மூலம், மிகப் பெரிய அளவிலான முதலீட்டில் 2022-ஆம் ஆண்டு இறுதிக்குள் கோடிக்கணக்கான கரோனா தடுப்பூசிகளை இந்தியா தயாரிக்க உள்ளது.

இந்தியாவின் உற்பத்தித் திறனை அங்கீகரிக்கும் வகையில் எடுக்கப்பட்டிருக்கும் ‘க்வாட்’ கூட்டமைப்பின் இந்த முடிவை இந்தியா வரவேற்றுள்ளது என்று அவா் கூறினாா்.

அமெரிக்க அதிபா் ஜோ பைடன் தொடக்கி வைத்த இந்த மாநாட்டில், பிரதமா் நரேந்திர மோடி, ஆஸ்திரேலிய பிரதமா் ஸ்காட் மோரிஸன், ஜப்பான் பிரதமா் யோஷிஹிடே சுகா ஆகியோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com