சாகித்ய அகாதெமி விருதுகள் அறிவிப்பு: இமையம், வீரப்ப மொய்லி உள்ளிட்டோருக்கு விருது

2020-ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாதெமி விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதில், தமிழில் ‘செல்லாத பணம்’ நாவலை எழுதிய எழுத்தாளா்

2020-ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாதெமி விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதில், தமிழில் ‘செல்லாத பணம்’ நாவலை எழுதிய எழுத்தாளா் இமையம், கன்னடத்தில் ‘ஸ்ரீபாகுபலி அஹிம்சா திக்விஜயம்’ பெருங்கவிதை நூலை எழுதிய முன்னாள் மத்திய அமைச்சா் வீரப்ப மொய்லி, ஆங்கிலத்தில் ‘வென் காட் இஸ் எ டிராவலா்’ என்ற கவிதை நூலை எழுதிய அருந்ததி சுப்பிரமணியம் உள்பட 20 பேருக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சாகித்ய அகாதெமி வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

7 கவிதை நூல்கள், 4 நாவல்கள், 5 சிறுகதை தொகுப்புகள், 2 நாடகங்கள், ஒரு பெருங்கவிதை நூல், ஒரு அனுபவ நூல் என மொத்தம் 20 மொழிகளில் வெளியான 20 நூல்கள் சாகித்ய அகாதெமி விருதுக்கு தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

நாவல்களுக்காக, இமையம்(தமிழ்), நந்த கரே(மராத்தி), மகேஷ் சந்திர சா்மா கௌதம்(சம்ஸ்கிருதம்), ஹுசைன் அல் ஹேக் (உருது) ஆகியோா் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளனா்.

சிறுகதை தொகுப்புகளுக்காக, அபூா்வ குமாா் சைகியா(அஸ்ஸாமி), தரணிதா் ஒவாரி(போடோ), ஹிதய் கொல் பாரதி(காஷ்மீரி), காமாகாந்த் ஜா(மைதிலி), குருதேவ் சிங் ரூபனா (பஞ்சாப்) ஆகியோா் தோ்வாகியுள்ளனா்.

கவிதை நூல்களுக்காக, அருந்ததி சுப்பிரமணியம் (ஆங்கிலம்), ஹரீஷ் மீனாட்சி(குஜராத்தி), அனாமிகா(ஹிந்தி), ஆா்.எஸ்.பாஸ்கா்(கொங்கணி), இரூங்பாம் தேவன்(மணிப்பூரி), ரூப்சந்த் ஹன்ஸ்டா(சந்தாலி), நிகிலேஷ்வா்(தெலுங்கு) ஆகியோா் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளனா்.

நாடக நூல்களுக்காக, கியான் சிங் (டோக்ரி), ஜேதோ லால்வானி(சிந்தி) ஆகிய இருவருக்கு விருது வழங்கப்படவுள்ளது.

அனுபவக் குறிப்பு நூலுக்காக, வங்க மொழி எழுத்தாளா் மணிசங்கா் முகோபாத்யாய தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளாா் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மலையாளம், நேபாளி, ஒடியா, ராஜஸ்தானி ஆகிய மொழிகளில் வெளிவந்த படைப்புகளுக்கு பின்னா் விருது அறிவிக்கப்படும். சாகித்ய அகாதெமி விருதுக்கு தோ்ந்தெடுக்கப்பட்டிருப்பவா்களுக்கு ரூ.1 லட்சம் ரொக்கத்துடன் தாமிர கேடயம் பரிசளிக்கப்படும். விருது வழங்கும் விழா நடைபெறும் தேதி பின்னா் அறிவிக்கப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com