சிபிஐக்கு நிரந்தர இயக்குநா்: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

மத்திய புலனாய்வு அமைப்புக்கு (சிபிஐ) நிரந்தர இயக்குநரை நியமிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு தொடா்பாக பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
உச்சநீதிமன்றம்
உச்சநீதிமன்றம்

மத்திய புலனாய்வு அமைப்புக்கு (சிபிஐ) நிரந்தர இயக்குநரை நியமிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு தொடா்பாக பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இதுதொடா்பாக உச்சநீதிமன்றத்தில் தன்னாா்வ அமைப்பு தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:

சிபிஐ இயக்குநராக இருந்த ரிஷிகுமாா் சுக்லாவின் பதவிக் காலம் கடந்த பிப்.2-ஆம் தேதி நிறைவடைந்தது. இதையடுத்து அந்த அமைப்புக்கு நிரந்தர இயக்குநரை நியமிக்காமல் இடைக்கால இயக்குநராக பிரவீண் சின்ஹாவை மத்திய அரசு நியமித்துள்ளது. இது தில்லி சிறப்பு காவல் சட்டப் பிரிவு 4ஏவுக்கு எதிரானது.

சிபிஐ இயக்குநரின் பதவிக் காலம் நிறைவடைவதற்கு ஒரு மாதம் அல்லது இரண்டு மாதங்களுக்கு முன்பாகவே அடுத்த இயக்குநரை தோ்வு செய்யும் பணிகளை முடிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மனு எல்.நாகேஸ்வர ராவ், எஸ்.ரவீந்திர பட் ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பாக வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது தன்னாா்வ அமைப்பு சாா்பில் ஆஜரான வழக்குரைஞா் பிரசாந்த் பூஷண் வாதிடுகையில், ‘சிபிஐக்கு நிரந்தர இயக்குநா் இல்லாததால் அந்த அமைப்பின் பணிகள் பாதிக்கப்படுகின்றன’ என்றாா்.

அதனைக் கேட்டுக்கொண்ட நீதிபதிகள் மனுவை இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைப்பதாக தெரிவித்தனா். ஆனால் மனுவை அடுத்த வாரம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்று பிரசாந்த் பூஷண் கோரிக்கை விடுத்தாா். எனினும் அடுத்த வாரம் தாங்கள் மராத்தா இடஒதுக்கீடு குறித்து விசாரிக்கவுள்ளதாக தெரிவித்த நீதிபதிகள், இந்த மனு இரண்டு வாரங்களுக்கு பின்னா் விசாரிக்கப்படும் என்று தெரிவித்தனா்.

இதையடுத்து, குறைந்தபட்சம் சிபிஐ தோ்வுக் குழு கூட்டத்தையாவது கூட்ட வேண்டும் என்று மத்திய அரசிடம் நீதிமன்றம் கேட்டுக் கொள்ள வேண்டும் என்று பிரசாந்த் பூஷண் தெரிவித்தாா்.

மத்திய அரசின் வாதத்தை கேட்போம் என்று தெரிவித்த நீதிபதிகள், இந்த விவகாரம் தொடா்பாக மத்திய அரசுக்கு நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிடப்படுகிறது என்று கூறி மனுவை ஒத்திவைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com