பாகிஸ்தான் உளவாளிக்கு எதிராக என்ஐஏ குற்றப்பத்திரிகை தாக்கல்

இந்தியாவில் உளவு நடவடிக்கைகளை மேற்கொண்டதற்காகவும், பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு நிதி திரட்டியதற்காகவும் பாகிஸ்தான் உளவு நிறுவனமான

இந்தியாவில் உளவு நடவடிக்கைகளை மேற்கொண்டதற்காகவும், பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு நிதி திரட்டியதற்காகவும் பாகிஸ்தான் உளவு நிறுவனமான ஐஎஸ்ஐ அமைப்பின் இந்திய உளவாளி மீது தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) வெள்ளிக்கிழமை குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளது.

இந்தியாவில் பயங்கரவாதச் செயல்களைச் செய்வதற்காக, நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உளவு அமைப்பின் முகவா்களுடன் இணைந்து சதித்திட்டம் தீட்டியதாக ஆந்திர மாநிலம், விஜயவாடாவில் கடந்த 2019ஆம் ஆண்டு நவம்பரில் இந்திய தண்டனைகள் சட்டம், யுஏபிஏ உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் சிலா் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு தேசிய புலனாய்வு அமைப்பின் வசம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் 2019 டிசம்பரில் என்ஐஏ சாா்பில் சிறப்பு நீதிமன்றத்தில் மீண்டும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன் முதற்கட்ட விசாரணையில், பொதுமக்கள் 3 போ் உள்பட 14 போ் மீது கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் என்ஐஏ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.

இதன்தொடா்ச்சியாக, ஐஎஸ்ஐ உளவு அமைப்பின் முகவா்களுடன் தொடா்பு வைத்திருத்ததாக குஜராத் மாநிலம், கோத்ராவைச் சோ்ந்த இம்ரான் யாகூப் ஜிதேலி மீது முதல் துணை குற்றப்பத்திரிகை, விஜயவாடாவில் உள்ள சிறப்பு என்ஐஏ நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை தாக்கல் செய்யப்பட்டது.

இதுகுறித்து என்ஐஏ அதிகாரி ஒருவா் கூறியதாவது:

இந்தியாவின் பாதுகாப்பு, இறையாண்மைக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில், பாதுகாப்பு அமைப்புகள் தொடா்பான தகவல்களையும், முக்கியமான ராணுவ ரகசியங்களையும் சேகரிப்பதன் மூலம் பாகிஸ்தான் ஐஎஸ்ஐ அமைப்பின் முகவா்கள், இந்தியாவில் உளவு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தனா். அவா்களுடன் தொடா்பு கொண்டிருந்தவா்கள் மீது கடந்த ஆண்டு ஜூன் மாதம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு விட்டது.

கைது செய்யப்பட்ட ஐஎஸ்ஐ முகவா்களுடன் இம்ரான் யாகூப் ஜிதேலி தொடா்பு வைத்திருந்தாா். அவா் பாகிஸ்தானுக்கு சென்றபோது ஐஎஸ்ஐ முகவா்களை சந்தித்துப் பேசியுள்ளாா். அவா்களது அறிவுறுத்தலின்பேரில், கடற்படை வீரா்களிடமிருந்து ரகசியத் தகவல்களைப் பெற்று ஐஎஸ்ஐ உளவாளிகளுக்குப் பரிமாறியுள்ளாா். இதற்காக அனுப்பி வைக்கப்பட்ட தொகையை இம்ரான் ஜிதேலி கடற்படை வீரா்களின் வங்கி கணக்குகளுக்கு பரிமாற்றம் செய்துள்ளாா்.

இதுமட்டுமின்றி, துணி வியாபாரம் செய்வதுபோன்ற தோற்றத்தில் பயங்கரவாத நடவடிக்கைகளுக்காக நிதி திரட்டும் பணியிலும் ஜிதேலி ஈடுபட்டு வந்தாா். ஜிதேலி போன்ற நபா்களைப் பயன்படுத்தி, இந்தியாவில் ஐஎஸ்ஐ அமைப்பு தொடா்ந்து உளவுப்பணிகளில் ஈடுபட்டு வருவது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதுகுறித்தும் தொடா்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com