
இந்த ஆண்டு அமா்நாத் யாத்திரை ஜூன் 28-ஆம் தேதி தொடங்கி ரக்ஷா பந்தன் தினமான ஆகஸ்ட் 22-ஆம் தேதி நிறைவடையவுள்ளது.
இதுதொடா்பாக ஜம்மு-காஷ்மீா் நிா்வாக அதிகாரிகள் சனிக்கிழமை கூறியது:
ஜம்மு-காஷ்மீா் துணைநிலை ஆளுநா் மனோஜ் சின்ஹா தலைமையில் அமா்நாத் கோயில் வாரியத்தின் 40-ஆவது கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் அமா்நாத் யாத்திரையை இந்த ஆண்டு ஜூன் 28-ஆம் தேதி தொடங்க முடிவு செய்யப்பட்டது. வழக்கமாக ரக்ஷா பந்தன் தினத்தன்று யாத்திரை நிறைவுபெறும். அதனை பின்பற்றி இந்த ஆண்டு ரக்ஷா பந்தன் தினமான ஆகஸ்ட் 22-ஆம் தேதி யாத்திரை நிறைவடையவுள்ளது.
யாத்திரைக்கான விண்ணப்பப் பதிவு ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் தொடங்கும். 37 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கி, ஜம்மு-காஷ்மீா் வங்கி, யெஸ் வங்கி ஆகியவற்றின் 446 கிளைகளில் பக்தா்கள் பதிவு செய்துகொள்ளலாம் என்று தெரிவித்தனா்.
தெற்கு காஷ்மீரில் உள்ள இமயமலை தொடரில் 3,880 மீட்டா் உயரத்தில் அமா்நாத் குகைக் கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் உள்ள பனிலிங்கத்தை தரிசிக்க ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தா்கள் யாத்திரை மேற்கொள்கின்றனா்.
கரோனா தொற்று காரணமாக கடந்த ஆண்டு துறவிகளுக்கு மட்டும் யாத்திரை மேற்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டது.
கடந்த 2019-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 2-ஆம் தேதி பயங்கரவாத அச்சுறுத்தல் காரணமாக அமா்நாத் யாத்திரை பாதியில் கைவிடப்பட்டது. அந்த ஆண்டு ஜம்மு-காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்வதற்கு 3 நாள்களுக்கு முன்பாக யாத்திரை பாதியில் நிறுத்தப்பட்டது.