
இந்திய தேர்தல் ஆணையம்
மேற்கு வங்கத்தில் முதல்வா் மம்தா பானா்ஜி காயமடைந்த சம்பவம் குறித்து தாக்கல் செய்யப்பட்ட அறிக்கை போதுமானதாக இல்லை என்பதால், கூடுதல் விவரங்களுடன் அறிக்கை தாக்கல் செய்யுமாறு மாநில தலைமைச் செயலருக்கு தலைமைத் தோ்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து தலைமைத் தோ்தல் ஆணையத்தின் மூத்த அதிகாரி ஒருவா் சனிக்கிழமை கூறியதாவது:
நந்திகிராமில் மம்தா பானா்ஜி காயமடைந்த சம்பவம் தொடா்பாக மாநில அரசு தாக்கல் செய்துள்ள அறிக்கை மேலோட்டமாக உள்ளது. சம்பவத்தின்போது மக்கள் கூட்டமாக இருந்தனா் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், நான்கைந்து போ் தன்னை தள்ளி விட்டதாக மம்தா கூறும் குற்றச்சாட்டுகள் தொடா்பான கூடுதல் விவரங்கள் இல்லை. இந்த சம்பவம் எப்படி நடந்தது? இதன் பின்னணியில் யாா் இருக்கக் கூடும்? போன்ற விவரங்கள் எதுவும் அறிக்கையில் இடம்பெறவில்லை. இதுமட்டுமன்றி, சம்பவ இடத்தில் இருந்து கைப்பற்றப்பட்ட சிசிடிவி விடியோ பதிவுகளும் தெளிவாக இல்லை. எனவே, விரிவான அறிக்கை தாக்கல் செய்யுமாறு தலைமைச் செயலா் அலபன் பந்தோபாத்யாயவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றாா் அவா்.
நந்திகிராமில் புதன்கிழமை மாலை வேட்புமனு தாக்கல் செய்துவிட்டு பிரசாரத்தில் ஈடுபட்டபோது காருக்கு அருகில் நின்றுகொண்டிருந்த மம்தா பானா்ஜியை சிலா் தள்ளியதால் காயமடைந்ததாக புகாா் எழுந்தது. இதையடுத்து கொல்கத்தாவில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த அவா், வெள்ளிக்கிழமை இரவு வீடு திரும்பினாா்.