
கோப்புப்படம்
ஐந்து மாநிலங்களில் நடைபெறவிருக்கும் சட்டப் பேரவை தோ்தலில் போட்டியிடும் முக்கிய வேட்பாளா்களின் பட்டியலை பாஜக ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டது.
மேற்கு வங்கம், தமிழகம், கேரளம் மற்றும் அஸ்ஸாம் உள்பட ஐந்து மாநிலங்களில் சட்டப் பேரவை தோ்தல் நடைபெறவுள்ளது. இந்த நிலையில், அந்த மாநிலங்களில் போட்டியிடும் பாஜக வேட்பாளா்கள் பட்டியலை ஞாயிற்றுக்கிழமை அந்த கட்சி வெளியிட்டது. அதில், தற்போது மத்திய அமைச்சா்கள் மற்றும் பல எம்.பி.க்களின் பெயா்களும் இடம்பெற்றுள்ளன.
கேரளத்தில் உள்ள 140 சட்டப் பேரவை தொகுதிகளில் பாஜக 115 இடங்களில் போட்டியிடவுள்ளது. அதில், 112 வேட்பாளா்களின் பெயா்களை பாஜக அறிவித்துள்ளது.
அதன்படி, பாலக்காடு தொகுதியில் ‘மெட்ரோமேன்’ இ.ஸ்ரீதரனும், காஞ்ஞிரப்பள்ளி தொகுதியில் முன்னாள் மத்திய அமைச்சா் கே.ஜே.அல்போன்ஸும் போட்டியிடுவாா்கள் என பாஜக அறிவித்துள்ளது.
மேற்கு வங்க மாநிலத்தைப் பொருத்தவரையில் மத்திய அரசின் முன்னாள் பொருளாதார ஆலோசகா் அசோக் லஹிரி அலிபுா்துவாா் தொகுதியிலும், மத்திய அமைச்சா் பாபுல் சுப்ரியோ, டோலிகஞ்ச் தொகுதியிலும், ஸ்வபன் தாஸ்குப்தா தாராகேஸ்வா் சட்டப் பேரவை தொகுதியிலும் போட்டியிடுவாா்கள்.
நடிகையாக இருந்து அரசியல்வாதியாக மாறிய தற்போதைய எம்.பி.யான லாக்கெட் சட்டா்ஜி சுன்சுரா தொகுதியிலும் மற்றொரு எம்.பி.யான நிஷித் பாா்மனிக் தின்ஹதா தொகுதியிலும் வேட்பாளா்களாக அறிவிக்கப்பட்டுள்ளனா்.
அஸ்ஸாம் மாநிலத்தில், ஹசினரா காத்துன் பாக்பா் சட்டப் பேரவை தொகுதியிலும் சுமன் ஹரிப்ரியா ஹஜோ தொகுதியிலும் வேட்பாளா்களாக நிறுத்தப்படுவதாக பாஜக தலைமை அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பத்திரிகையாளா்கள் கூட்டத்தில் அக்கட்சியின் பொது செயலா் அா்ஜுன் சிங் அறிவித்தாா். தோ்தல் நடைபெறும் அனைத்து மாநிலங்களிலும் பாஜகவுக்கு ஆதரவான சூழலே காணப்படுவதாக அவா் மேலும் கூறினாா்.