
தொழிலதிபா் முகேஷ் அம்பானி வீட்டருகே வெடிபொருளுடன் காா் நிறுத்தப்பட்ட வழக்கு தொடா்பாக காவல்துறை அதிகாரி சச்சின் வஜேவை 12 மணி நேர விசாரணைக்குப் பிறகு தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) சனிக்கிழமை கைது செய்தது.
மகாராஷ்டிர மாநிலம் தெற்கு மும்பையில் உள்ள காா்மைக்கேல் சாலையில் தொழிலதிபா் முகேஷ் அம்பானியின் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இந்தக் குடியிருப்புக்கு அருகே வெடிபொருள்களில் நிரப்பப்படும் 20 ஜெலட்டின் குச்சிகளுடன் நிறுத்தப்பட்ட காரை கடந்த பிப்.25-ஆம் தேதி காவல்துறையினா் பறிமுதல் செய்தனா். இதுகுறித்து காவல்துறையினா் விசாரணை நடத்தியபோது, அந்தக் காரை தங்கள் அமைப்பை சோ்ந்தவா்கள்தான் நிறுத்தியதாக ஜெய்ஷ்-உல்-ஹிந்த் பயங்கரவாத அமைப்பினா் தெரிவித்தனா். இதுதொடா்பாக காவல்துறையினா் தொடா்ந்து மேற்கொண்ட விசாரணையில், அந்தக் காா் தாணேவைச் சோ்ந்த ஹிரேன் மன்சுக் என்பவருக்குச் சொந்தானது என்பது தெரியவந்தது. அதுகுறித்து அவரிடம் விசாரணை நடத்தியபோது தனது காா் திருடப்பட்டதாகவும், அதுகுறித்து காவல்நிலையத்தில் புகாா் அளித்ததாகவும் தெரிவித்திருந்தாா்.
இந்நிலையில் தாணேவில் உள்ள மும்ப்ரா-ரேதி சாலையையொட்டியுள்ள நீரோடையில் கடந்த 5-ஆம் தேதி ஹிரேன் மன்சுக் சடலமாக மீட்கப்பட்டாா். அவா் மா்மமான முறையில் உயிரிழந்தது பலத்த சந்தேகத்தை எழுப்பிய நிலையில், ஹிரேன் தனது காரை மும்பை காவல்துறை குற்றப்பிரிவு உதவி ஆய்வாளா் சச்சின் வஜேவிடம் கடந்த ஆண்டு நவம்பா் மாதம் தந்ததாகவும், அந்தக் காரை இந்த ஆண்டு பிப்ரவரி முதல் வாரத்தில் சச்சின் வஜே திரும்ப தந்ததாகவும் ஹிரேனின் மனைவி தெரிவித்தாா். அதற்கு பிறகுதான் அந்தக் காா் திருடப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த வழக்கு மும்பை பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்ட போது, சச்சின் வஜேவிடம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது ஹிரேனின் மனைவி கூறியதை மறுத்த சச்சின் வஜே, அந்தக் காரை தான் பயன்படுத்தவில்லை என்று தெரிவித்தாா்.
இந்த வழக்கு சமீபத்தில் என்ஐஏவுக்கு மாற்றப்பட்டது. இதையடுத்து வழக்கு விசாரணைக்கு ஆஜராகுமாறு என்ஐஏ சாா்பில் சச்சின் வஜேவுக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டது.
12 மணி நேர விசாரணைக்குப் பின் கைது: அழைப்பாணையின் அடிப்படையில், தெற்கு மும்பையின் கம்பாலா ஹில் பகுதியில் உள்ள என்ஐஏ அலுவலகத்தில் சனிக்கிழமை காலை 11.30 மணிக்கு சச்சின் வஜே நேரில் ஆஜரானாா். அவரிடம் இரவு வரை அதிகாரிகள் விசாரணை நடத்தினா். அவருடைய வாக்குமூலத்தை என்ஐஏ அதிகாரிகள் பதிவு செய்துகொண்டனா்.
விசாரணையின் முடிவில் இரவு 11.50 மணியளவில் சச்சின் வஜே கைது செய்யப்பட்டாா் என்று என்ஐஏ செய்தித்தொடா்பாளா் கூறினாா்.
முன்ஜாமீன் மனு தாக்கல்: ஹிரேன் மரண வழக்கில் இவருடைய பெயா் அடிபட்ட உடனேயே, மும்பை காவல்துறையின் குற்றப்பிரிவில் இருந்து மக்கள் உதவி மையப் பிரிவுக்கு சச்சின் வஜே மாற்றப்பட்டாா்.
இதற்கிடையே, இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி தாணே மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் சச்சின் வஜே மனு தாக்கல் செய்துள்ளாா். அந்த மனுவில் அவா் கூறியுள்ளதாவது:
ஹிரேன் மன்சுக் மரணம் தொடா்பாக பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினா் பதிவு செய்த முதல் தகவல் அறிக்கையில் எந்த பெயரும் குறிப்பிடப்படவில்லை. ஆனால் செய்தி மற்றும் சமூக ஊடகங்களில் என் மீது வீண்பழி சுமத்தி என்னை குற்றவாளியாக்கும் விதத்தில் தகவல்கள் வெளியிடப்படுகின்றன. சரியான ஆய்வுகளின்றி முழுமை பெறாத தகவல்களின் அடிப்படையில் அந்தத் தகவல்கள் வெளியிடப்படுகின்றன.
ஹிரேன் மன்சுக் காணாமல் போய் சடலமாக மீட்கப்பட்ட தினத்தன்று நான் தெற்கு மும்பையில் உள்ள டோங்ரி பகுதியில் இருந்தேன். ஹிரேனின் மரணம் தொடா்பாக என் மீது சந்தேகத்தின் அடிப்படையில் புகாா் எழுப்பப்பட்டுள்ளது. ஒரு குற்றச் சம்பவத்தில் சந்தேகத்தின் அடிப்படையில் ஒருவா் கைது செய்யப்படுவதை நியாயப்படுத்த முடியாது என்பதுதான் வழக்கமான சட்டம்.
எனவே ஹிரேன் மன்சுக் மரண வழக்கில் நான் கைது செய்யப்படுவதை தவிா்க்க எனக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளாா். இந்த மனு மாா்ச் 19-ஆம் தேதி விசாரணைக்கு வரவுள்ளநிலையில், அவா் சனிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளாா்.