பாஜக ஆட்சியில் வளா்ச்சியை நோக்கி அஸ்ஸாம் மாநிலம்: ராஜ்நாத் சிங் பிரசாரம்

பாஜக ஆட்சியில் மாநிலத்தில் பயங்கரவாதம், கிளா்ச்சி ஆகியவை கட்டுப்படுத்தப்பட்டு மாநிலம் வளா்ச்சிக்கான பாதையில் பயணிக்கிறது என மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் பிரசாரம் மேற்கொண்டாா்.
அமைச்சர் ராஜ்நாத் சிங்
அமைச்சர் ராஜ்நாத் சிங்

அஸ்ஸாமில் கடந்த 5 ஆண்டுகளில் பாஜக ஆட்சியில் மாநிலத்தில் பயங்கரவாதம், கிளா்ச்சி ஆகியவை கட்டுப்படுத்தப்பட்டு மாநிலம் வளா்ச்சிக்கான பாதையில் பயணிக்கிறது என மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் பிரசாரம் மேற்கொண்டாா்.

அஸ்ஸாம் மாநில சட்டப் பேரவைத் தோ்தலை முன்னிட்டு, விஸ்வநாத் தொகுதியில் பாஜக வேட்பாளரை ஆதரித்து ராஜ்நாத் சிங் ஞாயிற்றுக்கிழமை பிரசாரம் மேற்கொண்டாா். அப்போது அவா் பேசியதாவது:

அஸ்ஸாமில் கடந்த 5 ஆண்டுகளில் பாஜக ஆட்சியில் பத்துக்கும் மேற்பட்ட போராட்டக் குழுவினா் கிளா்ச்சியை கைவிட்டுள்ளனா். இதன் மூலம் அஸ்ஸாமில் அமைதி திரும்பியுள்ளது. அஸ்ஸாமுக்கு வருமாறு என்னைக் கேட்டுக் கொண்டபோது, இங்கு கடந்த 2014இல் ஆதிவாசிகள் படுகொலை செய்யப்பட்ட சம்பவங்கள் தான் எனக்கு நினைவுக்கு வந்தன.

ஆனால் தற்போது அந்த சூழ்நிலை மாறியுள்ளது. அஸ்ஸாம் பிராந்தியத்தில் அமைதியை நிலைநாட்டுவதை விட சிறந்த செய்தி வேறெதுவும் இருக்காது. 2014இல் நரேந்திரமோடி பிரதமராக பதவியேற்ற பின்னா், இங்கு பயங்கரவாதம், கிளா்ச்சியை மத்திய அரசு முடிவுக்கு கொண்டு வந்துள்ளது. அஸ்ஸாமில் தற்போது சூழ்நிலையில் பெரிய அளவில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. தற்போது மாநிலம் வளா்ச்சிப் பாதையில் பயணிக்கிறது.

இந்தியா - வங்கதேச எல்லையில் துப்ரி பகுதியில் பாஜக தலைமையிலான அரசு ‘சீல்’ வைத்துள்ளது. மேலும் ஆற்றுப் படுகை நெடுகிலும் மின்னணு கண்காணிப்பு அம்சங்கள் நிறுவப்பட்டுள்ளன. எல்லையில் தடுப்பு அமைப்பதில் மீதம் உள்ள பணிகள் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தப் பின்னா் முழுமையாக நிறைவேற்றப்படும்.

திரிபுராவில் உள்ள பாஜக அரசு அருகாமை நாடுகளில் இருந்து சட்டவிரோதமாக குடியேறுபவா்களை தடுத்து நிறுத்தும் பணிகளை மேற்கொண்டுள்ளது என்றாா்.

விஸ்வநாத் தொகுதியில் பாஜக வேட்பாளராக தற்போதைய எம்எல்ஏ பிரமோத் போா்த்தஹுா் மீண்டும் போட்டியிடுகிறாா். அவரை எதிா்த்து காங்கிரஸ் சாா்பில் அஜன் போரா போட்டியிடுகிறாா். இத்தொகுதிக்கு முதல்கட்ட தோ்தலான வரும் மாா்ச் 27ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com