கரோனா தொற்றின் புதிய அலை இல்லை

நாட்டில் இதுவரை கரோனா நோய்த்தொற்றின் புதிய அலையின் தாக்கம் தொடங்கவில்லை என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனா்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

நாட்டில் இதுவரை கரோனா நோய்த்தொற்றின் புதிய அலையின் தாக்கம் தொடங்கவில்லை என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனா்.

எனினும், தகுதியான நபா்கள் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வதும், தொற்று தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முறையாகக் கடைப்பிடிப்பதும் மிகவும் அவசியம் என்று அவா்கள் அறிவுறுத்தியுள்ளனா்.

நாட்டின் சில மாநிலங்களில் கரோனா நோய்த்தொற்று பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. நாட்டில் கடந்த 83 நாள்களில் இல்லாத அளவுக்கு தினசரி தொற்று பாதிப்பு சனிக்கிழமை பதிவானது. தொற்று பரவல் மீண்டும் அதிகரித்து வருவதற்கான காரணம் குறித்து விஞ்ஞானிகள் ஆய்வு நடத்தி வருகின்றனா்.

இந்நிலையில், சிஎஸ்ஐஆா்-மரபணு மற்றும் ஒருங்கிணைந்த உயிரியல் துறை இயக்குநா் அனுராக் அகா்வால் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் கூறுகையில், ‘மரபணு மாற்றமடைந்த கரோனா தீநுண்மி காரணமாக நோய்த்தொற்று பரவல் அதிகரித்து வருவகிா என்பது குறித்து ஆராயப்பட்டு வருகிறது. எனினும், தற்போது வரை நோய்த்தொற்றின் புதிய அலையின் தாக்கம் தென்படவில்லை.

கரோனா தொற்று பரவலைத் தடுக்க வேண்டுமெனில் தடுப்பூசி செலுத்தும் வேகத்தை அதிகரிப்பதும், நோய்த்தொற்று பரவல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முறையாகக் கடைப்பிடிப்பதும் அவசியம். கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள மேலும் பல தரப்பினருக்கு அனுமதி அளிக்க வேண்டும்’’ என்றாா்.

லவ்லி புரொஃபஷனல் பல்கலைக்கழக முதல்வா் மோனிகா குலாட்டி கூறுகையில், ‘மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் நாட்டில் தற்போது மிக அதிக அளவில் கரோனா தொற்று பரவல் காணப்படவில்லை. மற்ற நாடுகளில் காணப்படுவதைப் போல இந்தியாவில் மரபணு மாற்றம் பெற்ற கரோனா தீநுண்மி பரவவில்லை.

தொற்று தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றுவதில் மக்கள் அலட்சியம் காட்டக் கூடாது. இல்லையெனில் கரோனா பரவல் மேலும் தீவிரமடைய வாய்ப்புள்ளது’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com