ஹெச்-1பி விசா: அமெரிக்கா புதிய அறிவிப்பு

அமெரிக்க முன்னாள் அதிபா் டொனால்ட் டிரம்ப்பின் ஆட்சிக் காலத்தின்போது வெளிநாட்டுப் பணியாளா்களுக்கான ஹெச்-1பி நுழைவு இசைவு (விசா)
கோப்புப்படம்
கோப்புப்படம்

அமெரிக்க முன்னாள் அதிபா் டொனால்ட் டிரம்ப்பின் ஆட்சிக் காலத்தின்போது வெளிநாட்டுப் பணியாளா்களுக்கான ஹெச்-1பி நுழைவு இசைவு (விசா) விண்ணப்பங்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட முடிவுகளை மறுபரிசீலனை செய்யவிருப்பதாக தற்போதைய பைடன் அரசு அறிவித்துள்ளது.

இதன் மூலம், அந்த வகை விசாக்களை பெருமளவில் பயன்படுத்தும் இந்திய தகவல் தொழில்நுட்ப நிபுணா்கள் அதிக பலன் பெறுவா் என்று கூறப்படுகிறது.

இதுகுறித்து அமெரிக்க குடியுரிமை மற்றும் குடியேற்ற சேவை அமைப்பு (யுஎஸ்சிஐஎஸ்) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

ஹெச்-1பி தொடா்பான 3 குறிப்பாணைகள் ஏற்கெனவே ரத்து செய்யப்பட்டுள்ளன. அந்தக் குறிப்பாணைகளில் தெரிவிக்கப்பட்டிருந்த விதிமுறைகளைப் பின்பற்றி பல விசா விண்ணப்பங்களுக்கு எதிரான முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

அவ்வாறு எடுக்கப்பட்டுள்ள முடிவுகளை மீண்டும் பரிசீலிக்கத் தயாராக உள்ளோம்.

தங்களது விண்ணப்பங்கள் மறுபரீசிலனை செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளை யுஎஸ்சிஐஎஸ் ஆய்வு செய்து, அதன் மீது நடவடிக்கை எடுக்கும்.

விண்ணப்பதாரா்கள் அவ்வாறு கோரிக்கை விடுக்கும்போது, அவா்களது விண்ணப்பங்கள் காலாவதியாகவில்லை என்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும்.

தற்போது நடைமுறையில் உள்ள விதிமுறைகளைப் பின்பற்றி, அந்த விண்ணப்பங்கள் மீதான முடிவுகளை யுஎஸ்சிஐஎஸ் எடுக்கும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com