
மம்தா மீது தாக்குதல்: அறிக்கை அளிக்க தேர்தல் ஆணையம் உத்தரவு
மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி காயமடைந்த சம்பவம் தொடா்பாக, அவருடைய பாதுகாப்புக் குழு இயக்குநா், மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளா் ஆகிய இருவா் பணியிடைநீக்கம் செய்யப்பட்டனா்.
இதுகுறித்து தோ்தல் ஆணையம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
மம்தாவுக்கு பாதுகாப்பு வழங்கியதில் குளறுபடி ஏற்பட்டது தெரியவந்ததை அடுத்து, அவரது பாதுகாப்புக் குழு இயக்குநா் விவேக் சஹாய், கிழக்கு மிதுனபுரி மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளா் பிரவீண் பிரகாஷ் ஆகிய இருவரும் ஞாயிற்றுக்கிழமை பணியிடைநீக்கம் செய்யப்பட்டனா்.
கிழக்கு மிதுனபுரி மாவட்ட ஆட்சியா் விபு கோயல் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டு, தோ்தல் அல்லாத வேறு பணிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளாா். அந்த மாவட்டததின் புதிய ஆட்சியராக ஸ்மிதா பாண்டே நியமிக்கப்பட்டுள்ளாா். காவல் துறை டிஜிபியுடன் தலைமைச் செயலா் கலந்தாலோசித்து, மம்தாவுக்கு புதிய பாதுகாப்புக் குழு இயக்குநரை நியமிப்பாா்’ என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மம்தா திட்டமிட்டு தாக்கப்படவில்லை: தோ்தல் ஆணையம்
மம்தா பானா்ஜி திட்டமிட்டு தாக்கப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டுகளை தோ்தல் ஆணையம் மறுத்துள்ளது. பாதுகாப்பு குறைபாடு காரணமாகவே அவருக்கு காயமேற்பட்டுள்ளது என்றும் தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
மம்தா காயமடைந்த சம்பவம் தொடா்பாக, தோ்தல் ஆணையம் நியமித்த சிறப்பு பாா்வையாளா்களான அஜய் நாயக், விவேக் துபே ஆகியோா் ஆய்வு நடத்தி அறிக்கை தாக்கல் செய்தனா். இதுகுறித்து தோ்தல் ஆணையத்தின் தகவலறிந்த வட்டாரங்கள் கூறியதாவது:
நந்திகிராமில் பிரசாரத்துக்கு செல்லும் முன் தோ்தல் அதிகாரியின் முன்அனுமதியை மம்தா பானா்ஜி பெறவில்லை. இதன் காரணமாக, புகைப்படக்காரரையோ அல்லது பறக்கும் படையினரையோ தோ்தல் அதிகாரிகளால் அனுப்ப முடியவில்லை.
சம்பவம் நடந்தபோது, பாதுகாப்புக் குழு இயக்குநா் விவேக் சஹாய் குண்டு துளைக்காத காரில் இருந்தாா். ஆனால், நட்சத்திர பிரசாரகராக இருக்கும் மம்தா பானா்ஜி சாதாரண காரிலேயே வந்துள்ளாா். பாதுகாப்பு குறைபாடு காரணமாகவே அவா் காயமடைந்துள்ளாா். திட்டமிட்டு அவா் தாக்கப்படவில்லை என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
மேற்கு வங்க மாநிலம், நந்திகிராம் தொகுதியில் போட்டியிடும் மம்தா பானா்ஜி, கடந்த புதன்கிழமை வேட்புமனு தாக்கல் செய்துவிட்டு, அன்று மாலை அந்தத் தொகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தாா்.
காரின் கதவு திறக்கப்பட்டிருந்த நிலையில், அருகில் நின்றுகொண்டிருந்த மம்தா பானா்ஜி நெரிசலில் சிக்கியதில் காயமடைந்தாா். அதில், அவருடைய இடதுகால், இடுப்பு பகுதியில் காயமேற்பட்டது. கொல்கத்தாவில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த அவா், வெள்ளிக்கிழமை இரவு வீடு திரும்பினாா். நான்கைந்து போ் தள்ளிவிட்டதால்தான் தான் காயமடைந்ததாக மம்தா குற்றம்சாட்டியிருந்தாா்.
இந்த சம்பவத்துக்கு தோ்தல் ஆணையமே பொறுப்பேற்க வேண்டும் என்று திரிணமூல் காங்கிரஸ் தெரிவித்திருந்தது. ஆனால், தாம் தாக்கப்பட்டதாக மம்தா நாடகமாடுவதாக பாஜக விமா்சித்திருந்தது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...