பினராயி விஜயனுக்கு எதிராக பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்ட சிறுமிகளின் தாய் போட்டி

கேரளத்தில் பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கட்டு நீதி கிடைக்காத சகோதரிகளின் தாய், பேரவைத் தேர்தலில்  முதல்வர் பினராயி விஜயனுக்கு எதிராக போட்டியிடுவதாக அறிவித்துள்ளார்.  
கோப்புப்படம்
கோப்புப்படம்


கேரள மாநிலம் வாளையாரில் கடந்த 2017-ம் ஆண்டு பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்டு தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட சகோதரிகளின் தாய் பேரவைத் தேர்தலில் அந்த மாநில முதல்வர் பினராயி விஜயனுக்கு எதிராக போட்டியிடுவதாக அறிவித்துள்ளார்.

இதுபற்றி திருச்சூரில் செய்தியாளர்களிடம் அவர் கூறியது:

"துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கப்பட்டு நீதி மறுக்கப்பட்ட அனைத்து குழந்தைகளின் பெற்றோர்கள் சார்பில் முதல்வருக்கு எதிராகப் போட்டியிடுகிறேன். இது அனைத்து தாய்மார்களுக்குமானது.

முதல்வரிடம் நீதி கேட்க வேண்டும். அதனால்தான் அவருக்கு எதிராக களமிறங்குகிறேன். இந்த வழக்கில் நீதி வழங்கப்படும் என முதல்வர் எங்களுக்கு உறுதியளித்திருந்தார். ஆனால், நீதி கிடைக்கவில்லை.

மாறாக, இந்த வழக்கில் விசாரணைக்கு முட்டுக்கட்டை போட்ட காவல் துறை அதிகாரிகளுக்கு பதவி உயர்வு கிடைத்தது. நீதி கேட்பதற்கு இதுவே சரியான நேரம்.

சங் பரிவார் அமைப்புகளைத் தவிர்த்து முதல்வருக்கு எதிராகப் போராடும் எந்தக் கட்சியின் ஆதரவாக இருந்தாலும் அதை ஏற்றுக்கொள்வேன்" என்றார் அவர்.

இவர் பினராயி விஜயன் களமிறங்கும் கண்ணூரிலுள்ள தர்மடம் தொகுதியில் போட்டியிடுகிறார்.

பாதிக்கப்பட்ட சிறுமிகள் மற்றும் வழக்கு விவரம்:

கேரள மாநிலம் வாளையாரில் கடந்த 2017-ம் ஆண்டு ஜனவரி மாதம் 11 வயது தலித் சிறுமி தனது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். அவரது 9 வயது தங்கையும் இரு மாதங்களில் இதேபோன்று தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார்.

பிரேதப் பரிசோதனையில் இருவரும் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டது தெரியவந்தது. இதுதொடர்பாக, காவல் துறை 4 பேரைக் கைது செய்தது. ஆனால், குற்றம்சாட்டப்பட்ட நால்வரையும் சிறப்பு நீதிமன்றம் 2019-இல் விடுவித்தது.

இந்த சம்பவம் அரங்கேறி 4 ஆண்டுகள் ஆன நிலையிலும் இன்னும் நீதி கிடைக்கவில்லை என பாதிக்கப்பட்ட சிறுமிகளின் தாய் குற்றம்சாட்டியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com