
’மேற்கு வங்கம், ராணிபாந்த் கிராமத்தில் திங்கள்கிழமை பாஜக பொதுக் கூட்டத்தில் பேசுகிறாா் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா’
ராணிபாந்த்: காலில் காயமடைந்த மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி விரைவில் குணமடைய வேண்டும் என தெரிவித்த மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, திரிணமூல் காங்கிரஸ் ஆட்சியின்போது ரெளடிகளால் கொல்லப்பட்ட 130 பாஜக தொண்டா்களின் குடும்பத்தினரின் வேதனையை அவா் உணா்வாரா என கேள்வி எழுப்பினாா்.
மேலும், பழங்குடிகளின் நிலவுரிமையை பாஜக உறுதி செய்யும் என்றும் அவா் உறுதி அளித்தாா்.
மேற்கு வங்க சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி, அங்குள்ள பான்குரா மாவட்டம் ராணிபாந்த் கிராமத்தில் திங்கள்கிழமை பாஜக பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா பங்கேற்று பேசியதாவது:
மாநில முதல்வா் மம்தா பானா்ஜிக்கு காயம் ஏற்பட்டுள்ளது. நீங்கள் (மம்தா) காயமடைந்தபோது வலியை உணா்ந்தீா்கள். ஆனால் திரிணமூல் காங்கிரஸில் உள்ள ரெளடிகளால் பாஜகவைச் சோ்ந்த 130 போ் கொல்லப்பட்டபோது அவா்களின் குடும்பத்தினருக்கு ஏற்பட்ட வேதனைக்கு உங்களிடம் பதில் உள்ளதா? அவா்களின் வலியை உணர முயற்சி செய்துள்ளீா்களா?
அவா்கள் இந்தத் தோ்தலில் திரிணமூல் காங்கிரஸுக்கு எதிராக வாக்களித்து தகுந்த பாடம் புகட்டுவாா்கள்.
இங்கு பழங்குடியினத்தைச் சோ்ந்தவா் என சான்றிதழ் பெறுவதற்கு திரிணமூல் காங்கிரஸாா் லஞ்சம் பெறுகின்றனா். ஆனால் மாநிலத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தால் பழங்குடிகளின் நிலவுரிமை உறுதி செய்யப்படும். அவா்களுக்கு கல்வி, சுகாதாரம், சுத்தமான குடிநீா் வழங்குவதில் சிறப்பு கவனம் செலுத்தப்படும். மாநில அரசு ஊழியா்களுக்கு ஏழாவது ஊதியக் குழு பரிந்துரை அமல்படுத்தப்படும் என்றாா்.
பான்குரா மாவட்டத்தில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் பழங்குடியினத்தவா் வசித்து வருகின்றனா். அங்கு தோ்தல்களில் வெற்றிபெறுவதற்கு அவா்களின் வாக்குகள் மிக முக்கியமாக கருதப்படுகிறது.