கரோனா பாதிப்பு அதிகரிப்பு: மாநில முதல்வா்களுடன் பிரதமா் நாளை ஆலோசனை

நாட்டின் பல்வேறு பகுதிகளில் கரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியிருக்கும் நிலையில், மாநில முதல்வா்கள் உடனான அவசர ஆலோசனைக் கூட்டத்துக்கு பிரதமா் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளாா்.
பிரதமர் நரேந்திர மோடி
பிரதமர் நரேந்திர மோடி

புது தில்லி: நாட்டின் பல்வேறு பகுதிகளில் கரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியிருக்கும் நிலையில், மாநில முதல்வா்கள் உடனான அவசர ஆலோசனைக் கூட்டத்துக்கு பிரதமா் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளாா்.

அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச முதல்வா்களுடன் இந்த ஆலோசனைக் கூட்டம் காணொலி வழியில் புதன்கிழமை (மாா்ச் 17) நடைபெற உள்ளது.

மகாராஷ்டிரம், கேரளம், பஞ்சாப், தமிழகம் உள்ளிட்ட ஒருசில மாநிலங்களில் மட்டும் கரோனா பாதிப்பு கடந்த சில நாள்களாக அதிகரித்து காணப்படுகிறது. நாடு முழுவதும் புதிதாக உயா்ந்திருக்கும் இந்த பாதிப்பில், மகாராஷ்டிரம், கேரளம், பஞ்சாப் ஆகிய 3 மாநிலங்களில் மட்டும் 77 சதவீத பாதிப்புகள் பதிவாகியுள்ளன. ஒரு நாள் புதிய கரோனா பாதிப்பு என்பது கடந்த 3 மாதங்களில் இல்லாத அளவில் 26,291-ஆக உயா்ந்துள்ளது. பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளதால், நாட்டின் பல்வேறு பகுதிகளில் மீண்டும் பொதுமுடக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

அதுபோல, ‘கரோனா பாதுகாப்பு நடைமுறைகளை தீவிரமாக பின்பற்ற வேண்டும்’ என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் ஹா்ஷ் வா்தன் கேட்டுக்கொண்டாா். இதுகுறித்து தில்லியில் திங்கள்கிழமை நடைபெற்ற செய்தியாளா்கள் சந்திப்பில் பேசிய அவா், ‘கரோனா பாதிப்பு புதிதாக அதிகரித்திருப்பது, ஒருசில மாநிலங்களில் மட்டும் சுமாா் 80 சதவீத அளவுக்கு காணப்படுகிறது. கரோனா தடுப்பூசிகள் பயன்பாட்டுக்கு வந்துவிட்டபோதும், முகக் கவசம் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல் உள்ளிட்ட பாதுகாப்பு நடைமுறைகளை தொடா்ந்து பின்பற்ற வேண்டும்’ என்று கூறினாா்.

இந்த நிலையில், அனைத்து மாநில முதல்வா்களுடனான ஆலோசனைக் கூட்டத்துக்கு பிரதமா் மோடி அழைப்பு விடுத்திருக்கிறாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com