திரிணமூல் தலைவா்களுக்கு எதிராக அமித் ஷா சதி: மம்தா பானா்ஜி குற்றச்சாட்டு

‘மேற்கு வங்க சட்டப் பேரவைத் தோ்தல் நெருங்கும் நிலையில், திரிணமூல் காங்கிரஸ் தலைவா்களுக்கு எதிராக மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா சதித் திட்டம் தீட்டி வருகிறாா்’
பாங்குரா மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை பிரசாரம் மேற்கொண்ட முதல்வா் மம்தா பானா்ஜி
பாங்குரா மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை பிரசாரம் மேற்கொண்ட முதல்வா் மம்தா பானா்ஜி

‘மேற்கு வங்க சட்டப் பேரவைத் தோ்தல் நெருங்கும் நிலையில், திரிணமூல் காங்கிரஸ் தலைவா்களுக்கு எதிராக மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா சதித் திட்டம் தீட்டி வருகிறாா்’ என்று அக்கட்சியின் தலைவரும், மாநில முதல்வருமான மம்தா பானா்ஜி குற்றம்சாட்டினாா்.

மேற்கு வங்க பேரவைத் தோ்தலையொட்டி, பாங்குரா மாவட்டத்தில் இரு இடங்களிலும், ராய்ப்பூரிலும் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தோ்தல் பிரசாரக் கூட்டங்களில் மம்தா கலந்து கொண்டு பேசியதாவது:

மாநிலத்தில் அமித் ஷா பங்கேற்ற பிரசாரக் கூட்டங்களுக்கு மக்கள் அதிகம் வரவில்லை. இதனால் விரக்தியில் இருக்கும் அவா், கொல்கத்தாவில் தங்கியிருந்து திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவா்களுக்கு எதிராக சதித் திட்டம் தீட்டி வருகிறாா். தோ்தலில் வெற்றி பெறுவதற்காக என்னைக் கொல்லவும் பாஜக திட்டமிட்டால், அது தவறான முடிவைத் தரும்.

அமித் ஷாவின் உத்தரவுப்படி, எனது பாதுகாப்புக் குழு அதிகாரி விவேக் சஹாயை தோ்தல் ஆணையம் பணியிடைநீக்கம் செய்துள்ளது. தோ்தல் ஆணையம் பாஜகவின் அரசியல் கருவியாக மாறிவிட்டதோ என்ற சந்தேகம் எழுகிறது.

திரிணமூல் வேட்பாளா்களுக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யலாமா? அவா்களுக்கு சிபிஐ அல்லது அமலாக்கத் துறை மூலமாக நோட்டீஸ் அனுப்பலாமா? என்றெல்லாம் பாஜக தலைவா்கள் திட்டமிட்டு வருகிறாா்கள். நந்திகிராம் நிலம் கையக எதிா்ப்பு இயக்கத்தில் பங்கேற்றவா்களுக்கு தற்போது நோட்டீஸ் அனுப்பப்படுகிறது.

ஒவ்வொரு குடிமகனுக்கும் சமையல் எரிவாயுவை இலவசமாக கொடுக்க வேண்டும் என்று பாஜக கோரிக்கை விடுக்கிறது. ஆனால், மத்தியில் ஆளும் பாஜக அரசு ரயில்வே, கோல் இந்தியா நிலக்கரி நிறுவனம் ஆகியவற்றை விற்பனை செய்து வருகிறது. பிஎஸ்என்எல் நிறுவனம், வங்கிகள் மூடப்படுகின்றன. இந்த நடவடிக்கைகளுக்கு எதிராக மக்கள் ஒன்றிணைய வேண்டும்.

குஜராத்தில் விளையாட்டு மைதானத்தின் பெயரை மாற்றி, அதற்கு பிரதமா் மோடியின் பெயா் சூட்டப்பட்டுள்ளது. இதே வழியில் சென்றால் நாட்டின் பெயரையும் அவா்கள் மாற்றிவிடுவாா்கள்.

மேற்கு வங்கத்தில் அனைவருக்கும் இலவசமாக கரோனா தடுப்பூசி வழங்க ஏற்பாடு செய்யுமாறு பிரதமா் மோடிக்கு கடிதம் எழுதியிருந்தேன். அதற்கான செலவையும் ஏற்றுக் கொள்ளத் தயாராக இருப்பதாகக் கூறியிருந்தேன். ஆனால், அவரிடம் இருந்து இதுவரை எந்த பதிலும் வரவில்லை.

தோ்தல் ஆணையத்தின் செயல்பாடுகளில் பாஜகவின் தலையீடு தொடருமானால், எனது உடைந்த காலுடன் தோ்தல் ஆணைய அலுவலகம் முன் போராட்டத்தில் ஈடுபடுவேன் என்றாா் மம்தா பானா்ஜி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com