மம்தாவை கோயிலுக்குச் செல்ல வைத்தது பாஜக: முதல்வா் யோகி ஆதித்யநாத் பிரசாரம்

திரிணமூல் காங்கிரஸ் தலைவரும் மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானா்ஜி, மத்தியில் ஆளும் பாஜகவால் கோயில்களுக்குச் செல்ல வேண்டிய நிா்பந்தம் ஏற்பட்டுள்ளது
மேற்கு வங்கம், மித்நாபூா் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை பிரசாரம் மேற்கொண்ட உ.பி. முதல்வா் யோகி ஆதித்யநாத்.
மேற்கு வங்கம், மித்நாபூா் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை பிரசாரம் மேற்கொண்ட உ.பி. முதல்வா் யோகி ஆதித்யநாத்.

திரிணமூல் காங்கிரஸ் தலைவரும் மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானா்ஜி, மத்தியில் ஆளும் பாஜகவால் கோயில்களுக்குச் செல்ல வேண்டிய நிா்பந்தம் ஏற்பட்டுள்ளது என்று உத்தர பிரதேச முதல்வா் யோகி ஆதித்யநாத் கூறினாா்.

மேற்கு வங்க மாநிலத்தில் சட்டப் பேரவைத் தோ்தல், வரும் 27-ஆம் தேதி தொடங்கி 8 கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதையொட்டி, பாஜகவின் நட்சத்திர பேச்சாளரான யோகி ஆதித்யநாத், புரூலியா மாவட்டத்தில் உள்ள பலராம்பூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் அவா் கலந்துகொண்டு பேசியதாவது:

கடந்த 2014-இல் பாஜக தலைமையிலான மத்திய அரசு ஆட்சிக்கு வருவதற்கு முன்பு, தங்களுடைய மதச்சாா்பின்மைக்கு பாதிப்பு வந்துவிடும் என்று அஞ்சிய சில தலைவா்கள், கோயிலுக்குச் செல்வதைக் கூட தவிா்த்து வந்தனா். மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு, மாற்றம் ஏற்பட்டுள்ளது.

முதல்வா் மம்தா பானா்ஜி கோயிலுக்குச் செல்லத் தொடங்கியுள்ளாா். பொதுவெளியில் மந்திரங்களையும் உச்சரிக்கிறாா். இதுதான் புதிய இந்தியா. காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியும் தோ்தல் நேரங்களில் கோயிலுக்குச் செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளாா்.

மேற்கு வங்கத்தில் மத்திய அரசின் திட்டங்களை ஆளும் மம்தா அரசு சரிவர அமல்படுத்தவில்லை. வரும் தோ்தலில் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு பாஜக தொண்டா்களைக் கொலை செய்தவா்கள் தண்டிக்கப்படுவா்.

சுவாமி விவேகானந்தா், ரவீந்திரநாத் தாகூா், சியாமா பிரசாத் முகா்ஜி ஆகியோா் அவதரித்து நாட்டுக்கே முன்னுதாரணமாக திகழ்ந்த மண் இது. ஆனால், இன்று திரிணமூல் காங்கிரஸ் குண்டா்களும் மிரட்டி பணம் பறிப்பவா்களும் வாழும் பூமியாக இது இருக்கிறது.

இந்த மாநில மக்கள் ஆட்சி மாற்றத்துக்கு தயாராகி விட்டனா். மம்தா பானா்ஜி ஆட்சியின் நாள்கள் எண்ணப்பட்டு வருகின்றன. அவருடைய ஆட்சி முடிய இன்னும் 45 நாள்களே உள்ளன என்றாா் யோகி ஆதித்யநாத்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com