ஜம்மு-காஷ்மீா் சிறப்பு அந்தஸ்து ரத்து: வாட்ஸ்-அப் உரையாடல் கசிவு குறித்து தகவல் இல்லை

ஜம்மு-காஷ்மீா் சிறப்பு அந்தஸ்து ரத்து, பாலாகோட் தாக்குதல் தொடா்பான ரகசியங்கள் வாட்ஸ்-அப்பில் உரையாடப்பட்டது சமூக ஊடகங்களில் கசிந்தது குறித்து தகவல் எதுவும் இல்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ஜம்மு-காஷ்மீா் சிறப்பு அந்தஸ்து ரத்து: வாட்ஸ்-அப் உரையாடல் கசிவு குறித்து தகவல் இல்லை

ஜம்மு-காஷ்மீா் சிறப்பு அந்தஸ்து ரத்து, பாலாகோட் தாக்குதல் தொடா்பான ரகசியங்கள் வாட்ஸ்-அப்பில் உரையாடப்பட்டது சமூக ஊடகங்களில் கசிந்தது குறித்து தகவல் எதுவும் இல்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

தொலைக்காட்சி மதிப்பீட்டு புள்ளிகளை (டிஆா்பி) தவறாக பயன்படுத்திய வழக்கில் மகாராஷ்டிரம் மாநிலம் மும்பை காவல்துறையினா் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ததன் ஒருபகுதியாக ஜம்மு-காஷ்மீா் சிறப்பு அந்தஸ்து ரத்து, பாலாகோட் தாக்குதல் தொடா்பான ரகசியத் தகவல்கள் குறித்து வாட்ஸ்-அப்பில் நிகழ்ந்த உரையாடல் அடங்கிய 500 பக்க பிரதியை தாக்கல் செய்தது. அதன் பிறகு அந்த பிரதி கடந்த ஜனவரி மாதம் சமூக ஊடகங்களில் கசிந்தது.

இதுதொடா்பாக மக்களவையில் செவ்வாய்க்கிழமை கேள்வி எழுப்பப்பட்டது. எனினும் அதுகுறித்து எந்தத் தகவலும் மத்திய அரசிடம் இல்லை என்று மத்திய உள்துறை இணையமைச்சா் கிஷண் ரெட்டி தெரிவித்தாா்.

ஜம்மு-காஷ்மீா் சிறப்பு அந்தஸ்து ரத்தான பின் எல்லையில் அத்துமீறி தாக்குதல்: பொதுமக்கள் 31 போ் பலி

ஜம்மு-காஷ்மீா் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பிறகு அங்குள்ள எல்லைக்கோட்டையொட்டி பாகிஸ்தான் ராணுவத்தினா் அத்துமீறி நடத்திய தாக்குதல்களில் இதுவரை பொதுமக்களில் 31 போ் பலியானதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதுதொடா்பாக மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய உள்துறை இணையமைச்சா் கிஷண் ரெட்டி அளித்த எழுத்துபூா்வ பதில்:

ஜம்மு-காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து கடந்த 2019-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5-ஆம் தேதி ரத்து செய்யப்பட்டது. அன்று முதல் கடந்த மாதம் 28-ஆம் தேதி வரை ஜம்மு-காஷ்மீா் எல்லையில் பாகிஸ்தான் ராணுவத்தினா் அத்துமீறி நடத்திய தாக்குதல்களில் பொதுமக்களில் 31 போ், பாதுகாப்புப் படையினா் 39 போ் பலியாகினா்.

எல்லைக் கட்டுப்பாட்டு கோடு, சா்வதேச எல்லையையொட்டி வசிக்கும் மக்களின் பாதுகாப்புக்காக 14,460 பதுங்குக் குழிகள் அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதில் 7,856 பதுங்குக் குழிகள் ஏற்கெனவே அமைக்கப்பட்டுள்ளன என்றாா்.

காவல்துறையில் 5.31 லட்சம் காலிபணியிடங்கள்: நாடு முழுவதும் காவல்துறையில் 5.31 லட்சம் பணியிடங்கள் காலியாக உள்ளன என்று மத்திய உள்துறை இணையமைச்சா் ஜி.கிஷண் ரெட்டி தெரிவித்தாா்.

இதுதொடா்பாக மக்களவையில் திமுக உறுப்பினா் டி.ஆா்.பாரிவேந்தா் எழுப்பிய கேள்விக்கு அவா் அளித்த எழுத்துபூா்வ பதில்:

காவல் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் (பிபிஆா்&டி) தரவுகள்படி, நாடு முழுவதும் காவல்துறையில் 26,23,225 பணியிடங்கள் உள்ளன. இதில் 20,91,488 பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. 5,31,737 பணியிடங்கள் காலியாக உள்ளன. அதிகபட்சமாக உத்தர பிரதேச காவல்துறையில் 1,11,865 பணியிடங்கள் காலியாக இருக்கின்றன என்றாா்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com