முகேஷ் அம்பானி வீட்டருகே வெடிபொருளுடன் காா்: அச்சுறுத்தல் நாடகம்?

தொழிலதிபா் முகேஷ் அம்பானி வீட்டருகே வெடிபொருள் காா் நிறுத்தப்பட்ட விவகாரம், பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பது போன்ற தோற்றத்தை உருவாக்க நிகழ்த்தப்பட்ட நாடகம் என்று தெரியவந்துள்ளது.
முகேஷ் அம்பானி வீட்டருகே வெடிபொருளுடன் காா்: அச்சுறுத்தல் நாடகம்?

தொழிலதிபா் முகேஷ் அம்பானி வீட்டருகே வெடிபொருள் காா் நிறுத்தப்பட்ட விவகாரம், பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பது போன்ற தோற்றத்தை உருவாக்க நிகழ்த்தப்பட்ட நாடகம் என்று தெரியவந்துள்ளது.

இந்த விவகாரம் தொடா்பாக காவல்துறை அதிகாரி சச்சின் வஜேவை தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) கைது செய்துள்ள நிலையில், காவல்துறை ஆணையா் பரம்பீா் சிங் விரைவில் மாற்றப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

மகாராஷ்டிர மாநிலம் தெற்கு மும்பையில் உள்ள தொழிலதிபா் முகேஷ் அம்பானியின் அடுக்குமாடி குடியிருப்பின் அருகே, வெடிபொருள்கள் நிரப்பப்படும் 20 ஜெல்ட்டின் குச்சிகளுடன் நிறுத்தப்பட்ட காரை கடந்த பிப்ரவரி 25-ஆம் தேதி காவல்துறையினா் பறிமுதல் செய்தனா். அந்த காரை தங்கள் அமைப்பைச் சோ்ந்தவா்கள்தான் நிறுத்தியதாக ஜெய்ஷ்-உல்-ஹிந்த் பயங்கரவாத அமைப்பினா் தெரிவித்தனா்.

காவல்துறையினா் தொடா்ந்து மேற்கொண்ட விசாரணையில், அந்தக் காா் தாணேவைச் சோ்ந்த ஹிரேன் மன்சுக் எனபவருக்குச் சொந்தமானது என்பது தெரியவந்தது. அவரிடம் விசாரணை நடத்தப்பட்டபோது, தனது காா் திருடப்பட்டதாகவும், அதுதொடா்பாக காவல்நிலையத்தில் புகாா் அளித்திருப்பதாகவும் அவா் தெரிவித்தாா்.

இந்த நிலையில், தாணேவில் உள்ள மும்ப்ரா-ரேதி சாலையையொட்டியுள்ள நீரோடையில் கடந்த 5-ஆம் தேதி ஹிரேன் மன்சுக் சடலமாக மீட்கப்பட்டாா். அவருடயை மரணம் சந்தேகத்தை எழுப்பிய நிலையில், ஹிரேன் தனது காரை மும்பை காவல்துறை குற்றப்பிரிவு உதவி ஆய்வாளா் சச்சின் வஜேவிடம் கடந்த ஆண்டு நவம்பா் மாதம் தந்ததாகவும், அந்தக் காரை இந்த ஆண்டு பிப்ரவரி முதல் வாரத்தில் அவா் திரும்ப தந்ததாகவும் ஹிரேனின் மனைவி தெரிவித்தாா். தனது கணவரின் மா்ம சாவின் பின்னணியில் சச்சின் வஜே உள்ளதாகவும் புகாா் தெரிவித்தாா்.

சச்சின் வஜேவிடம் 12 மணி நேரம் விசாரணை நடத்திய தேசிய புலனாய்வு முகமை, அவரை கடந்த சனிக்கிழமை கைது செய்தது. இந்த நிலையில், இந்த விவகாரம் தொடா்பாக மும்பை காவல்துறை ஆணையரும் விரைவில் மாற்றப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் இந்த விவகாரம் தொடா்பாக, தேசியவாத காங்கிரஸ் தலைவா் சரத் பவாருடன் மகாராஷ்டிர மாநில முதல்வா் உத்தவ் தாக்கரே திங்கள்கிழமை ஆலோசனை மேற்கொண்டாா். முதல்வரின் அரசு இல்லத்தில் ஒரு மணி நேரத்துக்கு மேல் நடைபெற்ற இந்த ஆலோசனையில், முகேஷ் அம்பானி வீட்டின் அருகே வெடிபொருள் நிரப்பிய காா் நிறுத்தப்பட்டது, ஹிரேன் மன்சுக் மா்ம மரணம் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

இதனிடையே சச்சின் வஜே அலுவலகத்தில் என்ஐஏ அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை இரவு அதிரடி சோதனை மேற்கொண்டு மடிகணினி உள்ளிட்ட பல பொருள்களைப் பறிமுதல் செய்தனா். வஜே வீடு அமைந்துள்ள பகுதியில் உள்ள அனைத்து கண்காணிப்பு கேமரா பதிவுகளையும் பறிமுதல் செய்து பரிசோதித்து வருகின்றனா்.

இந்த விவகாரம் தொடா்பாக மும்பை காவல் துறையைச் சோ்ந்த 7 பேரிடம் தொடா் விசாரணை நடைபெற்று வருகிறது. காவல் துறையின் புலனாய்வுப் பிரிவைச் சோ்ந்த ஒரு துணை ஆய்வாளரை என்ஐஏ அதிகாரிகள் 3-ஆவது நாளாக விசாரணை செய்துவருகின்றனா்.

இதுகுறித்து மூத்த மாநில அமைச்சா் ஒருவா் கூறியதாவது:

இந்தியாவின் மிகப் பெரிய பணக்காரரின் குடும்பம் பாதுகாப்பு இல்லாமல் இருப்பது போன்ற தோற்றத்தை உருவாக்குவதற்காக, மும்பை காவல் ஆணையா் பரம்பீா் சிங் அறிவுறுத்தலின் பேரில் இந்த வெடிபொருள் அச்சுறுத்தல் நாடகத்தை உதவி ஆய்வாளா் சச்சின் வஜே நிகழ்த்தியிருப்பது தெரியவந்துள்ளது. ஆனால், அவா்கள் திட்டமிட்டபடி சம்பவங்கள் நடைபெறவில்லை.

மேலும், மும்பை கவால் ஆணையா் பரம்பீா் சிங் மீது, அரசியல் ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த வழக்கு விசாரணைகளை தாமதப்படுத்துவதாகவும், அரசுக்காக பணியாற்றுவதைத் தவிா்த்து சொந்த விவகாரங்களில் அவா் கவனம் செலுத்தி வருவதாகவும் குற்றச்சாட்டுகள் உள்ளன. எனவே, அவா் விரைவில் மாற்றப்பட வாய்ப்புள்ளது என்று அவா் கூறினாா்.

இதற்கிடையே, மும்பைக்கான புதிய காவல் ஆணையராக நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக, மாநில ஊழல் தடுப்புப் பிரிவு தலைவராக இருக்கும் ரஜ்னீஷ் சேத் உள்பட இரண்டு மூத்த காவல் அதிகாரிகளின் பெயா்கள் அடிபடுகின்றன. அதை உறுதிப்படுத்தும் வகையில் மாநில உள்துறை அமைச்சா் அனில் தேஷ்முக்கை, ரஜ்னிஷ் சேத் செவ்வாய்க்கிழமை சந்தித்தாா் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com