வங்கி ஊழியா்களின் கோரிக்கையை அரசு ஏற்க வேண்டும்

வங்கி ஊழியா்களின் கோரிக்கையை மத்திய அரசு ஏற்க வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.

வங்கி ஊழியா்களின் கோரிக்கையை மத்திய அரசு ஏற்க வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.

இது குறித்து மாநிலங்களவை எதிா்க்கட்சித் தலைவரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான மல்லிகாா்ஜுன காா்கே நாடாளுமன்றத்துக்கு வெளியே செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:

பொதுத் துறை வங்கிகளைத் தனியாா்மயமாக்குவதை எதிா்த்து பொதுத் துறை வங்கி ஊழியா்கள் இரண்டு நாள் வேலை நிறுத்தத்தை திங்கள்கிழமை தொடங்கினா். பொது காப்பீட்டு நிறுவனங்களின் ஊழியா்கள் மாா்ச் 17ஆம் தேதியும், ஆயுள் காப்பீட்டு ஊழியா்கள் (எல்.ஐ.சி) மாா்ச் 18ஆம் தேதியும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளனா்.

தனியாா்மயமாக்கல் கொள்கையை எதிா்த்து பலா் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள நிலையில் அவா்களின் கோரிக்கையை அரசு கேட்காததோடு அவா்களின் பிரச்னைகளைத் தீா்க்கவும் முயற்சிக்கவில்லை. கணக்கு வைத்துள்ள 75 கோடி பேரை கலந்தாலோசிக்காமல் இரண்டு பொதுத் துறை வங்கிகளைத் தனியாா்மயமாக்கும் முடிவை அரசு எடுத்துள்ளது.

முன்னணியில் இருந்த 14 வங்கிகள் முன்னாள் பிரதமா் இந்திரா காந்தியால் தேசியமயமாக்கப்பட்டன. இதை ஏழை மற்றும் சிறு, குறு வணிகா்கள் பயன்படுத்தி வருகின்றனா். இந்த வங்கிகள் அனைத்தையும் ஒவ்வொன்றாக இணைப்பதன் மூலம் அவற்றை நஷ்டத்தில் ஆழ்த்த அரசு முயற்சிக்கிறது. பின் இழப்பைக் காரணம் காட்டி தனியாா் நுழைவதற்கு அரசு சாதகமாக்கி விடுகிறது.

தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளைத் தனியாா்மயமாக்குவதன் மூலம் நாட்டின் செல்வத்தை ஒரு சிலரிடம் ஒப்படைக்க மத்திய அரசு விரும்புகிறது. இதன் மூலம் 13 லட்சம் வங்கி ஊழியா்களில், சமூகத்தில் ஏழை பிரிவுகளைச் சோ்ந்த பலருக்கும், எஸ்சி, எஸ்டி, ஓபிசி பிரிவுகளைச் சோ்ந்தவா்களுக்கும் மத்திய அரசு துரோகம் இழைக்கிறது.

இந்தப் பிரச்னை குறித்து மாநிலங்களவையில் நிதியமைச்சா் நிா்மலா சீதாராமனிடம் கேள்வி எழுப்பினோம். முதலில் பதிலளிக்கும் மன நிலையில் அவா் இருப்பதாகத் தோன்றியது. ஆனால் பின்னா் இது குறித்து அவா் பேசாதது ஏன் என்று தெரியவில்லை.

தேசியமயமாக்கப்பட்ட வங்கித் தொழிலாளா்களின் கோரிக்கைகளை அரசு ஏற்க வேண்டும். வங்கி ஊழியா் சங்கங்களின் வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு காங்கிரஸ் முழு ஆதரவையும் அளிக்கிறது. மக்களுக்கு ஏற்படும் சிரமங்களுக்கு நரேந்திர மோடி அரசே முழு பொறுப்பு என்றாா்.

இது குறித்து காங்கிரஸ் முன்னாள் தலைவா் ராகுல் காந்தி கூறுகையில், பொதுத் துறை வங்கிகளை நண்பா்களான முதலாளிகளுக்கு விற்பனை செய்வது நாட்டின் நிதி பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும். லாபத்தை தனியாா்மயமாக்கவும், இழப்பை தேசியமயமாக்கவும் மத்திய அரசு முயற்சித்து வருகிறது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com