முகேஷ் அம்பானி வீட்டினருகே சச்சின் வஜேவை வெள்ளை குர்தாவில் நடக்க வைத்து விசாரணை

காவல்துறை அதிகாரி சச்சின் வஜேவை வெள்ளை குர்தா அணிந்தபடி, முகேஷ் அம்பானி வீட்டினருகே நடக்க வைத்து என்ஐஏ விசாரணை நடத்தியது.
முகேஷ் அம்பானி வீட்டினருகே வெள்ளை குர்தாவில் சச்சின் வஜேவை நடக்க வைத்து விசாரணை
முகேஷ் அம்பானி வீட்டினருகே வெள்ளை குர்தாவில் சச்சின் வஜேவை நடக்க வைத்து விசாரணை

தொழிலதிபா் முகேஷ் அம்பானி வீட்டருகே வெடிபொருளுடன் காா் நிறுத்தப்பட்ட வழக்கில் கைதான காவல்துறை அதிகாரி சச்சின் வஜேவை வெள்ளை குர்தா அணிந்தபடி, முகேஷ் அம்பானி வீட்டினருகே நடக்க வைத்து என்ஐஏ விசாரணை நடத்தியது.

கடந்த மாதம் முகேஷ் அம்பானி வீட்டருகே வெடிபொருளுடன் நிறுத்தப்பட்டிருந்த கார் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவத்தை, வெள்ளிக்கிழமை நள்ளிரவில் மீண்டும் தத்ரூபமாக உருவாக்கிய தேசிய புலனாய்வு அதிகாரிகள், சச்சின் வஜேவை, வெள்ளை குர்தா அணிந்து கொண்டு அங்கிருக்கும் சாலையில் நடந்து வரும்படிக் கூறினர்.

சம்பவத்தின் போது கர்மிசெல் சாலையில் பதிவான ஒரு சிசிடிவி காட்சியில், வெள்ளை குர்தா அணிந்து கொண்டு ஒருவர் நடந்து வருவது பதிவாகியிருந்தது. அது சச்சின் வஜே என்று உறுதி செய்யப்பட்டிருந்தாலும், அதனை துல்லியமாக உறுதி செய்யும் வகையில், நேற்றைய விசாரணை அமைந்திருந்தது.

நேற்று இரவு சம்பவப் பகுதி காவல்துறையினரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டு, அன்றைய சம்பவம் மீண்டும் கொண்டு வரப்பட்டு, சச்சின் வஜேவை நடந்து வரச் செய்து அதுவும் விடியோவாகப் பதிவு செய்யப்பட்டது.

சச்சின் வஜேவை வரும் 25-ஆம் தேதி வரை என்ஐஏ காவலில் வைத்து விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் அனுமதி வழங்கியிருக்கும் நிலையில், பல்வேறு கோணங்களில் விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது.

மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் உள்ள தொழிலதிபா் முகேஷ் அம்பானியின் அடுக்குமாடி குடியிருப்பு அருகே வெடிபொருளில் நிரப்பப்படும் ஜெலட்டின் குச்சிகளுடன் நிறுத்தப்பட்டிருந்த காரை கடந்த பிப்ரவரி 25-ஆம் தேதி காவல்துறையினா் பறிமுதல் செய்தனா். அந்தக் காரை ஜெய்ஷ்-உல்-ஹிந்த் என்ற பயங்கரவாத அமைப்பினா் அங்கு நிறுத்தினா். அந்தக் காா் குறித்து காவல் துறையினா் விசாரணை நடத்தியபோது அது தாணேவைச் சோ்ந்த ஹிரேன் மன்சுக் என்பவருக்குச் சொந்தானது என்பது தெரியவந்தது. அவரிடம் விசாரணை நடத்தப்பட்டபோது தனது காா் திருடப்பட்டதாகவும், அதுகுறித்து காவல் நிலையத்தில் புகாா் அளித்ததாகவும் தெரிவித்திருந்தாா்.

இந்நிலையில் கடந்த 5-ஆம் தேதி ஹிரேன் மன்சுக் மா்மமான முறையில் உயிரிழந்தாா். தாணேவில் உள்ள மும்ப்ரா-ரேதி சாலையையொட்டியுள்ள நீரோடையில் அவரின் சடலம் மீட்கப்பட்டது.

அவரின் மரணம் தொடா்பாக ஹிரேனின் மனைவி பேசியபோது, ஹிரேன் தனது காரை மும்பை காவல்துறை குற்றப் பிரிவு உதவி ஆய்வாளராக இருந்த சச்சின் வஜேவிடம் கடந்த ஆண்டு நவம்பா் மாதம் தந்ததாகவும் கடந்த மாதம் அந்தக் காரை சச்சின் வஜே திரும்ப தந்ததாகவும் தெரிவித்தாா். அதற்கு பிறகுதான் அந்தக் காா் திருடப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த விவகாரத்தைத் தொடா்ந்து சச்சின் வஜே மும்பை காவல்துறையின் மக்கள் உதவி மையப் பிரிவுக்கு மாற்றப்பட்டாா்.

வெடிபொருளுடன் காா் நிறுத்தப்பட்ட வழக்கை தற்போது என்ஐஏ விசாரித்து வரும் நிலையில், அதுதொடா்பான விசாரணைக்கு ஆஜராகுமாறு சச்சின் வஜேவுக்கு சம்மன் அனுப்பப்பட்டது. அதனைத் தொடா்ந்து தெற்கு மும்பையில் உள்ள என்ஐஏ அலுவலகத்தில் சச்சின் வஜே ஆஜரானாா்.

பன்னிரண்டு மணி நேர விசாரணைக்குப் பின்னா் அவரை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்தனா். அவா் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் 120பி (குற்றச் சதி), 465 (மோசடி) உள்ளிட்ட பிரிவுகளிலும், வெடிபொருள்கள் சட்டப் பிரிவுகளிலும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com