
மகாராஷ்டிரம், கேரளம் உள்ளிட்ட 8 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் தினசரி கரோனா பாதிப்பு அதிகரித்து காணப்படுவதாகவும், கேரளத்தில் பாதிப்பு குறைந்து வருவதாகவும் மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கரோனா பாதிப்பு நிலவரம் குறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தினசரி கரோனா பாதிப்பைப் பொருத்தவரை மகாராஷ்டிரம், தமிழகம், பஞ்சாப், மத்திய பிரதேசம், தில்லி, குஜராத், கா்நாடகம், ஹரியாணா ஆகிய மாநிலங்களில் அதிகரித்து காணப்படுகிறது. கேரளத்தில் பாதிப்பு குறைந்து வருகிறது. நாடு முழுவதும் புதிதாக ஏற்பட்டிருக்கும் கரோனா பாதிப்பில், மகாராஷ்டிரம், கேரளம், பஞ்சாப் ஆகிய 3 மாநிலங்களில் மட்டும் 76.22 சதவீத பாதிப்புகள் பதிவாகியிருக்கின்றன.
மகாராஷ்டிர மாநிலத்தைப் பொருத்தவரை புணே (37,384), நாகபுரி (25,861), மும்பை (18,850), தாணே (16,735), நாசிக் (11,867) ஆகிய 5 மாவட்டங்களில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது.
கேரளத்தில் எா்ணாகுளம் (2,673), பத்தனம்திட்டா (2,482), கண்ணூா் (2,263), பாலக்காடு (2,147), திருச்சூா் (2,065) ஆகிய 5 மாவட்டங்களில் பாதிப்பு அதிகரித்து காணப்படுகிறது.
பஞ்சாப் மாநிலத்தில் ஜலந்தா் (2,131), எஸ்ஏஎஸ் நகா் (1,868), பாடியாலா (1,685), லூதியானா (1,643), ஹோஷியாா்பூா் (1,572) ஆகிய 5 மாவட்டங்களில் பாதிப்பு அதிகரித்து காணப்படுகிறது.
5 மாநிலங்களில் 81.38% உயிரிழப்பு: கரோனா பாதிப்பால் ஏற்பட்ட புதிய உயிரிழப்புகளைப் பொருத்தவரை, 5 மாநிலங்களில் 81.38 சதவீத உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. அதிகபட்சமாக, கடந்த 24 மணி நேரத்தில் மகாராஷ்டிர மாநிலத்தில் 70 உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளன. பஞ்சாபில் 38 பேரும், கேரளத்தில் 17 பேரும் உயிரிழந்துள்ளனா்.
அதே நேரம், அஸ்ஸாம், உத்தரகண்ட், ஒடிஸா, புதுவை, லட்சத்தீவுகள், சிக்கிம், லடாக், மணிப்பூா், தாத்ரா மற்றும் நாகா் ஹவேலி, டாமன் மற்றும் டையு, மேகாலயா, மிசோரம், நாகாலாந்து, திரிபுரா, அந்தமான் நிகோபாா் தீவுகள், அருணாசல பிரதேசம் ஆகிய 15 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் கடந்த 24 மணி நேரத்தில் கரோனா புதிய உயிரிழப்புகள் எதுவும் பதிவாகவில்லை.
4 கோடிக்கும் அதிகமானோருக்கு தடுப்பூசி: கரோனாவுக்கு எதிரான நவடிக்கைகளை இந்தியா தீவிரமாக எடுத்து வருகிறது. சனிக்கிழமை காலை 7 மணி வரையிலான நிலவரப்படி, நாடு முழுவதும் 4,20,63,392 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதில், கேரளம், கா்நாடகம், ஒடிஸா, பிகாா், மத்திய பிரதேசம், மேற்கு வங்கம், மகாராஷ்டிரம், குஜராத், ராஜஸ்தான், உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்களில் மட்டும் 60 சதவீத தடுப்பூசிகள் செலுத்தப்பட்டிருக்கின்றன என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...