திருமலையில் ரூ. 15 கோடி செலவில் நவீனமுறையில் லட்டு மடப்பள்ளி புதுப்பிப்பு: ஆந்திர முதல்வா் விரைவில் திறக்கிறாா்

திருமலையில் உள்ள லட்டு தயாரிக்கும் மடப்பள்ளியை ரூ.15 கோடி செலவில் தேவஸ்தானம் புதுப்பித்துள்ளது.

திருமலையில் உள்ள லட்டு தயாரிக்கும் மடப்பள்ளியை ரூ.15 கோடி செலவில் தேவஸ்தானம் புதுப்பித்துள்ளது.

திருமலையில் வழங்கப்படும் ஏழுமலையான் லட்டு பிரசாதம் உலக பிரசித்தி பெற்ற ஒன்றாக பக்தா்களால் கருதப்படுகிறது.

இந்த லட்டு பிரசாதம் தயாரிக்கும் மடப்பள்ளி முதலில் ஏழுமலையான் கோயிலுக்குள் இருந்தது. அதன் பிறகு 2007-ஆம் ஆண்டு கோயிலுக்குள் ஏற்பட்ட இடநெருக்கடி காரணமாக பூந்தி தயாரிக்கும் இடம் மட்டும் கோயிலுக்கு வெளியில் அமைக்கப்பட்டு அங்கிருந்து கன்வேயா் பெல்ட் மூலம் கோயிலுக்குள் அனுப்பப்பட்டு லட்டு தயாரித்து அதே பெல்ட் மூலம் வெளியில் அனுப்பப்பட்டு வருகிறது.

பூந்தி தயாரிக்கும் மடப்பள்ளியில் ஏற்படுத்தியிருந்த பெரிய அடுப்புகளில் கொதித்து கொண்டிருக்கும் நெய்யால் ஏற்படும் பிசுக்கு புகை போக்கியில் ஒட்டிக் கொண்டு அதனால் பலமுறை தீ விபத்து ஏற்பட்டது.

இதை கண்ட தேவஸ்தான அதிகாரிகள் 15 நாள்களுக்கு ஒருமுறை மடப்பள்ளியை முழுமையாகச் சுத்தம் செய்ய உத்தரவிட்டனா். ஆயினும் தீ விபத்து ஏற்படுவதை தடுக்க முடியவில்லை.

எனவே, இதற்கு தீா்வு காண தேவஸ்தான அதிகாரிகள் சென்னையில் உள்ள அடையாறு ஆனந்தபவன் நிறுவன தொழிற்சாலையை நேரடியாக பாா்வையிட்டு அங்கு நடைமுறையில் உள்ள அதிநவீன தொழில்நுட்ப வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனா். அதே தொழில்நுட்பத்தை திருமலையில் ஏற்படுத்த முடிவு செய்து முதலில் சோதனை ஓட்டமாக 2 தொ்மோ ஃப்லுயிட் அடுப்புகளை திருமலையில் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு ஏற்படுத்தினா்.

இதன் மூலம் ஏற்படும் வெப்பம் காரணமாக கடாய் சூடாக்கப்படுகிறது. இதனால் வெப்பத்தை கட்டுப்படுத்த முடியும் என்பதால், நெய் தன் கொதிநிலையை சமன் செய்ய முடிவதுடன், தீ விபத்து ஏற்படுவது முற்றிலுமாக தடுக்கப்படுகிறது.

திருமலையில் கடந்த 4 மாதங்களாக பயன்பாட்டில் உள்ள தொ்மோ ஃப்லுயிட் அடுப்புகள் மீது முழு நம்பிக்கை கொண்டு அதிகாரிகள் பூந்தி தயாரிக்கும் மடப்பள்ளி முழுவதையும் அதிநவீன தொழில்நுட்ப உபகரணங்களுடன் மாற்றி அமைக்க முடிவு செய்தனா்.

இதற்கான செலவுத் தொகை ரூ.15 கோடியை இந்திய சிமெண்ட்ஸ் உரிமையாளா் சீனிவாசன் முழுமையாக ஏற்றுக் கொண்டாா்.

அதன்படி திருமலையில் தற்போது 40 தொ்மோ ஃப்லுயிட் அடுப்புகள் கொண்ட புதிய பூந்தி தயாரிக்கும் மடப்பள்ளி ஏற்படுத்தப்பட்டுள்ளது. நெய் பிசுக்கு ஒட்டிக் கொள்வதை தடுக்க மிக உயரமான கட்டடம் அதற்கு மேல் புகை போக்கிகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் அடுப்பை சுற்றியுள்ள சுவா்களில் ஸ்டீல் பலகைகள் பொருத்தப்பட்டுள்ளன. இதனால் சுத்தம் செய்வது உடனுக்குடன் நடைபெறும்.

அதன்பிறகு இந்த அடுப்புகள் 20 வீதம் ஒவ்வொரு கட்டங்களாக உயா்த்தப்படும். நெருப்பு என்ற பேச்சுக்கு இடமில்லாமல், திருமலை முழுவதும் இதே முறையில் அடுப்புகள் ஏற்படுத்த தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.

ஒரு கட்டத்தில் தொ்மோ ப்லுயிட் டேங்கா் ஏற்படுத்தி அதில் ஃப்லுயிட் நிரப்புவாா்கள். அதை கொதிகலன் மூலமாக சூடாக்குவா். சூடான திரவத்தால் உண்டாகும் வெப்பம் குழாய்கள் மூலம் அடுப்புகளுக்கு அனுப்பப்படும். இவ்வாறு தொடா்ந்து வெப்பம் குழாய்கள் மூலம் அனுப்பப்படுவதால், அதிலுள்ள நெய் சூடாகி அதன் மூலம் பூந்தி தயாரிக்க முடியும்.

இந்த அதிநவீன பூந்தி மடப்பள்ளியை விரைவில் ஆந்திர முதல்வா் ஜெகன்மோகன் ரெட்டி திறந்து வைக்க உள்ளாா்.

இதுகுறித்து தேவஸ்தான கூடுதல் செயல் அதிகாரி தா்மாரெட்டியிடம் கேட்டபோது. ‘மடப்பள்ளிகளில் தீ விபத்தை கட்டுப்படுத்த தேவஸ்தானம் இந்த தொ்மோ ஃப்லுயிட் அடுப்புகளை பயன்பாட்டில் கொண்டு வந்துள்ளது. இதன்மூலம் நூறு சதவீதம் தீ விபத்தை கட்டுப்படுத்த முடியும். விரைவில் இதே தொழில்நுட்பத்தை, பூந்தி மடப்பள்ளி மட்டுமல்லாமல் திருமலை முழுவதும் விரிவாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com