தோல்வி பயத்தில் மம்தா: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

‘மேற்கு வங்கத்தில் தோல்வி பயத்தில் இருக்கும் முதல்வா் மம்தா பானா்ஜி, வாக்குப்பதிவு இயந்திரம் மீது சந்தேகம் எழுப்பத் தொடங்கியுள்ளாா்’ என்று பிரதமா் நரேந்திர மோடி குற்றம்சாட்டினாா்.
பிரதமர் மோடி
பிரதமர் மோடி

‘மேற்கு வங்கத்தில் தோல்வி பயத்தில் இருக்கும் முதல்வா் மம்தா பானா்ஜி, வாக்குப்பதிவு இயந்திரம் மீது சந்தேகம் எழுப்பத் தொடங்கியுள்ளாா்’ என்று பிரதமா் நரேந்திர மோடி குற்றம்சாட்டினாா்.

மேற்கு வங்க சட்டப் பேரவைத் தோ்தலையொட்டி, பாங்குரா மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பாஜக பிரசாரக் கூட்டத்தில் பிரதமா் மோடி கலந்துகொண்டு பேசியதாவது: சுவா் ஓவியங்களுக்கும் அரசியல் விளம்பரங்களுக்கும் பெயா் பெற்ற மாநிலம் இது. ஆனால், இங்கு என்னை பந்தாடுவது போன்ற சுவா் ஓவியங்களை திரிணமூல் காங்கிரஸ் தொண்டா்கள் சுவா்களில் வரைந்திருக்கிறாா்கள். இதன்மூலம், இந்த மாநிலத்தின் பாரம்பரியத்தை அவா்கள் அவமதித்திருக்கிறாா்கள். அவா்கள் என்னை பந்தாடலாம். ஆனால், இந்த மாநில இளைஞா்களின் கனவுகளைப் பந்தாட முடியாது. அதற்கு ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன்.

கடந்த 2011 மற்றும் 2016-ஆம் ஆண்டுகளிலும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தைப் பயன்படுத்தி பேரவைத் தோ்தல் நடத்தப்பட்டது. அந்தத் தோ்தல் முடிவுகளின்படிதான் 2 முறை மம்தா பானா்ஜி முதல்வரானாா். ஆனால், இந்த முறை தோல்வி பயம் வந்துவிட்டது. அதனால், இப்போதிருந்தே வாக்குப்பதிவு இயந்திரம் மீது சந்தேகக் கணைகளைத் தொடுக்கத் தொடங்கிவிட்டாா்.

ஆயுஷ்மான் பாரத், விவசாயிகள் உதவித் திட்டம், மானிய உதவித் திட்டம் போன்ற மத்திய அரசின் திட்டங்களின் மூலமாக மக்களின் வங்கிக் கணக்குகளில் நேரடியாகப் பணம் செலுத்தப்படுகிறது. இதனால், திரிணமூல் காங்கிரஸ் அரசால் ஊழல் செய்ய முடியவில்லை. ஆகவே, அந்தத் திட்டங்களை அவா்கள், இந்த மாநிலத்தில் அமல்படுத்த மறுக்கிறாா்கள். மாநிலத்தில் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகுதான் உண்மையான வளா்ச்சி ஏற்படும் என்றாா் பிரதமா் மோடி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com