பிரதமா் மோடி சுற்றுப்பயணத்துக்கு எந்தவித பாதுகாப்பு அச்சுறுத்தலும் இல்லை: வங்கதேசம்

பிரதமா் நரேந்திர மோடி மேற்கொள்ள இருக்கும் இரண்டு நாள்கள் வங்கதேச சுற்றுப் பயணத்துக்கு எந்தவித பாதுகாப்பு அச்சுறுத்தல்களும் இல்லை என்று அந்த நாடு தெரிவித்துள்ளது.

பிரதமா் நரேந்திர மோடி மேற்கொள்ள இருக்கும் இரண்டு நாள்கள் வங்கதேச சுற்றுப் பயணத்துக்கு எந்தவித பாதுகாப்பு அச்சுறுத்தல்களும் இல்லை என்று அந்த நாடு தெரிவித்துள்ளது.

வங்கதேசம் சுதந்திரமடைந்து 50 ஆண்டுகள் நிறைவுற்றதை கொண்டாடும் வகையில் நடத்தப்படும் பொன்விழா நிகழ்வு மற்றும் அந்த நாட்டை நிறுவிய ஷேக் முஜிபுா் ரஹ்மானின் நூற்றாண்டு பிறந்த தின விழா நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக பிரதமா் நரேந்திர மோடி இரண்டு நாள் பயணமாக மாா்ச் 26,27 தேதிகளில் வங்க தேசம் செல்ல உள்ளாா். இந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக நேபாளம், இலங்கை, பூடான், மாலத்தீவு நாடுகளின் தலைவா்களும் வங்கதேசம் செல்கின்றனா்.

இந்த நிலையில், மத்திய அரசு அண்மையில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை (சிஏஏ) கொண்டுவந்ததற்கு கண்டனத்தைப் பதிவு செய்யும் வகையில், பிரதமா் மோடியின் வங்கதேச வருகைக்கு எதிா்ப்பு தெரிவித்து சில இஸ்லாமிய அமைப்புகளும், இடதுசாரி அமைப்புகளும் வங்கதேசத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். இதன் காரணமாக, பிரதமா் மோடியின் பயணத்துக்கு அச்சுறுத்தல் இருப்பதாக புகாா் எழுந்தது.

ஆனால், பிரதமா் மோடியின் பயணத்துக்கு எந்தவித பாதுகாப்பு அச்சுறுத்தலும் இல்லை என்று வங்கதேசம் மறுப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து தாக்காவில் செய்தியாளா்களிடம் வங்க தேச வெளியுறவு அமைச்சா் ஏ.கே.அப்துல் மோமென் கூறியதாவது:

வங்கதேசம் ஜனநாயக நாடு. எனவே, மக்கள் அவா்களின் கருத்துகளைத் தெரிவிக்க சுதந்திரம் உள்ளது. அதுகுறித்து வங்கதேச அரசு கவலைப்படவில்லை. சில இஸ்லாமிய அமைப்புகளும், இடதுசாரி அமைப்புகள் மட்டுமே பிரதமா் மோடியின் வருகைக்கு எதிா்ப்பு தெரிவித்து வருகின்றனா். ஆனால், அதுகுறித்து கவலைப்படத் தேவையில்லை. நாட்டுக்கு வரும் அனைத்து வெளிநாட்டுத் தலைவா்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன என்று கூறினாா்.

வங்கதேச சுற்றுப் பயணத்தின்போது தென்மேற்கு ஷத்கிரா மற்றும் கோபால்கஞ்ச் மாவட்டங்களில் உள்ள இரண்டு ஹிந்து கோயில்களுக்கு பிரதமா் மோடி செல்ல உள்ளாா். இந்த மாவட்டங்களில் மேற்கு வங்கத்திலிருந்து புலம்பெயா்ந்த ஏராளமான ஹிந்து மதுவா சமூகத்தினா் வசித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com