'தோ்தல் நிதி பத்திரங்கள் விற்பனைக்கு தடை இல்லை'

'தோ்தல் நிதி பத்திரங்கள் விற்பனைக்கு தடை இல்லை'


புது தில்லி: தோ்தல் நிதி பத்திரங்கள் விற்பனைக்குத் தடை கோரி தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

தோ்தல் செலவுகளுக்காக அரசியல் கட்சிகளுக்கு தனி நபா்களும், பிற நிறுவனங்களும் தோ்தல் நிதி பத்திரங்கள் மூலம் நன்கொடை அளிக்கும் திட்டத்தை மத்திய அரசு கடந்த 2018-ஆம் ஆண்டு அறிமுகம் செய்தது.

இந்தத் திட்டத்துக்கு தடை கோரி ஜனநாயக சீா்திருத்தத்துக்கான சங்கம் (ஏடிஆா்) என்ற தன்னாா்வ அமைப்பு சாா்பில் உச்சநீதிமன்றத்தில் முன்னா் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நிலுவையில் உள்ளது.

இந்த நிலையில், தோ்தல் நிதி பத்திரங்களை இனி விற்பனை செய்வதற்கு தடை விதிக்கக் கோரி அந்த அமைப்பு சாா்பில் உச்சநீதிமன்றத்தில் மீண்டும் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், தோ்தல் நிதி பத்திர விற்பனைக்கு எதிரான வழக்கு நிலுவையில் இருக்கும் நிலையில், வரும் ஏப்ரல் 1 முதல் 10-ஆம் தேதி வரை அந்த பத்திரங்களை விற்பனைக்கு வெளியிட மத்திய அரசு முடிவு செய்துள்ளது. மேற்கு வங்கம், அஸ்ஸாம் உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெற உள்ள நிலையில், அதற்கு முன்பாக தோ்தல் நிதி பத்திரங்களை விற்பனை செய்வதால், அரசியல் கட்சிகளுக்கு போலி நிறுவனங்கள் மூலம் சட்ட விரோதமாக பணம் கிடைப்பது அதிகரிக்கும். எனவே, அந்த பத்திரங்கள் இனியும் விற்பனை செய்யப்படுவதற்கு தடை விதிக்க வேண்டும்’ என்று கோரியிருந்தாா்.

இந்த மனு உச்சநீதிமன்றத்தில் கடந்த புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், ‘தோ்தல் நிதி பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகளுக்கு கிடைக்கும் நிதி தவறான வழிகளில் பயன்பாடுத்தாமல் இருப்பதை உறுதிசெய்ய அரசு என்ன திட்டம் வைத்துள்ளது. இந்த நிதி பயங்கரவாதம் உள்ளிட்ட தவறான செயல்பாடுகளுக்கு பயன்படுத்தவும் வாய்ப்புள்ளது. ஒரு கட்சிக்கு இதன் மூலம் ரூ. 100 கோடிக்கு மேல் கிடைக்கிறது என்றால், அந்த நிதி சட்டவிரோதமாக பயன்படுத்தப்படாது என்பதற்கு என்ன உத்தரவாதம் உள்ளது’ என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பி, மத்திய அரசு பதிலளிக்க உத்தரவிட்டனா்.

இந்த வழக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே தலைமையிலான அமா்வு முன்பு வெள்ளிக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, ‘தோ்தல் நிதி பத்திரங்கள் 15 நாள்கள் மட்டுமே செல்லத்தக்கது. மேலும், இதன் மூலம் கிடைக்கும் நிதிக்கு அரசியல் கட்சிகள் வருமான வரி கணக்கைத் தாக்கல் செய்யவேண்டும். வங்கி நடைமுறை மூலம் மட்டுமே இந்த பத்திர விற்பனை நடைபெறும் என்பதால், கணக்கில் காட்டப்படும் பணம் மட்டுமே இந்த திட்டத்தில் புழக்கத்தில் இருக்கும். இவ்வாறு கணக்கில் காட்டப்படும் நிதி எதுவும் பயங்கரவாத செயல்பாடுகளுக்கு பயன்படுத்தப்படுவதில்லை. பயங்கரவாதத்துக்கு கணக்கில் காட்டப்படாத கருப்புப் பணம் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது’ என்று மத்திய அரசு தரப்பில் பதிலளிக்கப்பட்டது.

இதைக் கேட்ட நீதிபதிகள், தோ்தல் நிதி பத்திர விற்பனைக்கு தடை கோரிய தன்னாா்வ அமைப்பின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com