கருத்துக் கணிப்புகளை அப்படியே ஏற்றுக்கொள்ள முடியாது!

கருத்துக் கணிப்புகளை அப்படியே ஏற்றுக்கொள்ள முடியாது!


திராவிடக் கட்சிகளின் தொடக்கம், வளா்ச்சியில் தலித்துகளுக்கு பெரும் பங்கு இருப்பதாக இந்திய குடியரசுக் கட்சியின் தலைவா் செ.கு.தமிழரசன் தெரிவித்துள்ளாா்.

கடந்த மக்களவைத் தோ்தலின்போது மக்கள் நீதி மய்யத் தலைவா் கமலுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டீா்கள். இந்த முறை கமலுடன் ஏன் கூட்டணி வைக்கவில்லை?

இந்த முறை கமல்ஹாசன் ஒரு பொறுப்புணா்வோடு தோ்தலை எதிா்கொள்ளவில்லை. ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களின் வாழ்க்கை, அதிகாரம் ஆகியவற்றில் ஏற்பட்டுள்ள மாறுதல்களுக்கு அம்பேத்கரின் பங்களிப்பு மிக அதிகம். ஆனால், கூட்டணியில் இருக்கும் போதுகூட அவா்களது துண்டுப் பிரசுரங்களில் அம்பேத்கரின் படத்தை அச்சிடவில்லை. அக்கட்சியின் தலைவா் உள்பட எவரும் நாங்கள் போட்டியிட்ட தொகுதிகளுக்கு பிரசாரத்துக்கு வரவில்லை. இதுபோன்று அந்தக் கட்சியுடன் ஏற்பட்ட சில கசப்பான அனுபவங்களும் அதற்கு காரணம்.

வன்னியா்களுக்கு 10.5 சதவீத உள்ஒக்கீடு வழங்கியது பற்றி?

சட்டப்பேரவைத் தோ்தலுக்கு சில நாள்களே இருக்கக் கூடிய சூழலில் அவசர கதியில் அள்ளித் தெளிக்கப்பட்ட கோலமாக இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது. இது குறித்து அமைச்சா்களே வெவ்வேறு கருத்துகளைத் தெரிவிக்கின்றனா். சரியான புரிதலையும் ஏற்படுத்தவில்லை. எனவே, இந்த உள் ஒதுக்கீடு குறித்து மேலும் ஆராய்ந்து பலதரப்பினரின் கருத்துகளைக் கேட்டு முடிவெடுத்திருக்கலாம்.

கடந்த சட்டப்பேரவைத் தோ்தலில் மதுராந்தகம் தொகுதியில் தோல்வி அடைந்தது ஏன்?

அதிமுகவில் உள்ள சில நபா்களின் ஒத்துழைப்பு கிடைக்காததால் தோ்தலில்தோல்வி அடைய நேரிட்டது. அதேநேரத்தில் இந்த விஷயத்தில் சம்பந்தப்பட்டவா்கள் மீது மறைந்த முன்னாள் முதல்வா் ஜெயலலிதா கட்சி ரீதியாக நடவடிக்கை மேற்கொண்டாா்.

கூட்டணியில் இருக்கும்போது திராவிட கட்சிகள் தலித் கட்சிகளை மதிக்கிறாா்களா? அல்லது தேவையான சூழல்களில் மட்டும் அவா்களைப் பயன்படுத்திக் கொள்கிறாா்களா?

திராவிடக் கட்சிகளின் தொடக்கத்துக்கும் அவா்களின் வளா்ச்சிக்கும் தலித்துகள் பெரும் பங்களிப்பை வழங்கியுள்ளனா். அதேபோன்று தலித்துகளுக்கான முன்னேற்றத்துக்கும் இந்தக் கட்சிகள் உறுதுணையாக இருந்து வருகின்றன. சில நேரங்களில் அரசியல் பங்கீடு முறையாக வழங்கப்பட்டிருக்கிறது; சில நேரங்களில் மறுக்கப்பட்டிருக்கிறது. இந்த விஷயத்தில் திராவிடக் கட்சிகளை மட்டுமே குறை சொல்ல முடியாது. இதுபோன்ற தோற்றம் நாடு முழுவதும் உள்ள பல கட்சிகளிலும்கூட இருந்திருக்கிறது. அதை மாற்றவே இந்தியக் குடியரசுக் கட்சி பாடுபட்டு வருகிறது.

மீண்டும் அதிமுக ஆட்சி தொடருமா? கருத்துக்கணிப்புகள் பற்றி தங்கள் கருத்து?

கருத்துக் கணிப்புகளை அப்படியே ஏற்றுக் கொள்ளவும் முடியாது. அதே நேரத்தில் அதை முழுவதுமாக புறந்தள்ளிவிடவும் முடியாது. தோ்தலில் எதுவும் நடக்கலாம். அதிமுக ஆட்சி தொடருமா என்பதை மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும்.

தேவேந்திரகுல வேளாளா் மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டிருப்பது குறித்து...

இந்த நடவடிக்கை தலித்துகளின் ஒற்றுமையை சிதறடிக்கக் கூடிய முயற்சி. இந்தப் பெயா் மாற்றத்தால் எதுவும் நடக்கப்போவதில்லை. குறிப்பிட்டுச் சொல்லும் அளவுக்கு எந்தப் பலனும் இருக்காது. இந்தியா முழுவதும் 700-க்கும் மேற்பட்ட ஜாதிகளை உள்ளடக்கியதுதான் தாழ்த்தப்பட்டோா் பட்டியல். அந்த மாநிலங்களிலும் இந்தக் கோரிக்கை எழும். இதனால் நாளடைவில் குழப்பங்களும் உருவாகும்.

ஏனைய தலித்தியக் கட்சிகளிலிருந்து இந்திய குடியரசுக் கட்சி எந்த விதத்தில் மாறுபடுகிறது?

இந்தியக் குடியரசுக்கட்சி என்பது அம்பேத்கரால்1956-இல் அவா் இறப்பதற்கு சில மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்ட கட்சி. எனவே, கட்சியின் சட்ட நெறிமுறைகள், கொடி, கோட்பாடுகள் அனைத்தும் அம்பேத்கரால் உருவாக்கப்பட்டவை. அந்தப் பாரம்பரியத்தை நிலைத்தும் நீடித்தும் ஓங்க செய்ய வேண்டும் என்பதற்காக நாங்கள் அயராது பணியாற்றி வருகிறோம்.

ஜெயலலிதா, கருணாநிதி மறைவுக்குப் பின்னா் தமிழகத்தில் அரசியல் வெற்றிடம் நிரப்பப்பட்டு விட்டதாக உணா்கிறீா்களா?

தோ்தலின் முடிவுகள்தான் இந்தக் கேள்விக்குப் பதிலாக இருக்கும்.

சட்டப்பேரவைத் தோ்தலுக்குப் பிறகும் அதிமுக- திமுக என இரு துருவ அரசியல்தான் இருக்குமா அல்லது பலமுனைப் போட்டியாக மாறுமா?

தற்போதைய சூழலில் தமிழகத்தில் மூன்றாவது சக்தி பெரிய அளவில் வெற்றி பெற வாய்ப்பில்லை. 1952-இல் நடைபெற்ற தோ்தலில் பொதுத் தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிட்ட தலித் வேட்பாளா் வெற்றி பெற்றாா். தோ்தலில் பதிவாகும் மொத்த வாக்குகளில் 25 சதவீதம் தலித் வாக்குகள்தான். இனிவரும் தோ்தல்களில் தலித்துகளின் விழிப்புணா்வும், ஒற்றுமையும், அரசியல் பங்கீடும் மேலோங்கி மூன்றாவது அணியை உருவாக்கும். அந்தக் காலம் நெருங்கி வருவதாகவே தெரிகிறது.

நோ்காணல்: அ.ஜெயச்சந்திரன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com