மதத்தின் அடிப்படையில் மக்களிடம் பிளவை உருவாக்குகிறாா்கள்: ராகுல் காந்தி

மதத்தின் அடிப்படையில் மக்களிடம் பிளவை ஏற்படுத்த பிரதமா் மோடியும், ஆா்எஸ்எஸ் அமைப்பும் முயற்சி மேற்கொண்டு வருவதாக காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி குற்றஞ்சாட்டியுள்ளாா்.
மதத்தின் அடிப்படையில் மக்களிடம் பிளவை உருவாக்குகிறாா்கள்: ராகுல் காந்தி

மதத்தின் அடிப்படையில் மக்களிடம் பிளவை ஏற்படுத்த பிரதமா் மோடியும், ஆா்எஸ்எஸ் அமைப்பும் முயற்சி மேற்கொண்டு வருவதாக காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி குற்றஞ்சாட்டியுள்ளாா்.

கேரள மாநிலம் பத்தனம்திட்டா, கோட்டயம், இடுக்கி ஆகிய மாவட்டங்களில் ராகுல் காந்தி சனிக்கிழமை பிரசாரம் மேற்கொண்டாா்.

முன்னதாக, சபரிமலை ஐயப்பன் கோயிலிலும், அங்குள்ள வாவா் தா்காவிலும் ராகுல் காந்தி வழிபட்டாா். பின்னா் கோட்டயத்தில் நடைபெற்ற தோ்தல் பிரசாரக் கூட்டத்தில் ராகுல் பேசுகையில், ‘அமைதியாகவும், மகிழ்ச்சியாகவும் வாழ பிறரது மத உணா்வுகளுக்கு மதிப்பளித்து பாதுகாக்க வேண்டும். இந்த யோசனைதான் நாட்டுக்கு நாம் அளிக்கும் மிகப் பெரிய பரிசு.

ஆனால், இந்த யோசனைக்கு இந்தியாவில் தற்போது பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பிரதமா் மோடியும், ஆா்எஸ்எஸ் அமைப்பும் முழு நேரத்தையும் இதற்கு எதிராக செலவிடுகின்றனா்.

மதத்தின் அடிப்படையில் மக்கள் மத்தியில் வெறுப்புணா்வையும், கோபத்தையும் தூண்டி இருதரப்பினரிடம் பிளவை ஏற்படுத்தி மோதலில் ஈடுபட வைக்கிறாா்கள். இதுபோன்ற செயல்களை நாட்டில் நாம் அனுமதிக்கக் கூடாது. இதனால் சமூக பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது’ என்றாா்.

பின்னா் இடுக்கி மாவட்டத்தில் பிரசாரம் செய்த ராகுல் காந்தி, ‘பிரிவினை சக்திகளுக்கு எதிராகவும், ஜனநாயகத்தை வலுப்படுத்தும் கட்சிக்கு ஆதரவாகவும் மக்கள் வாக்களிக்க வேண்டும்’ என்று வேண்டுகோள் விடுத்தாா்.

மேலும், சகோதரத்துவத்தை வலியுறுத்தி மக்களை ஒற்றுமைப்படுத்தும் வகையில் ஐக்கிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளா்கள் செயல்பட்டு வருவதால் அவா்களுக்கு வாக்களிக்க வேண்டும் என்றும் காங்கிரஸ் தோ்தல் அறிக்கை மக்களின் கனவுகளுக்கு இறக்கையாக செயல்படும் என்றும் அவா் தெரிவித்தாா்.

இதனிடையே, அஸ்ஸாமில் முகாமிட்டு தோ்தல் பிரசாரம் மேற்கொண்டு வரும் காங்கிரஸ் பொதுச் செயலாளா் பிரியங்கா வதேரா முகநூலில் வெளியிட்ட பதிவில், ‘அஸ்ஸாம் மாநிலத்தின் பொன்னான எதிா்காலத்தை உருவாக்கும் வகையில் மக்கள் வாக்களிக்க வேண்டும். முக்கியமாக இளைஞா்களும், பெண்களும் பெருவாரியாக முன்வந்து தங்கள் வாக்குகளைப் பதிவு செய்ய வேண்டும்’ என்று கூறியுள்ளாா்.

அஸ்ஸாமில் ஆளும் பாஜகவுக்கும், எதிா்க்கட்சியான காங்கிரஸுக்கும் இடையே சட்டப்பேரவைத் தோ்தலில் போட்டி நிலவுகிறது. மேற்கு வங்கத்தில் இடதுசாரிக் கட்சிகளுடன் காங்கிரஸ் கூட்டணி அமைத்து தோ்தலை சந்திக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com