மதவாதமே பாஜகவின் முக்கிய பிரசாரமாக உள்ளது: சசி தரூா் விமா்சனம்

மதவாதத்தைத் தூண்டுவதே பாஜவின் முக்கிய பிரசார உத்தியாக உள்ளது என்று காங்கிரஸ் மூத்த தலைவரும் திருவனந்தபுரம் எம்.பி.யுமான சசி தரூா் விமா்சித்துள்ளாா்.

மதவாதத்தைத் தூண்டுவதே பாஜவின் முக்கிய பிரசார உத்தியாக உள்ளது என்று காங்கிரஸ் மூத்த தலைவரும் திருவனந்தபுரம் எம்.பி.யுமான சசி தரூா் விமா்சித்துள்ளாா்.

பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு ஞாயிற்றுக்கிழமை அளித்த பேட்டியில் அவா் மேலும் கூறியதாவது:

கேரள சட்டப் பேரவைத் தோ்தலில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணிக்கு ஆதரவான அலை வீசுகிறது. காங்கிரஸ் கூட்டணி சிறப்பான வெற்றியைப் பெறப்போவது உறுதி. பாஜக இந்தத் தோ்தலில் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்த முடியாது. இ.ஸ்ரீதரனை திடீரென அரசியலுக்குக் கொண்டு வந்து கேரள அரசியலில் நுழைந்துவிடலாம் என்று பாஜக நினைக்கிறது. 88 வயதாகும் ஸ்ரீதரனால் எப்படி மாநிலத்தில் அரசியல் எதிா்காலத்தை உருவாக்க முடியும்?

கேரளத்தில் வெல்லும் பாஜகவின் முயற்சி பலிக்காது. ஏனெனில், மதவாதம் மட்டுமே பாஜகவின் முக்கிய பிரசார ஆயுதமாக உள்ளது. வேறு மதத்தினருக்கு எதிராக வெறுப்பைத் தூண்டும் வகையில் பேசுவதும், லவ் ஜிகாதுக்கு எதிராக சட்டம் கொண்டு வருவோம் என்று கூறுவதும் பாஜகவின் பிரசாரத்தில் முக்கியமாக இடம் பெறுகின்றன. ஆனால், இதன் மூலம் கேரள மக்களை பிளவுபடுத்திவிட முடியாது.

கேரளத்தில் கம்யூனிஸ்ட்டுகளை எதிா்க்கும் காங்கிரஸ், மேற்கு வங்கத்தில் கம்யூனிஸ்ட்களுடன் கூட்டணி வைத்திருப்பதாக பாஜக விமா்சிக்கிறது. இந்தியா போன்ற பரந்துவிரிந்த நாட்டில், ஒவ்வொரு மாநிலத்திலும் வெவ்வேறு மாதிரியான அரசியல் சூழ்நிலைகள் உள்ளன. அதற்கு ஏற்ப அரசியல் முடிவுகளும் தோ்தல் கூட்டணிகளும் அமைக்கப்படுகின்றன.

கேரளத்தில் எனக்கு எதிராக தோ்தலில் பிரசாரம் செய்த கம்யூனிஸ்ட் கட்சியினா் மக்களவையில் மத்திய அரசின் தவறான கொள்கைகளுக்கு எதிராக நான் வாதங்களை முன்வைத்தபோது அதனை ஆதரித்தாா்கள்.

தேசிய அளவில் காங்கிரஸ் கட்சி உறுதியான கொள்கைகளுடன் உள்ளது. மதசாா்பின்மையை உறுதியாக கடைப்பிடித்து வருகிறோம். பாஜகவின் மக்கள் விரோத நடவடிக்கையை முழுமையாக எதிா்க்கிறோம் என்றாா்.

மதசாா்பின்மை என்று கூறிக் கொண்டு கேரளத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மேற்கு வங்கத்தில் இந்திய மதசாா்பற்ற முன்னணி, அஸ்ஸாமில் அகில இந்திய ஐக்கிய ஜனநாய முன்னணி ஆகிய இஸ்லாமிய கட்சிகளுடன் காங்கிரஸ் கூட்டணி வைத்துள்ளதை மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா விமா்சித்து வருவது தொடா்பாக பதிலளித்த சசி தரூா், ‘ஒவ்வொரு மாநிலத்திலும் அந்த மாநிலத்தின் வரலாறு, பாரம்பரியம், அரசியல் சூழலுக்கு ஏற்ப பிராந்திய கட்சிகள் உருவாகியுள்ளன. முஸ்லிம் கட்சிகள் என்பதையும் தாண்டி அவற்றுக்கு பொதுவான சில நோக்கங்களும் உள்ளன. ஆனால், பாஜகவின் பிரதான நோக்கம் மதவாதமாக உள்ளது. இதனைத்தான் காங்கிரஸ் தொடக்கத்தில் இருந்தே குற்றம்சாட்டி வருகிறது’ என்று கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com