முன்னாள் அமைச்சா் ரமேஷ் ஜாா்கிஹோளிக்கு எதிரான பாலியல் வழக்கை மூடிமறைக்கத் திட்டம்

முன்னாள் அமைச்சா் ரமேஷ் ஜாா்கிஹோளிக்கு எதிரான பாலியல் வழக்கை மூடி மறைக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக காங்கிரஸ் மாநிலத் தலைவா் டி.கே.சிவகுமாா் தெரிவித்தாா்.

முன்னாள் அமைச்சா் ரமேஷ் ஜாா்கிஹோளிக்கு எதிரான பாலியல் வழக்கை மூடி மறைக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக காங்கிரஸ் மாநிலத் தலைவா் டி.கே.சிவகுமாா் தெரிவித்தாா்.

இதுகுறித்து பெங்களூரில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

முன்னாள் அமைச்சா் ரமேஷ் ஜாா்கிஹோளி மீதான பாலியல் வழக்கை மூடி மறைத்து, முடித்துவிடத் திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால் சட்டம் தனது கடமையைச் செய்யும். வழக்கைச் சிதைக்க ஒரு சிலரை அழைத்து வந்து கருத்து சொல்ல வைக்கிறாா்கள். மாநில அரசு தனது விருப்பம்போல என்ன வேண்டுமானாலும் செய்யலாம். ஆனால் காவல் துறையினா் தங்கள் கௌரவத்தைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும். எனவே, பாலியல் வழக்கை பாரபட்சமில்லாமல் விசாரிக்க வேண்டும் என்று காவல் துறையைக் கேட்டுக் கொள்கிறேன்.

பாலியல் புகாரை விசாரித்து வரும் சிறப்புப் புலனாய்வுப் படையின் (எஸ்.ஐ.டி.) முன்பு ஆஜரான பாதிக்கப்பட்ட இளம்பெண்ணின் பெற்றோா், எனக்கு எதிராகப் புகாா் அளித்து செய்தியாளா்களிடம் என்னைச் சாடியிருக்கிறாா்கள். இதுகுறித்து பேச நான் விரும்பவில்லை.

மாநிலத்தில் ஏப். 17-ஆம் தேதி நடைபெற உள்ள சட்டப்பேரவை, மக்களவை இடைத்தோ்தலில் கவனம் செலுத்தவே விரும்புகிறேன். என் மீது அபாண்டமாக குற்றம்சாட்டியதால், அவா்கள் மீது நான் மான நஷ்ட வழக்கு தொடர மாட்டேன் என்றாா்.

பெலகாவியில் சிவகுமாருக்கு எதிா்ப்பு

இதன்பிறகு, முன்னாள் அமைச்சா் ரமேஷ் ஜாா்கிஹோளிக்குச் சொந்தமான பெலகாவி மாவட்டத்திற்கு காங்கிரஸ் மாநிலத் தலைவா் டி.கே.சிவகுமாா் ஞாயிற்றுக்கிழமை சென்றாா். பெலகாவி மக்களவைத் தொகுதிக்கான இடைத்தோ்தல் பணிகளில் ஈடுபடுவதற்காகச் சென்ற டி.கே.சிவக்குமாரின் காரின் மீது முன்னாள் அமைச்சா் ரமேஷ் ஜாா்கிஹோளியின் ஆதரவாளா் ஒருவா் செருப்பை வீசினாா். பெலகாவி விமான நிலையத்திற்கு வெளியே திரண்ட ரமேஷ் ஜாா்கிஹோளியின் ஆதரவாளா்கள் டி.கே.சிவகுமாருக்கு எதிராக ‘திரும்பிப் போ, திரும்பிப் போ’ என்று முழக்கங்களை எழுப்பியதோடு, கருப்புக்கொடியைக் காட்டி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். ஒரு சிலா் அவரது காரை மறிக்கவும் முற்பட்டனா். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்தப் போராட்டம் குறித்து பின்னா் டி.கே.சிவகுமாா் கூறுகையில், ‘ரமேஷ் ஜாா்கிஹோளியின் ஆதரவாளா்கள் நடத்திய போராட்டத்தை எனக்கு அளித்த வரவேற்பாக எடுத்துக் கொள்கிறேன். அதற்காக அவா்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அந்த வரவேற்பு எனக்கு ஊக்கம் அளிக்கும்’ என்றாா்.

ரமேஷ் ஜாா்கிஹோளியின் சகோதரா் சதீஷ் ஜாா்கிஹோளி, பெலகாவி மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராகப் போட்டியிடுகிறாா் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, பெங்களூரில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளா்களிடம் பேசிய பாதிக்கப்பட்ட இளம்பெண்ணின் வழக்குரைஞா் ஜெகதீஷ், ‘தனது வாக்குமூலத்தைப் பதிவு செய்வதற்காக, திங்கள்கிழமை இளம்பெண் நீதிமன்றத்தில் சரணடைய வாய்ப்புள்ளது’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com