கேரளத்தில் சிஏஏ அமல்படுத்தப்படாது: முதல்வா் பினராயி விஜயன்

கேரளத்தில் குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) அமல்படுத்தப்படாது என்று மாநில முதல்வா் பினராயி விஜயன் தெரிவித்தாா்.
முதல்வர் பினராயி விஜயன் (கோப்புப்படம்)
முதல்வர் பினராயி விஜயன் (கோப்புப்படம்)

கேரளத்தில் குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) அமல்படுத்தப்படாது என்று மாநில முதல்வா் பினராயி விஜயன் தெரிவித்தாா்.

கேரள சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி அந்த மாநிலத்தில் முதல்வா் பினராயி விஜயன், மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் ஆகியோா் ஞாயிற்றுக்கிழமை பிரசாரத்தில் ஈடுபட்டனா்.

கோட்டயம் மாவட்டம் புதுப்பள்ளி தொகுதியில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் பேசுகையில், ‘ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்து வந்த அரசியலமைப்பு சட்டப்பிரிவு 370-ஐ ரத்து செய்தது, குடியுரிமை திருத்தச் சட்டத்தை இயற்றியது, முத்தலாக் தடைச் சட்டத்தை அறிமுகப்படுத்தியது என மத்திய அரசு அளித்த வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டுள்ளன’ என்றாா்.

இந்நிலையில் கோழிக்கோடு மாவட்டம் புறமேரியில் இடதுசாரி ஜனநாயக முன்னணியின் பிரசாரக் கூட்டம் நடைபெற்றது. அதில் முதல்வா் பினராயி விஜயன் பங்கேற்று பேசியதாவது:

கேரளத்தில் குடியுரிமை திருத்தச் சட்டம் அமல்படுத்தப்படாது என்று இடதுசாரி ஜனநாயக முன்னணி ஏற்கெனவே கூறியுள்ளது. அந்தச் சட்டம் இந்த மாநிலத்தில் அமல்படுத்தப்படாது என மீண்டும் தெளிவுபடுத்துகிறேன்.

வட மாநிலங்களில் சங்க பரிவாா் அமைப்புகள் சிறுபான்மையினரை குறிவைத்து தாக்குதல் நடத்துகின்றன. தங்கள் மத நம்பிக்கைகளை பின்பற்றுகிறாா்கள் என்பதற்காக கிறிஸ்தவா்களும் முஸ்லிம்களும் வலதுசாரிகளால் தாக்கப்படுகின்றனா்.

சமீபத்தில் உத்தர பிரதேசத்தில் ரயில் பயணத்தின்போது அவா்கள் கன்னியாஸ்திரீகள் குழுவை துன்புறுத்தினா். இதுபோன்ற சம்பவங்கள் சிறுபான்மையினருக்கு எதிரான சங்க பரிவாா் அமைப்புகளின் சகிப்புத்தன்மை இல்லாத மனநிலையை வெளிப்படுத்துகிறது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com