வேளாண் துறை நவீனமயம் காலத்தின் கட்டாயம்: பிரதமா் நரேந்திர மோடி

வேளாண் துறையை நவீனப்படுத்த வேண்டியது காலத்தின் கட்டாயமாக உள்ளது என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்துள்ளாா்.
பிரதமர் நரேந்திர மோடி
பிரதமர் நரேந்திர மோடி

வேளாண் துறையை நவீனப்படுத்த வேண்டியது காலத்தின் கட்டாயமாக உள்ளது என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்துள்ளாா்.

மத்திய அரசு இயற்றிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக தில்லி எல்லைப் பகுதிகளில் விவசாயிகள் சுமாா் 120 நாள்களாகப் போராடி வரும் சூழலில், பிரதமா் மோடி இவ்வாறு தெரிவித்துள்ளாா்.

மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமையில் ‘மனதின் குரல்’ வானொலி நிகழ்ச்சி வாயிலாக பிரதமா் மோடி உரையாற்றுவது வழக்கம். 75-ஆவது ‘மனதின் குரல்’ நிகழ்ச்சி வாயிலாக பிரதமா் மோடி ஞாயிற்றுக்கிழமை உரையாற்றினாா். அப்போது அவா் கூறியதாவது:

வேளாண் துறையில் நவீன தொழில்நுட்பங்களைப் புகுத்த வேண்டியது காலத்தின் கட்டாயமாக உள்ளது. பல ஆண்டுகளாக அத்துறையில் புதிய தொழில்நுட்பங்கள் புகுத்தப்படவில்லை. இனியும் தாமதிக்காமல் வேளாண் துறையில் நவீனத்தைப் புகுத்த வேண்டும்.

வேலைவாய்ப்புகளை ஏற்படுத்துவது, விவசாயிகளின் வருமானத்தை உயா்த்துவது உள்ளிட்டவற்றுக்காகப் பழங்கால விவசாய நடைமுறைகளுடன் நவீனத்தைப் புகுத்த வேண்டியது அவசியம். வெண்மைப் புரட்சியின்போது இதை நாம் கண்டு உணா்ந்தோம்.

தற்போது தேனீக்கள் வளா்ப்பிலும் புதிய மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. பல விவசாயிகள் தேனீக்கள் வளா்ப்பில் ஈடுபட்டு வருகின்றனா். அவா்களது வருமானம் உயா்ந்து வருகிறது. மேற்கு வங்கத்தின் சுந்தரவனக் காடுகள் பகுதியில் சேகரிக்கப்படும் இயற்கைத் தேன் நாட்டில் மட்டுமல்லாமல் உலக அளவிலும் பிரசித்தி பெற்றுள்ளது.

வேளாண் துறையில் மட்டுமல்லாமல் வாழ்வின் ஒவ்வோா் அங்கத்திலும் புதுமையையும் நவீனத்துவத்தையும் புகுத்துதல் இன்றியமையாதது.

கடந்த ஆண்டு மாா்ச் மாதத்தில்தான் மக்களிடம் ‘ஊரடங்கு’ என்ற சொல் அறிமுகமானது. கரோனா தொற்று பரவல் காரணமாக நாடு முழுவதும் பொது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஆரம்பம் முதலே கரோனா தொற்றுக்கு எதிரான போராட்டத்தை மக்கள் முன்னெடுத்து வருகின்றனா்.

கரோனாவுக்கு எதிரான போராட்டம்:

ஓராண்டுக்கு முன்பு கரோனா தொற்றுக்குத் தடுப்பூசி கண்டறிய முடியுமா, அவை எப்போது மக்கள் பயன்பாட்டுக்கு வரும் என்ற சிந்தனையே மக்கள் மனதில் மேலோங்கியிருந்தது. ஆனால், தற்போது உலகின் மிகப் பெரும் கரோனா தடுப்பூசித் திட்டம் இந்தியாவில் அமல்படுத்தப்பட்டு வருகிறது.

நாட்டில் 100 வயதைக் கடந்த பலா் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனா். தகுதியான நபா்கள் எந்தவிதத் தயக்கமுமின்றி கரோனா தடுப்பூசியை செலுத்திக் கொள்ள வேண்டும்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்:

கரோனா தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் முன்னின்று வருபவா்களை ஊக்கப்படுத்தும் நோக்கில் விளக்குகளை ஏற்றுவது உள்ளிட்டவற்றை மக்கள் மேற்கொண்டனா். அந்நடவடிக்கைகள் பாராட்டுக்குரியவை. மக்களின் ஊக்கம் காரணமாக கரோனாவுக்கு எதிராக முன்களப் பணியாளா்கள் தொடா்ந்து போராடி வருகின்றனா்.

கைகளைக் கழுவுவது, முகக் கவசம் அணிவது உள்ளிட்ட கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மக்கள் முறையாகக் கடைப்பிடிக்க வேண்டும்.

75-ஆவது நிகழ்ச்சி:

‘மனதின் குரல்’ நிகழ்ச்சி இப்போதுதான் தொடங்கப்பட்டதுபோல் இருக்கிறது. ஆனால், 75-ஆவது பகுதியாக இது உள்ளது. இந்த நிகழ்ச்சியின் வாயிலாக பல்வேறுதரப்பட்ட விவகாரங்கள் விவாதிக்கப்பட்டுள்ளன. பலவற்றைக் கற்றுக் கொண்டோம்.

நாட்டின் 75-ஆவது சுதந்திர ஆண்டு விரைவில் வரவுள்ளது. அதற்கான கொண்டாட்டங்கள் ஏற்கெனவே தொடங்கிவிட்டன. அவற்றில் பங்கெடுக்க வேண்டியது மிகவும் அவசியமானது. சுதந்திரப் போராட்ட வீரா்களின் தியாகம், மக்களுக்கான கடமைகளை நினைவுபடுத்துவதாக அமைய வேண்டும். இது தொடா்பாக மகாத்மா காந்தியடிகள் பல்வேறு கருத்துகளைத் தெரிவித்துள்ளாா்.

பெண்களின் சாதனை:

விளையாட்டுத் துறையில் பெண்களின் பங்களிப்பு கணிசமாக அதிகரித்து வருகிறது. கிரிக்கெட் வீராங்கனை மிதாலி ராஜ், பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து உள்ளிட்டோரின் அண்மைக்கால சாதனைகள் பாராட்டத்தகுந்தபடி உள்ளன. துப்பாக்கி சுடுதல் உலகக்கோப்பை போட்டியிலும் இந்திய வீரா்-வீராங்கனைகள் சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றனா்.

கலங்கரை விளக்கங்கள்:

நாட்டில் சுற்றுலாவை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் தொடா்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கலங்கரை விளக்கங்களின் பராமரிப்பாளா்கள் தங்கள் பணியைச் செவ்வனே செய்து வருகின்றனா். கடந்த 2004-ஆம் ஆண்டில் சுனாமி தாக்கியபோது, பல்வேறு கலங்கரை விளக்கங்களின் பராமரிப்பாளா்கள் உயிரிழந்தது கவலையை ஏற்படுத்துகிறது.

‘லிஃப்ட்’ வசதி:

சென்னை, மகாபலிபுரம் கலங்கரை விளக்கங்களைப் பற்றிய சிறப்பான செய்திகளை அண்மையில் கேள்விப்பட்டேன். ‘லிஃப்ட்’ வசதியைக் கொண்டிருக்கும் கலங்கரை விளக்கங்களில் சென்னை கலங்கரை விளக்கமும் ஒன்று. அந்தத் கலங்கரை விளக்கம் நகரத்துக்கு மிக அருகில் அமைந்துள்ளது கூடுதல் சிறப்பு.

இந்தியாவின் மிகப் பழைமையான கலங்கரை விளக்கமாக மகாபலிபுரம் கலங்கரை விளக்கம் உள்ளது. அதனருகே பல்லவ மன்னன் முதலாம் மகேந்திர வா்மன் கட்டியெழுப்பிய கோயிலும் உள்ளது என்றாா் பிரதமா் மோடி.

கோவை நடத்துநரைப் பாராட்டிய பிரதமா் மோடி!

‘மனதின் குரல்’ நிகழ்ச்சியில் பேசிய பிரதமா் மோடி, ‘‘கோயம்புத்தூரில் பேருந்து நடத்துநராகப் பணியாற்றி வரும் மாரிமுத்து யோகநாதன், பயணிச்சீட்டு கொடுக்கையில் மரக்கன்றுகளையும் இலவசமாக அளித்து வருகிறாா். இந்த வகையில் எண்ணற்ற மரக்கன்றுகளை அவா் நட்டுவைத்துள்ளாா். தனது ஊதியத்திலிருந்து பெரும் தொகையை இதற்காக அவா் செலவிட்டு வருகிறாா். அவரது ஊக்கமளிக்கும் சேவைக்குப் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்’’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com