ஜல்லிக்கட்டு நாயகன் பிரதமர் மோடிதான்: ஓ.பன்னீர்செல்வம்

தமிழகத்தைப் பொருத்தவரை ஜல்லிக்கட்டு நாயகன் பிரதமர் மோடி தான் என்று தாராபுரம் பிரசார பொதுக்கூட்டத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் புகழாரம் சூட்டியுள்ளார்.
துணைமுதல்வர் ஓ.பன்னீர் செல்வம்
துணைமுதல்வர் ஓ.பன்னீர் செல்வம்

தமிழகத்தைப் பொருத்தவரை ஜல்லிக்கட்டு நாயகன் பிரதமர் மோடி தான் என்று தாராபுரம் பிரசார பொதுக்கூட்டத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் புகழாரம் சூட்டியுள்ளார்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் பிரசார பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடியுடன் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, துணைமுதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் பேசியதாவது:

"சுதந்திரத்துக்கு பின் இந்தியாவை ஆட்சி செய்து சீர்குலைத்த காங்கிரஸ் நமது நாட்டை பல ஆண்டுகளுக்கு பின்நோக்கி கொண்டு சென்று விட்டது.

இந்தியாவில் எந்தவிதமான வளர்ச்சிப்பணிகளும் இல்லாமல் மிகுந்த இருளுக்குள் தள்ளியது காங்கிரஸ் கட்சி.காங்கிஸுடன் கூட்டணி ஆட்சி செய்த திமுக கிட்டத்தட்ட 16 ஆண்டுகள் மத்தியில் ஆளுகின்ற பொறுப்பை ஏற்றிருந்தனர்.

இந்தியாவுக்கும் மிகப் பிரமாண்ட திட்டத்தையும், தமிழகத்துக்கும் எந்தத்திட்டத்தையும் கொண்டு வந்து சேர்க்கவில்லை. ஆனால் இன்றைக்கும் நடைபெற்றுக் கொண்டிருக்கும் பாஜக அரசு தமிழகத்துக்கு தேவையான நிதியைக் கொடுத்துக் கொண்டிருக்கிறது.

காங்கிரஸ் ஆட்சியில் ஒரு மருத்துவக் கல்லூரிக்கு அனுமதி வாங்க பட்டபாடு எங்களுக்குத்தான் தெரியும். ஆனால் ஒரே ஆண்டில் 11 மருத்துவக் கல்லூரிக்கு அரசு ஆணை வழங்கிய பிரதமருக்கு கோடான கோடி நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

எனக்கு முன்னாள் பேசியவர்கள் எல்லாம் சொன்னார்கள் நான் ஜல்லிக்கட்டு நாயகன் என்று. நான் ஒரு உண்மையை மட்டும் இந்தக் கூட்டத்தின் மூலமாக சொல்லக் கடமைப்பட்டுள்ளேன்.

காங்கிரஸ்-திமுக ஆட்சியின்போதுதான் காளையை விலங்குகள் பட்டியலில் சேர்த்ததன் காரணமாகத்தான் நீதிமன்றம் ஜல்லிக்கட்டுக்கு தடைவிதித்தது. மெரீனாவில் 15 லட்சம் மக்கள் ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்க வேண்டும் என்று போராட்டம் நடத்தினார்கள்.

தமிழக முதல்வராக நான் இருந்தபோது பிரதமர் மோடியை நேரில் சென்று சந்தித்தேன். அப்போது தமிழகத்தில் மிகப்பெரிய பிரச்னை 15 லட்சம் பேர் மெரீனாவில் 20 நாள்களாக போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

இந்தப் பிரச்னை உலக நாடுகளில் எல்லாம் பரவிக்கொண்டிருக்கிறது என்று சொன்னவுடன், 24 மணி நேரத்தில் 4 துறைகளின் அரசாணையைப் பெற்றுத்தந்து ஜல்லிக்கட்டின் மீதான தடையை உடைத்தெரிந்த பெருமை பிரதமர் மோடியையே சாரும்.

ஆகவே, ஜல்லிக்கட்டின் உண்மையான கதாநாயகன் பிரதமர் மோடிதான் என்பதைத் நெஞ்சார்ந்த நன்றிடன் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழகத்தில் 2 ஆவது முறையாக முதல்வர் ஜெயலலிதா ஆட்சிப் பொறுப்பேற்றபோது நல்ல பல திட்டங்களை நாட்டு மக்களுக்கு அர்ப்பணித்துள்ளார்.

இந்தத்திட்டங்கள் நம்முடையை எதிர்கால சந்ததியினரையும் சென்றடையவேண்டும் என்றவகையில் தொலைநோக்குத் திட்டங்களை அர்ப்பணித்துள்ளார். ஒரு மனிதனுக்கு உணவு, உடை, இருப்பிடம் இதை நல்லாட்சியாளர்கள் கொடுக்கவேண்டும்.

விலையில்லா 20 கிலோ அரிசி, ஏழை மக்களுக்கு வீடு இல்லாமல் இருக்கக்கூடாது என்ற வகையில் 2023 ஆம் ஆண்டுக்குள் தரமான உறுதியான கான்கிரீட் வீடுகள் அல்லது தனிநபர்கள் குடியிருப்புகள் கட்டிக் கொடுக்கப்படும் என்று அறிவித்திருந்தார்.

இதில், தற்போது 6 லட்சம் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு ஏழைகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.ஆகவே, வரும் 2023 ஆம் ஆண்டுக்குள் குடிசைப்பகுதியில் வாழும் அனைத்து ஏழை மக்களுக்கும் மத்திய அரசின் துணையுடன் அடுக்குமாடி வீடுகள் கட்டித்தரப்படும்.

ஏழை பெண்களின் திருமண நிதியுதவியாக ரூ.25 ஆயிரமும், பட்டதாரியாக இருந்தால் பெண் பட்டதாரியை ஊக்குவிக்க வேண்டும் என்று திருமண நிதியுதவியாக ரூ.50 ஆயிரமும் 4 கிராம் தங்கமும் வழங்கப்பட்டு வந்தது.

இதன் பிறகு 2016 ஆம் ஆண்டில் தற்போது தாலிக்கு 8 கிராம் தங்கமாக உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் தேர்தல் அறிக்கையை வெளியிட்டுக் கொண்டிருக்கிறது.

அதிமுக 2011, 2016 இல் தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதிகள் தற்போது நலத்திட்ட உதவிகளாகக் கொடுத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் திமுக ஆட்சியில் 2006 ஆம் ஆண்டு தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளபடி 2 ஏக்கர் நிலம் கொடுத்தார்களா இல்லை.

கருணாநிதி முதல்வராக இருந்தபோது எதிர்க்கட்சியில் இருந்த நாங்கள் கேட்டபோது கோபமாக எழுந்திருத்து கையளவு நிலமாகவு தருவோம் என்று செல்லி விட்டு அமர்ந்துவிட்டார்.

ஆனால் தற்போது தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளபடி திருமண நிதியுதவி ரூ.25 ஆயிரத்தில் இருந்து ரூ.35 ஆயிரமாகவும், ரூ.50 ஆயிரம் திருமண நிதியுதவி ரூ.60 ஆயிரமாகவும் உயர்த்தி வழங்கப்படும்.

சமூக பாதுகாப்புத் திட்டங்களுக்கான நிதியை அதிகரித்துத் தருவதாக வாக்குறுதியளித்துள்ளோம். ஆகவே, தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும்" என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com