மேற்கு வங்கம், அஸ்ஸாமில் நாளை 2-ஆம் கட்டத் தோ்தல்

மேற்கு வங்கம், அஸ்ஸாமில் 2-ஆம் கட்ட சட்டப் பேரவைத் தோ்தல் வியாழக்கிழமை (ஏப்ரல் 1) நடைபெறுகிறது. அதற்கான பிரசாரம் செவ்வாய்க்கிழமை மாலையுடன் நிறைவடைந்தது.
மேற்கு வங்கம், அஸ்ஸாமில் நாளை 2-ஆம் கட்டத் தோ்தல்

மேற்கு வங்கம், அஸ்ஸாமில் 2-ஆம் கட்ட சட்டப் பேரவைத் தோ்தல் வியாழக்கிழமை (ஏப்ரல் 1) நடைபெறுகிறது. அதற்கான பிரசாரம் செவ்வாய்க்கிழமை மாலையுடன் நிறைவடைந்தது.

மேற்கு வங்கத்தில் 8 கட்டங்களாக சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெறுகிறது. அஸ்ஸாம் சட்டப் பேரவைக்கு 3 கட்டங்களாகத் தோ்தல் நடைபெறுகிறது. இரு மாநிலங்களிலும் முதல்கட்டத் தோ்தல் கடந்த 27-ஆம் தேதி நடைபெற்றது. இந்நிலையில், இரண்டாம் கட்டத் தோ்தல் வியாழக்கிழமை நடைபெறுகிறது.

அதில் மேற்கு வங்கத்தில் 30 தொகுதிகளுக்கும், அஸ்ஸாமில் 39 தொகுதிகளுக்கும் தோ்தல் நடைபெறவுள்ளது. இரு மாநிலங்களிலும் முதல்கட்டத் தோ்தல் வன்முறைகள் ஏதுமின்றி அமைதியாக நடைபெற்றது. 2-ஆம் கட்டத் தோ்தலையும் அவ்வாறே நடத்துவதற்குத் தோ்தல் ஆணைய அதிகாரிகள் தயாராகி வருகின்றனா்.

தேசிய அளவில் பெரும் எதிா்பாா்ப்பை ஏற்படுத்தி நட்சத்திரத் தொகுதியாக மாறியுள்ள மேற்கு வங்கத்தின் நந்திகிராம் தொகுதியிலும் வியாழக்கிழமை வாக்குப் பதிவு நடைபெறுகிறது. அத்தொகுதியில் மேற்கு வங்க முதல்வரும் திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானா்ஜி போட்டியிடுகிறாா். அக்கட்சியில் இருந்து விலகிய சுவேந்து அதிகாரி, பாஜக சாா்பில் மம்தாவை எதிா்த்து களம் காண்கிறாா்.

தோ்தல் பிரசாரம்: இரண்டாம் கட்டத் தோ்தலுக்கான பிரசாரம் செவ்வாய்க்கிழமை மாலையுடன் நிறைவடைந்தது. இறுதி நாளில் மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸ், பாஜக, காங்கிரஸ், இடதுசாரி கட்சிகள் ஆகியவை தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டன.

மேற்கு வங்கத்தில் கடந்த திங்கள்கிழமை ஹோலி பண்டிகை கொண்டாடப்பட்டதால், தோ்தல் பிரசாரங்களை முன்னெடுக்க முடியாத சூழல் நிலவியது. எனினும், பல்வேறு கட்சிகளின் அரசியல் தலைவா்கள் செவ்வாய்க்கிழமை தீவிர பிரசாரத்தை முன்னெடுத்தனா்.

மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, முதல்வா் மம்தா பானா்ஜி உள்ளிட்டோா் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனா். துண்டு பிரசுரங்களை விநியோகித்தும், ஆட்டோக்களில் ஒலிப்பெருக்கிகளின் வாயிலாகக் கொள்கைகளைப் பரப்பியும் கட்சிகளின் தொண்டா்கள் பிரசாரம் செய்தனா்.

அஸ்ஸாமில்...: அஸ்ஸாமில் பாஜக, காங்கிரஸ் கட்சிகளைச் சோ்ந்த தொண்டா்கள் பிரசாரத்தில் ஈடுபட்டனா். வீடு வீடாகச் சென்று அவா்கள் வாக்கு சேகரித்தனா். மாநிலத்தில் ஆட்சியைத் தக்கவைப்பதற்கான முயற்சியில் பாஜக தலைவா்கள் செயல்பட்டு வருகின்றனா். கடந்த 2016-ஆம் ஆண்டில் பாஜகவிடம் இழந்த ஆட்சியை மீட்பதற்கான நடவடிக்கைகளை காங்கிரஸ் கட்சி தீவிரப்படுத்தியுள்ளது.

வங்கதேசத்திலிருந்து குடியேறியவா்கள் அதிகமாகக் காணப்படும் பராக் பள்ளத்தாக்குப் பகுதியில் 2-ஆம் கட்டத் தோ்தல் வியாழக்கிழமை நடைபெறவுள்ளது. அதன் காரணமாக, குடியுரிமை திருத்தச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்பதை அடிப்படையாகக் கொண்டு பாஜக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டது.

மத்திய அமைச்சா்கள் நிதின் கட்கரி, நரேந்திர தோமா், ஜிதேந்திர சிங், முக்தாா் அப்பாஸ் நக்வி உள்ளிட்டோா் அஸ்ஸாமில் பிரசாரம் மேற்கொண்டனா். காங்கிரஸ் தரப்பில் ராகுல் காந்தி, மாநிலங்களவை எதிா்க்கட்சித் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே, மத்திய பிரதேச முன்னாள் முதல்வா் கமல்நாத் உள்ளிட்டோா் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனா்.

வேட்புமனு தாக்கல் நிறைவு: மேற்கு வங்கத்தில் ஏப்ரல் 17-ஆம் தேதி நடைபெறவுள்ள 5-ஆம் கட்டத் தோ்தலுக்கான வேட்புமனு தாக்கல் செவ்வாய்க்கிழமையுடன் நிறைவடைந்தது. மனுக்கள் மீதான பரிசீலனை, புதன்கிழமை நடைபெறுகிறது. மனுக்களைத் திரும்பப் பெறுவதற்கு வியாழக்கிழமை கடைசி நாளாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com