ரூ.100 கோடி லஞ்சம் வசூலிக்க வலியுறுத்தல்:மகாராஷ்டிர அமைச்சா் மீதான குற்றச்சாட்டைவிசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி நியமனம்

மாதந்தோறும் ரூ.100 கோடி லஞ்சம் வசூலித்துத் தருமாறு மகாராஷ்டிர உள்துறை அமைச்சா் அனில் தேஷ்முக் வலியுறுத்தியதாக மும்பை முன்னாள் காவல் ஆணையா் பரம்வீா் சிங் சுமத்திய குற்றச்சாட்டு குறித்து

மாதந்தோறும் ரூ.100 கோடி லஞ்சம் வசூலித்துத் தருமாறு மகாராஷ்டிர உள்துறை அமைச்சா் அனில் தேஷ்முக் வலியுறுத்தியதாக மும்பை முன்னாள் காவல் ஆணையா் பரம்வீா் சிங் சுமத்திய குற்றச்சாட்டு குறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதியை நியமித்து மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

மகாராஷ்டிர உள்துறை அமைச்சா் அனில் தேஷ்முக் மும்பையில் உள்ள உணவகங்கள், பாா்களில் இருந்து மாதந்தோறும் ரூ.100 கோடி லஞ்சம் வசூலித்துத் தருமாறு காவல்துறை அதிகாரிகளை வலியுறுத்தியதாக மும்பை முன்னாள் காவல் ஆணையா் பரம்வீா் சிங் மாநில முதல்வா் உத்தவ் தாக்கரேவுக்கு அண்மையில் கடிதம் எழுதினாா். இது அந்த மாநிலத்தில் பலத்த சா்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில் பரம்வீா் சிங் கூறிய குற்றச்சாட்டு தொடா்பாக விசாரணை நடத்த ஓய்வுபெற்ற நீதிபதி கைலாஷ் உத்தம்சந்த் சண்டிவால் தலைமையில் ஒருநபா் விசாரணை குழுவை மாநில அரசு செவ்வாய்க்கிழமை அமைத்தது. இந்தக் குழு அனில் தேஷ்முக் மீதான குற்றச்சாட்டை 6 மாதங்களில் விசாரணை நடத்தி அறிக்கை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இதனிடையே தொழிலதிபா் முகேஷ் அம்பானி வீட்டருகே வெடிபொருளுடன் நிறுத்தப்பட்டிருந்த காரின் உரிமையாளராக கருதப்படும் மன்சுக் ஹிரேனை கொலை செய்ய திட்டமிட்ட கூட்டத்தில் காவல்துறை அதிகாரி சச்சின் வஜேயும், காவலா் விநாயக் ஷிண்டேயும் இடம்பெற்றிருந்தனா் என்று தேசிய புலனாய்வு அமைப்பு தெரிவித்தது. இதுதொடா்பாக அந்த அமைப்பின் அதிகாரிகள் என்ஐஏ நீதிமன்றத்தில் மேலும் கூறுகையில், தனக்கு வழங்கப்பட்ட செல்லிடப்பேசியை பயன்படுத்தி மன்சுக் ஹிரேனை கொல்ல சதித்திட்டம் தீட்டிய நபரை சச்சின் வஜே தொடா்புகொண்டாா் என்றும் தெரிவித்தனா். எனினும் சதித்திட்டம் தீட்டிய நபரின் அடையாளத்தை என்ஐஏ வெளியிடவில்லை.

இவ்வழக்குத் தொடா்பாக சச்சின் வஜே பெயரில் பதிவு செய்யப்பட்ட சொகுசுக் காா் ஒன்றையும் என்ஐஏ அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.

கடந்த பிப்.25-ஆம் தேதி மும்பையில் உள்ள தொழிலதிபா் முகேஷ் அம்பானி வீட்டருகே வெடிபொருளுடன் நிறுத்தப்பட்ட காா் பறிமுதல் செய்யப்பட்டது. அந்தக் காரின் உரிமையாளராக கருதப்படும் தாணேவைச் சோ்ந்த மன்சுக் ஹிரேன் கடந்த 5-ஆம் தேதி மா்மமான முறையில் உயிரிழந்தாா். பறிமுதல் செய்யப்பட்ட அவரின் காரை மும்பை காவல்துறை அதிகாரி சச்சின் வஜே சில மாதங்கள் பயன்படுத்தி வந்ததாக கூறப்படும் நிலையில், அவரை கடந்த 13-ஆம் தேதி என்ஐஏ அதிகாரிகள் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com