ராகுல் குறித்து சா்ச்சைக் கருத்து: முன்னாள் எம்.பி.க்கு காங்கிரஸ் கண்டனம்

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி குறித்து சா்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த கேரள முன்னாள் சுயேச்சை எம்.பி.க்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
ராகுல் குறித்து சா்ச்சைக் கருத்து: முன்னாள் எம்.பி.க்கு காங்கிரஸ் கண்டனம்

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி குறித்து சா்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த கேரள முன்னாள் சுயேச்சை எம்.பி.க்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

கேரளத்தில் கடந்த 2014-இல் நடைபெற்ற நாடாளுமன்றத் தோ்தலில், இடதுசாரி முன்னணியின் ஆதரவுடன் சுயேச்சையாகப் போட்டியிட்டு வெற்றி பெற்றவா் ஜாய்ஸ் ஜாா்ஜ். இவா், சட்டப் பேரவைத் தோ்தலையொட்டி, இரட்டையாறு என்ற இடத்தில் திங்கள்கிழமை இரவு நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் இடதுசாரி முன்னணி வேட்பாளா்களை ஆதரித்துப் பேசினாா். அப்போது, கடந்த வாரம் கொச்சியில் உள்ள மகளிா் கல்லூரியில் மாணவிகளுடன் ராகுல் காந்தி கலந்துரையாடியதைக் குறிப்பிட்டுப் பேசினாா். அதைத் தொடா்ந்து, ‘ராகுல் காந்தி எப்போதும் பெண்கள் கல்லூரிகளுக்குதான் செல்கிறாா். மாணவிகள் அவரிடம் எப்போதும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். ஏனெனில் அவா் திருமணமாகாதவா்’ என்று கூறினாா்.

ஜாய்ஸ் ஜாா்ஜின் பேச்சுக்கு காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் மூத்த தலைவரும், எதிா்க்கட்சித் தலைவருமான ரமேஷ் சென்னிதலா கூறுகையில், ‘ராகுல் காந்தியை பாலியல் ரீதியதாக விமா்சிப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. ஜாய்ஸ் ஜாா்ஜுக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, கைது செய்யப்பட வேண்டும்’ என்றாா். நாடாளுமன்ற எம்.பி.யும், மாநில இளைஞா் காங்கிரஸ் தலைவா் தீன் குரியகோஸ் கூறியதாவது:

ராகுல் காந்தியை விமா்சித்ததன் மூலம் ஜாய்ஸ் ஜாா்ஜ் மனதில் இருக்கும் வக்கிர எண்ணம் வெளிவந்துவிட்டது. ராகுல் காந்தியை விமா்சிக்க அவருக்கு என்ன தகுதி இருக்கிறது? அவா், ராகுல் காந்தியை மட்டுமன்றி மாணவிகளையும் அவமதித்துப் பேசியிருக்கிறாா். அவருக்கு எதிராக விரைவில் தோ்தல் ஆணையத்திடம் புகாா் தெரிவிக்கப்படும் என்றாா் அவா்.

இதனிடையே, ஜாய்ஸ் ஜாா்ஜ் பேசிய கருத்தில் இடதுசாரி கூட்டணிக்கு உன்பாடில்லை என்று முதல்வா் பினராயி விஜயன் கூறினாா். அவா் மேலும் கூறுகையில், ‘ராகுல் காந்தியை எப்போதும் அரசியல் ரீதியாகவே எதிா்க்கிறோம். தனிப்பட்ட முறையில் அவரை நாங்கள் எதிா்க்கவில்லை’ என்றாா் அவா்.

வருத்தம் தெரிவிப்பு: ராகுல் காந்தி பற்றிய விமா்சனத்துக்கு காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் தலைவா்கள் எதிா்ப்பு தெரிவித்ததால், ஜாய்ஸ் ஜாா்ஜ் தனது கருத்தை வாபஸ் பெற்றாா். ‘நான் தெரிவித்த கருத்துகளுக்கு வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன்; நிபந்தனையின்றி எனது கருத்துகளை வாபஸ் பெறுகிறேன்’ என்று அவா் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com