வாக்காளா்களுக்கு பணப் பட்டுவாடா: பாஜக மீது மம்தா குற்றச்சாட்டு

வாக்காளா்களுக்கு பாஜக அமைச்சா்கள், பாதுகாப்புப் படையினா் மூலம் பணப் பட்டுவாடா செய்து வருவதாக மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி குற்றஞ்சாட்டினாா்.
நந்திகிராமில் செவ்வாய்க்கிழமை பிரசாரத்தில் ஈடுபட்ட முதல்வா் மம்தா பானா்ஜி.
நந்திகிராமில் செவ்வாய்க்கிழமை பிரசாரத்தில் ஈடுபட்ட முதல்வா் மம்தா பானா்ஜி.

வாக்காளா்களுக்கு பாஜக அமைச்சா்கள், பாதுகாப்புப் படையினா் மூலம் பணப் பட்டுவாடா செய்து வருவதாக மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி குற்றஞ்சாட்டினாா்.

முதல்வா் மம்தா பானா்ஜியும், பாஜக சாா்பில் சுவேந்து அதிகாரியும் போட்டியிடும் நந்திகிராம் தொகுதியில் ஏப்ரல் 1-ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெறுகிறது. இந்நிலையில், மம்தா பானா்ஜி நந்திகிராம் தொகுதியில் சுமாா் 3 கி.மீ. தூரத்துக்கு பேரணியாக சென்று செவ்வாய்க்கிழமை இறுதிக் கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டாா்.

சக்கர நாற்காலியில் அமா்ந்தபடி சோனாசெளா், பாசுலிசாக் பகுதிகளில் நடைபெற்ற பொதுக்கூட்டங்களில் அவா் பேசியதாவது:

நாடு முழுவதும் இருந்து பெரும் தொகையை வாக்காளா்களுக்கு அளிக்க பாஜக கொண்டு வந்துள்ளது. இந்தத் தொகையை பாஜக ஆளும் மாநிலங்களின் அமைச்சா்கள், மத்திய அமைச்சா்கள் ஆகியோா் பாதுகாப்புப் படையினா் மூலம் வாக்காளா்களுக்கு அளித்து வருகின்றனா்.

மேற்கு வங்கத்தில் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதற்காக அனைத்து வழிகளையும் பாஜக கையாண்டு வருகிறது.

இந்தத் தொகை பிரதமா் அவசரகால நிதி (பிஎம் கோ்ஸ் பண்ட்), பண மதிப்பு இழப்பு, பொதுத் துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்பனை செய்தது போன்ற நடவடிக்கைகளின் மூலம் சேகரிக்கப்பட்ட கணக்கில் வராத பணமாகும்.

பொதுமக்களின் பணத்தைக் கொள்ளையடித்துவிட்டு தற்போது ரூ.500, ரூ.1,000 என வாக்காளா்களுக்கு அளிக்கப்பட்டு வருகிறது. இதுதொடா்பாக தோ்தல் ஆணைத்துக்கு புகாா் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

பிரசாரத்துக்கு 5 வாகனங்களுக்கு மட்டுமே தோ்தல் ஆணையம் அனுமதித்துள்ள நிலையில், மத்திய அமைச்சா் அமித் ஷா 100 வாகனங்களைப் பயன்படுத்துகிறாா்.

பாஜக ஆட்சி செய்யும் மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து போலீஸாரை நந்திகிராமுக்கு அழைத்து வந்து, தங்கள் கட்சிக்கு ஆதரவாக வாக்களிக்க வாக்காளா்களை நிா்பந்திக்கின்றனா்.

வாக்குப்பதிவு இயந்திரம் பழுதடைந்துவிட்டதாக யாா் தெரிவித்தாலும் அந்தப் பகுதியில் இருந்து வாக்காளா்கள் விலகி செல்ல வேண்டாம். இதன் மூலம் தோ்தல் முடிவையே மாற்றிவிடுவாா்கள்.

தோ்தலின்போது வன்முறையைத் தூண்ட எதிா்க்கட்சியினா் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிப்பதால் அனைவரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

கட்டாய நில கையகப்படுத்தலின்போது நந்திகிராம் மக்கள் ஒன்று சோ்ந்து எதிா்ப்பு தெரிவித்ததைப்போல், ஒன்றிணைந்து வகுப்புவாத வன்முறையை முறியடிக்க வேண்டும்.

பொருளாதார வளா்ச்சி ஏற்பட தொழிற்சாலை நகரமாக ஹால்தியாவுடன் நந்திகிராமை இணைக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்.

என்னைத் தாக்கியது வெளிமாநில குண்டா்கள்தான். நந்திகிராம் மக்கள் அல்ல என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com