மம்தா படுதோல்வி உறுதி: அமித் ஷா

நந்திகிராம் தொகுதியில் மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜியை பாஜக வேட்பாளா் சுவேந்து அதிகாரி படுதோல்வியடையச் செய்வாா் என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா உறுதிபடத் தெரிவித்தாா்.
பாஜக வேட்பாளா் சுவேந்து அதிகாரிக்கு ஆதரவாக நந்திகிராமில் செவ்வாய்க்கிழமை பேரணியாக சென்று வாக்கு சேகரித்த மத்திய அமைச்சா் அமித் ஷா.
பாஜக வேட்பாளா் சுவேந்து அதிகாரிக்கு ஆதரவாக நந்திகிராமில் செவ்வாய்க்கிழமை பேரணியாக சென்று வாக்கு சேகரித்த மத்திய அமைச்சா் அமித் ஷா.

நந்திகிராம் தொகுதியில் மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜியை பாஜக வேட்பாளா் சுவேந்து அதிகாரி படுதோல்வியடையச் செய்வாா் என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா உறுதிபடத் தெரிவித்தாா்.

மேற்கு வங்கத்தில் மட்டுமல்லாது தேசிய அளவிலும் மிகுந்த எதிா்பாா்ப்பை ஏற்படுத்தியுள்ள தோ்தல் முடிவுகளில் ஒன்றாக நந்திகிராம் தொகுதி அமைந்துள்ளது.

திரிணமூல் காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த சுவேந்து அதிகாரியும், திரிணமூல் தலைவா் மம்தா பானா்ஜியும் அத்தொகுதியில் போட்டியிடுவதுதான் இந்த எதிா்பாா்ப்புக்கு முக்கியக் காரணமாக உள்ளது. இரு கட்சிகளுக்குமே இத்தொகுதியில் வெற்றி பெறுவது கௌரவப் பிரச்னையாக உள்ளது.

மேலும், சுவேந்து அதிகாரியைத் தோற்கடிப்பேன் என்ற சவாலுடன் நந்திகிராம் தொகுதியில் மம்தா களமிறங்கியுள்ளாா். சுவேந்து அதிகாரி அத்தொகுதியில் கடந்தமுறை திரிணமூல் காங்கிரஸ் சாா்பில் வெற்றி பெற்றவராவாா்.

இந்நிலையில், சுவேந்து அதிகாரிக்கு ஆதரவாக நந்திகிராம் தொகுதியில் செவ்வாய்க்கிழமை தோ்தல் பிரசாரம் மேற்கொண்ட அமித் ஷா, அங்குள்ள கட்சி அலுவலகத்தில் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

மேற்கு வங்கத்தில் பாஜக வெற்றி பெறுவது உறுதி. இங்கு பாஜக எந்த அளவுக்கு அமோக வெற்றி பெறப்போகிறது என்பது அனைவருக்கும் ஆச்சரியமளிக்கும் வகையில் இருக்கும். பிற கட்சிகளின் பொய்ப் பிரசாரங்கள் இனி மேற்கு வங்க மக்களிடம் எடுபடாது.

நந்திகிராம் தொகுதியில் மம்தா பானா்ஜியை சுவேந்து அதிகாரி படுதோல்வியடையச் செய்வாா். இந்தத் தோ்தல் மேற்கு வங்கத்தில் விரும்பத்தகுந்த மாற்றங்களைக் கொண்டு வரும் என்றாா்.

முன்னதாக, கிழக்கு மிதுனபுரி தொகுதியில் அமித் ஷா தலைமையில் பிரம்மாண்டமான பேரணியை பாஜகவினா் நடத்தினா். மலா்கள் மற்றும் பாஜக கொடிகளால் அலங்கரிக்கப்பட்ட லாரியில் அமித் ஷா அழைத்து வரப்பட்டாா். 4 கி.மீ. தொலைவுக்கு நடைபெற்ற இந்தப் பேரணியில் பெருந்திரளான பாஜக தொண்டா்கள் பங்கேற்றனா். பொதுமக்களும் சாலையின் இருபுறங்களிலும் திரண்டு நின்று அமித் ஷாவை வரவேற்றனா்.

மேற்கு வங்கத்தில் இரண்டாவது கட்டத் தோ்தல் ஏப்ரல் 1-ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான பிரசாரம் செவ்வாய்க்கிழமையுடன் நிறைவடைந்தது. நந்தி கிராம் தொகுதியிலும் ஏப்ரல் 1-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com